Published:Updated:

பட்டுக்கோட்டை: நிவர் புயல் அச்சம்; வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்ற தாய், மகள்! கொள்ளையால் அதிர்ச்சி

கொள்ளை நடந்த வீடு
கொள்ளை நடந்த வீடு

பட்டுக்கோட்டை அருகே தாயும் மகளும் நிவர் புயல் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற பயத்தால் வீட்டை பூட்டிவிட்டு, தூங்குவதற்காக உறவினர் வீட்டுக்குச் சென்ற நிலையில், மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் ஆகியவற்றைத் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகிலுள்ள தொக்காலிக்காடு ஊராட்சி, கீழக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (50). இவர் மனைவி சரஸ்வதி(40). இவர்களுடைய மகள் பாக்கியலட்சுமி (19). பன்னீர்செல்வம் வெளிநாட்டில் வேலை பார்த்துவருகிறார். சரஸ்வதியும் பாக்கியலட்சுமியும் தொக்காலிக்காட்டில், தங்களுக்குச் சொந்தமான தென்னந்தோப்புக்கு நடுவே அமைந்திருக்கும் கூரை வீட்டில் தனியாக வசித்துவருகின்றனர்.

நிவர் புயல் காரணமாக, தஞ்சை மாவட்டத்தில் காற்றுடன்கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது. 2018-ல் வீசிய கஜா புயல் பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. பெரும் வாழ்வாதரமாக இருந்த தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. வீடுகள் மீதும் மரங்கள் விழுந்தன. இதனால் ஏராளமான வீடுகள் சேதமடைந்ததுடன், உயிரிழப்புகளும் ஏற்பட்டன. கஜா புயல் ஏற்படுத்திச் சென்ற சுவடுகள் யார் மனதைவிட்டும் இன்னும் அகலவில்லை.

கொள்ளை நடந்த வீடு
கொள்ளை நடந்த வீடு

இந்தநிலையில், நிவர் புயல் வீசும் என்ற தகவல் வெளியானதுமே இந்தப் பகுதியில் உள்ளவர்கள் பெரும் அச்சமடைந்தனர். தென்னந்தோப்புக்கு நடுவே கூரை வீடுகளில் குடியிருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனர். இதேபோல் நேற்று முன்தினம் இரவு நிவர் புயல் பாதிப்பை உண்டாக்குமோ என்ற அச்சத்திலும், பாதுகாப்பு கருதியும் சரஸ்வதியும் பாக்கியலட்சுமியும் தங்கள் வீட்டைப் பூட்டிவிட்டு அருகிலுள்ள உறவினர் வீட்டுக்கு உறங்கச் சென்றுவிட்டனர்.

நேற்று காலை வீட்டுக்கு வந்துபோது,வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த சரஸ்வதி, வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவிலிருந்த இரண்டு பவுன் நகை, ரூ.10,000 பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

``புயல் வீசுவதால் தென்னை மரங்கள் வீட்டின் மேல் விழுந்துவிடும் என்ற பயத்தால் உறவினர் வீட்டுக்கு உறங்கச் சென்றோம். புயல் வீசக்கூடிய இந்த நேரத்திலும், மர்ம நபர்கள் சிலர் கொஞ்சம்கூட மனிதாபிமானம் இல்லாமல், வீட்டிலிருந்த நகையையும் அத்தியாவசியத் தேவைக்கு வைத்திருந்த பணத்தையும் திருடிச் சென்றிருக்கிறார்கள்’’ என்று விஷயம் கேள்விப்பட்டு வீட்டுக்கு வந்தவர்களிடம் சரஸ்வதி புலம்பிக்கொண்டிருந்தது வேதனையை ஏற்படுத்தியது.

நிலப் பகுதியில் நிவர் புயல்; 6 மணிநேரத்துக்குத் தாக்கம்! - 4 மாவட்டங்களில் மிகக் கனமழை

இதையடுத்து சரஸ்வதி அதிராம்பட்டினம் காவல்நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். அதன்பேரில் அதிராம்பட்டினம் இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் வழக்கு பதிந்து விசாரணை செய்துவருகிறார். புயலால் ஏற்பட்டிருக்கும் அச்சத்தைப் பயன்படுத்தி நடைபெற்ற இந்தத் திருட்டுச் சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு