`அந்த ஜீப் வந்து 45 நாள்தான் ஆகுது!' -இரவில் டி.எஸ்.பி-க்கு அதிர்ச்சி கொடுத்த போதை நபர்

மதுபோதையில் வாகனம் ஓட்டினார் என வழக்கு பதிவு செய்தால், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் நேரத்தில் மது எப்படிக் கிடைத்தது என்பது போன்ற சிக்கல் வரும் என போலீஸாரும் கருதினர்.
பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டையில், போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது வேகமாக வந்த கார் ஒன்று, சாலையோரத்தில் நின்ற டிஎஸ்பி-யின் கார் மீது மோதியது. இதனால், காரின் முன்பக்கம் சேதமடைந்ததுடன் காவலர் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது. விபத்து ஏற்படுத்தியவர் முக்கியஸ்தர் என்பதால், அவரைக் காப்பாற்ற முயற்சிகள் நடப்பதாகப் புகார் எழுந்துள்ளதால், இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட்டுக்கோட்டையில் பொறுப்பு டிஎஸ்பியாக இருப்பவர் சுப்ரமணியன். இவர் தலைமையில், தம்பிக்கோட்டை பைபாஸ் சாலையில் அமைக்கப்பட்டுள்ள செக்போஸ்ட்டில், போலீஸார் நேற்று இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சாலையோரத்தில் டிஎஸ்பி-யின் கார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து வாகனமும் நிறுத்தப்பட்டிருந்தன. அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி டிஎஸ்பி சுப்ரமணியன் சோதனை செய்து கொண்டிருந்தார்.
அப்போது வேகமாக வந்த கார் ஒன்று, சாலையோரத்தில் நின்ற டிஎஸ்பி-யின் காரில் மோதியது. இது, டிஎஸ்பி உட்பட அனைத்து போலீஸாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன்பிறகு, விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்ததுடன், கார் ஓட்டிவந்த நபரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துவந்தனர்.
இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம், ``டிஎஸ்பி-யின் பயன்பாட்டுக்கு அரசு 45 நாள்களுக்கு முன்னர்தான் இந்தப் புதிய காரை வழங்கியது. இந்தநிலையில், நேற்று இரவு 11.30 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்த மற்றொரு கார், டிஎஸ்பி-யின் கார் மீது மோதியதால் கார் சேதமடைந்ததுடன், அங்கு பணியிலிருந்த எஸ்எஸ்ஐ முருகேசன் என்பவருக்கும் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, அவரை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தோம். மேலும், விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டிவந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதுடன், காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில், காரை ஓட்டிவந்த நபர் மது போதையில் இருந்ததாகவும் அவர் தம்பிக்கோட்டையைச் சேர்ந்த முக்கியஸ்தர் என்றும் சொல்லப்பட்டது. இதனால் அவர் தரப்பில், எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, சேதமடைந்த காரை சரிசெய்து தருவதாகவும், வழக்கு பதிய வேண்டாம் என்றும் பேசியுள்ளனர்.
மதுபோதையில் வாகனம் ஓட்டினார் என வழக்குப் பதிந்தால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் நேரத்தில் மது எப்படி கிடைத்தது என்பது போன்ற சிக்கல் வரும் என போலீஸாரும் கருதினர். அதனால் அந்த நபர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததாக வழக்கு பதிந்தால், அந்த முக்கியஸ்தரையும் காப்பாற்றியது போல் ஆகும், நமக்கும் சிக்கல் இருக்காது என நினைத்தனர்.

இந்தத் தகவல், எஸ்.பி மகேஷ்வரன் கவனத்திற்குச் சென்றது. இதனால் கோபமடைந்த அவர், `வாகனச் சோதனையில் இருந்த கார் மீது மோதி விபத்து ஏற்படுத்தியிருக்கிறார். செக் போஸ்ட் இருக்கிறது என்பதை அறிந்தும் ஏன் அவ்வளவு வேகமாக அவர் காரில் வர வேண்டும்... போலீஸாருக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் என்னாவது?
எந்த தயவும் பார்க்காமல், காரை ஓட்டிவந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உத்தரவிட்டார். இதையடுத்து, காரை ஓட்டி வந்த இளைஞரான விஜயகுமார் (37) என்பவர்மீது வழக்குப் பதிய இருப்பதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து டிஎஸ்பி சுப்ரமணியனிடம் பேசினோம், ``வாகனச் சோதனையில் இருந்தபோது, எதிரே வந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து என் கார் மீது மோதியது உண்மைதான். அவர் மதுபோதையில் இருந்தாரா என்பதை அறிய மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவு வந்த பிறகே அவர் போதையில் இருந்தாரா என்பது தெரியவரும். இதற்குக் காரணமானவர் மீது வழக்குப் பதிந்து நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.