Published:Updated:

பெற்றோர் கடனை அடைக்க ஏலம்விடப்படும் மகள்கள்... ராஜஸ்தானில் கொடூரம் - வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்

ஏலம்விடப்படும் மகள்கள்

ராஜஸ்தானில் கடனை அடைக்க பெற்றோர் தங்கள் மகளை விற்பனை செய்யும் சம்பவங்கள் நடந்துவருவது குறித்து தேசிய பெண்கள் ஆணையம் விசாரணை நடத்த ஆரம்பித்திருக்கிறது.

பெற்றோர் கடனை அடைக்க ஏலம்விடப்படும் மகள்கள்... ராஜஸ்தானில் கொடூரம் - வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்

ராஜஸ்தானில் கடனை அடைக்க பெற்றோர் தங்கள் மகளை விற்பனை செய்யும் சம்பவங்கள் நடந்துவருவது குறித்து தேசிய பெண்கள் ஆணையம் விசாரணை நடத்த ஆரம்பித்திருக்கிறது.

Published:Updated:
ஏலம்விடப்படும் மகள்கள்

நாட்டில் இன்னும் சில இடங்களில் பாலியல் தொழில் சட்டபூர்வமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதில் ஈடுபடுத்தப்படும் பெண்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து அழைத்துவரப்பட்டவர்கள். அவர்களில் சிலரை அவர்களின் பெற்றோரே அனுப்பிவைத்திருக்கின்றனர் என்பதுதான் வேதனையின் உச்சம்.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடனுக்காகப் பெண்களை ஏலத்தில்விட்டு கடனை அடைக்கும் கொடூரச் சம்பவங்கள் நடந்துவருகின்றன. ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பில்வாரா மாவட்ட கிராமங்களில் கடன் வாங்குபவர்கள் சரியான நேரத்தில் அதைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லையெனில், அவர்கள் தங்கள் மகளை ஏலத்தில்விட்டு, அதில் கிடைக்கும் பணத்தில் கடனை அடைக்கும் அவலநிலை இருந்துவருகிறது. இங்கு கடன் வாங்குபவர்கள் மற்றும் கடன் கொடுத்தவர்கள் இடையே பிரச்னை ஏற்பட்டால் உடனே காவல் நிலையத்துக்குச் செல்வது கிடையாது. மாறாக, பஞ்சாயத்துக்குப் பிரச்னையைக் கொண்டு செல்கின்றனர். அங்கு கடன் வாங்கியவர்கள், கடனை எப்படி அடைப்பது என்பது குறித்து பஞ்சாயத்து நடக்கும். இதில் கடன் வாங்கியவர்களின் மகள், சகோதரிகளை ஏலத்தில்விடுவார்கள்.

பெற்றோர் கடனை அடைக்க ஏலம்விடப்படும் மகள்கள்... ராஜஸ்தானில் கொடூரம் - வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்

ஏலத்தில் கலந்துகொண்டு ஏலம் எடுப்பவர்கள் கொடுக்கும் பணத்தைக்கொண்டு கடன் தொகையை அடைப்பார்கள். பெண்களை ஏலத்தில் எடுப்பவர்கள் ஸ்டாம்ப் பேப்பரில் எத்தனை ஆண்டுகள் அந்தப் பெண்ணைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள் என்பது குறித்து பஞ்சாயத்தில் எழுதிக்கொடுப்பார்கள். அந்தப் பெண்கள் பாலியல் தொழிலுக்காக உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், டெல்லி, மும்பை, வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்படுவார்கள். இந்தப் பெண்கள் பலமுறை விற்பனை செய்யப்படுவார்கள். ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு அந்தப் பெண்களை ஒப்பந்த அடிப்படையில் ஏஜென்ட்டுகள் வேறு ஒருவருக்கு வழங்குவது வழக்கம். சில நேரங்களில் கடனுக்காக நடத்தப்படும் ஏலத்தில் பெண்கள் விற்பனையாகவில்லையெனில், கடன் வாங்கியவரின் மனைவி பாலியல் வன்கொடுமை செய்யப்படும் கொடூரங்களும் நடக்கின்றன என்கிறார்கள்.

இது குறித்து ஏலத்தில் தன் மகளை இழந்த ஒருவர் கூறுகையில், ``ரூ.15 லட்சம் கடன் வாங்கியிருந்தேன். இந்தக் கடனுக்காக முதலில் எனது சகோதரியை விற்பனை செய்தேன். அடுத்து மூன்று இளம் மகள்களையும் விற்பனை செய்துவிட்டேன். அப்படியிருந்தும் கடன் தீரவில்லை. இதனால் கடைசியாக என் 12 வயது மகளையும் 8 லட்சத்துக்கு, 15 ஆண்டுகளுக்கு விற்பனை செய்திருக்கிறேன். ஆனாலும் இன்னும் கடன் தீரவில்லை” என்று தெரிவித்தார். இது குறித்து மற்றொருவர் கூறுகையில், ``என் மனைவியின் சிகிச்சைக்காக முதலில் 6 லட்சம் கடன் வாங்கினேன். ஆனால் என் மனைவி இறந்துவிட்டார். அடுத்து என் தாயாரின் சிகிச்சைக்காக 6 லட்சம் கடன் வாங்கினேன். இந்தக் கடனுக்காக என் இளைய மகளை 6 லட்சத்துக்கு விற்பனை செய்தேன். அவர்கள் அவளை ஆக்ராவுக்குக் கொண்டு சென்றார்கள். அவளை மூன்று முறை மறு விற்பனை செய்துள்ளனர். நான்கு முறை கர்ப்பம் அடைந்திருக்கிறாள்” என்று கண்ணீர்விட்டார். இந்த அவலநிலை குறித்து Bhaskar என்னும் இந்தி ஊடகம் ஒன்று விரிவாக ஆய்வுசெய்து செய்தி வெளியிட்டது. அதன் பிறகே இது வெளிச்சத்துக்கு வந்தது.

பாலியல் கொடூரம்
பாலியல் கொடூரம்
சித்திரிப்புப் படம்

இந்தச் சம்பவங்களின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடத்த தேசிய பெண்கள் ஆணையம் இரண்டு பேர்கொண்ட கமிட்டியை அமைத்திருக்கிறது. அதோடு பெண்கள் கமிஷன் தலைவர் ரேகா சர்மா, ராஜஸ்தான் மாநிலத் தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதி, குற்றவாளிகள் மீது நான்கு வாரங்களில் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறர். இது தொடர்பாக ராஜஸ்தான் டிஜிபி-க்கும் கடிதம் எழுதியிருக்கிறார். தேசிய மனித உரிமை கமிஷனும், இது தொடர்பாக மாநில அரசுக்குக் கடிதம் எழுதி இருக்கிறது. ஆனால் பெண்கள் விற்பனை செய்யப்படுவதாக வெளியாகியிருக்கும் செய்தியை ராஜஸ்தான் அமைச்சர் பிரதாப் மறுத்திருக்கிறார். எனினும், இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரித்துவருகிறோம் என்று தெரிவித்திருக்கிறார்.