Published:Updated:

`கஞ்சா, கந்துவட்டியோடு மணல் திருட்டு!' -பட்டுக்கோட்டை டிஎஸ்பி -யின் பல்ஸ் பார்க்கும் மாமூல் போலீஸ்

டிஎஸ்பி புகழேந்தி கணேஷ்
டிஎஸ்பி புகழேந்தி கணேஷ்

சிசிடிவி கேமராக்கள் இருக்கிறதே தவிர, எதுவும் வேலை செய்வதில்லை. கந்துவட்டிக் கும்பலின் அட்டகாசம் தாங்க முடியவில்லை குறிப்பாக காட்டாறுகளில் நடைபெறும் மணல் திருட்டு சம்பவங்கள் எல்லைமீறிப் போகின்றன.

பட்டுக்கோட்டையில் கஞ்சா விற்பனை, வீடுகளில் சீட்டாட்ட கிளப் நடத்துதல், மணல் திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்கள் அதிக அளவில் நடந்துகொண்டிருப்பது, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள டிஎஸ்பி-யின் முன் உள்ள பெரும் சவாலாக பார்க்கப்படுகிறது.

டி.எஸ்.பி புகழேந்தி கணேஷ்
டி.எஸ்.பி புகழேந்தி கணேஷ்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில், கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக தனி டிஎஸ்பி இல்லாததால் பொறுப்பு டிஎஸ்பி-க்களே பணிகளைக் கவனித்துவந்தனர். இதனால் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், புதிய டிஎஸ்பி-யாக புகழேந்தி கணேஷ் பொறுப்பேற்றிருக்கிறார். இவர், ஏற்கெனவே ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையில் டிஎஸ்பி-யாகப் பணிபுரிந்துவிட்டு டிரான்ஸ்ஃபரில் இங்கு வந்திருக்கிறார்.

நேரடியாக பதவிக்கு வந்தவர் என்பதால் கண்டிப்பாகவும் சிறப்பாகவும் பணிகளைச் செய்பவர் என்ற பெயரை எடுத்திருக்கிறார். இந்த நிலையில், பட்டுக்கோட்டையில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடந்துவருவதால், அதைத் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை

இதுகுறித்து, நம்மிடம் பேசிய பட்டுக்கோட்டை பொதுமக்கள், ``வீதிக்கு வீதி கஞ்சா விற்பனை நடைபெற்றுவருகிறது. பள்ளி மாணவர்கள்கூட கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாகி சீரழிந்து வருகின்றனர். வீடுகளில் சட்டத்துக்கு விரோதமாக சீட்டாட்ட கிளப் நடந்துவருகிறது. கள்ளச்சாராய விற்பனையும் தொடங்கியுள்ளது. மூன்று சீட்டு லாட்டரி விற்பனையும் கொடிகட்டிப் பறக்கிறது.

`என்னைப் பற்றிக் குறைகூறிய அந்தத் தம்பி!' -பட்டுக்கோட்டை நிர்வாகி புகாருக்குப் பழநிமாணிக்கம் பதில்

போக்குவரத்து நெரிசல்கள் என்பது பட்டுக்கோட்டையின் தலைவிதியாகவே மாறிவிட்டது. மேலும், பெரும் சத்தம் எழுப்பும் ஒலி பெருக்கியை கட்டிக்கொண்டு பைக் ரேஸ் ஓட்டுவதும் அதிகரித்துள்ளது. சிசிடிவி கேமராக்கள் இருக்கிறதே தவிர, எதுவும் வேலை செய்வதில்லை. கந்துவட்டிக் கும்பலின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. குறிப்பாக, காட்டாறுகளில் நடைபெறும் மணல் திருட்டு சம்பவங்கள் எல்லைமீறிப்போகின்றன.

போக்குவரத்து நெரிசல்
போக்குவரத்து நெரிசல்

ஊர்க்காவல்படையினர், இரவு நேரங்களில் வாகனத் தணிக்கை என்கிற பெயரில் வாகனம் ஓட்டுபவர்களிடம் பணம் பறிக்கின்றனர். காவல் நிலையங்களில் கொடுக்கப்படும் புகார்களுக்கு ரசீது கொடுப்பதில்லை. இரண்டு சக்கர வானங்கள் காணாமல் போனால் வழக்குப்பதிவு செய்வதில்லை. இவற்றையெல்லாம் புதிய டிஎஸ்பி தடுத்து, உரிய நடவடிக்கை எடுத்து புதிய ஊராக மாற்ற வேண்டும்" என்றனர்.

டிஎஸ்பி புகழேந்தி கணேஷிடம் பேசினோம். `` 100 சதவிகிதம் எந்த பாரபட்சமும் இல்லாமல் சமூக விரோத, சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும். நான் பொறுப்பேற்று நான்கு நாள்கள்தான் ஆகின்றன. முதலில் என்னென்ன பிரச்னைகள் இருக்கின்றன என ஸ்டடி செய்து கொண்டிருக்கிறேன். 24 மணி நேரமும் பொதுமக்கள் என்னுடைய அலைபேசியில் தொடர்புகொண்டு பிரச்னைகள் குறித்து தெரிவிக்கலாம். குற்றச் சம்பவங்களைத் தடுப்பதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

போலீஸ் டி.எஸ்.பி
போலீஸ் டி.எஸ்.பி

புதிய டிஎஸ்பி பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, மணல் திருட்டு உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களுடன் கூட்டு வைத்துள்ள போலீஸார் சிலர், `தற்காலிகமாக உங்க நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ளுங்கள். டிஎஸ்பி-யின் பல்ஸ் பார்த்துவிட்டு சொல்கிறோம், அதன்பிறகு மீண்டும் தொடங்கலாம்" எனக் கூறியிருப்பதாகவும் தகவல் பரவிவருகிறது.

அடுத்த கட்டுரைக்கு