பட்டுக்கோட்டை அருகே பழமையான கோயில் சிலைகள் விற்பனை செய்வதற்கு முயற்சி நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்த நிலையில் 12 மணி நேரத்தில் அந்தக் கும்பலைக் கைது செய்ததுடன், சிலைகளையும் பறிமுதல் செய்த போலீஸ் டீமை உயர் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

பட்டுக்கோட்டை பகுதியில் குற்ற செயல்களை தடுப்பதற்காக நகர காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு தலைமையில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த இளைஞர் ஒருவரை, போலீஸார் பிடித்து விசாரித்தனர். மேலும், அவருடைய செல்போனை வாங்கி ஆய்வு செய்தனர். அதில், இரண்டு பழமையான ஐம்பொன் சிலைகளின் போட்டோ இருந்தது தெரியவந்தது.
`இது என்ன சிலைகள்?’ என அந்த இளைஞரிடம் போலீஸார் கேட்டுள்ளனர். அதற்கு, திருச்சி பகுதியிலிருந்து வந்த கும்பல் ஒன்று, இந்த சாமி சிலைகள் விற்றுக் கொடுத்தால் கமிஷன் தருவதாகக் கூறியதாகத் தெரிவித்துள்ளார். போலீஸார், இதனை உடனேயே உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றனர்

இதையடுத்து மாவட்ட எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின்பேயரில் பட்டுக்கோட்டை காவல்துறை காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் மேற்பார்வையில், நகர காவல்துறை உதவி ஆய்வாளர் தென்னரசு தலைமையில் சிலை கடத்தல் கும்பலைப் பிடிக்கவும், சிலைகளை மீட்கவும் தனிப்படை அமைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை அருகே உள்ள புக்கரம்பை கிராமத்தில் போலீஸ் டீம், ரகசிய விசாரணை மேற்கொண்டனர். அப்போது இரண்டு பழமையாக சாமி சிலைகளை விற்க முயன்ற கும்பலை பிடித்ததுடன், அவர்களிடமிருந்த சிலைகளையும் பறிமுதல் செய்தனர். தனிப்படை அமைக்கப்பட்டு மொத்தமே 12 மணி நேரத்தில் இதனை செய்த போலீஸ் டீமை உயர் அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசுவிடம் பேசினோம். ``ரோந்து பணியின் போது புக்கரம்பை கிராமத்தில் கோயில் சிலைகளைக் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து, உயர் அதிகாரிகளின் உத்தரவில் விசாரணை மேற்கொண்டோம். இதில், அதே பகுதியைச் சேர்ந்த சரவணன், பிரான்மலை மற்றும் கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியைச் சேர்ந்த ஆண்டிச்சாமி என்கிற ராஜா ஆகிய 3 பேரைக் கைது செய்தோம்.
அத்துடன் அவர்களிடமிருந்து ஒரு அடி உயரமும் நான்கு கிலோ எடையும் கொண்ட நாராயணி சிலை மற்றும் முக்கால் அடி உயரமும், இரண்டரை கிலோ எடையும் கொண்ட அனுமன் என இரண்டு ஐம்பொன் சிலைகளை பறிமுதல் செய்தோம். கைப்பற்றப்பட்ட சிலைகளின் மதிப்பு, எத்தனை ஆண்டுகள் பழமையானது என்பது குறித்த விவரங்கள் தொல்லியல் துறை ஆய்வுக்குப் பிறகே தெரியவரும்.மேலும் கைது செய்யப்பட்டவர்களை கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்’’ என்றார்.