Published:Updated:

ஏரல்:`எப்படித்தான் அந்தப் பாவிக்குக் கொல்ல மனசு வந்துச்சோ?!’ - எஸ்.ஐ பாலுவை நினைத்து உருகும் கிராமம்

இறுதி ஊர்வலம்
இறுதி ஊர்வலம்

``ஏரல் ஸ்டேஷன்ல இவருக்குதான் முதலில் கொரோனா தொற்று ஏற்பட்டுச்சு. சிகிச்சை முடிஞ்ச மறுநாளே டூட்டிக்கு கிளம்பிட்டார். ஊருலயும் சரி, ஸ்டேஷன்லயும் சரி அவர் அதிர்ந்துகூடப் பேசினதில்லை. ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க வர்றவங்ககிட்டயும் கறார் காட்டுனதில்லை” என்றனர் ஊர் மக்கள்.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்துவந்தவர் பாலு. அதே காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்துவந்த பொன் சுப்பையாவும் இவரும் ஏரல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். (கடந்த 31-ம் தேதி) இரவு 9:30 மணிக்கு ஏரல் பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள பானிபூரி கடையில், தீப்பாச்சி கிராமத்தைச் சேர்ந்த முருகவேல், ``எனக்கு சிக்கன் ரைஸ் வேணும்” என மதுபோதையில் தகராறு செய்தபோது எஸ்.ஐ பாலு நேரடியாகச் சென்று முருகவேலை எச்சரித்து அனுப்பியிருக்கிறார்.

உயிரிழந்த எஸ்.ஐ., பாலு
உயிரிழந்த எஸ்.ஐ., பாலு

அடுத்த ஒரு மணி நேரத்தில் பஸ் ஸ்டாண்ட் வெளிப்பகுதியிலுள்ள மற்றொரு ஹோட்டலில் தகராறு செய்தபோது, எஸ்.ஐ பாலு லோடு ஆட்டோவில் வந்த முருகவேலை அப்படியே ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று லோடு ஆட்டோவை நிறுத்தச் சொல்லிவிட்டு எச்சரித்ததுடன், மறுநாள் காலையில் ஆர்.சி புக், இன்ஷூரன்ஸ், லைசன்ஸின் ஒரிஜினல்களை எடுத்து வரச்சொல்லி அனுப்பியிருக்கிறர். மீண்டும் நள்ளிரவு சுமார் 1 மணிக்கு அவரின் வீட்டின் உரிமையாளர் குமரேசனின் லோடு ஆட்டோவில் கொற்கை விலக்குப் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த முருகவேலை மீண்டும் எச்சரித்து அனுப்பினார்.

மதுபோதையின் உச்சத்திலிருந்த முருகவேல், எஸ்.ஐ பாலு, காவலர் பொன் சுப்பையா இருவரும் சென்ற பைக்கை பின் தொடர்ந்து வேகமாக மோதினார். இதில், இருவரும் பலத்த காயம் அடைந்தனர். மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே எஸ்.ஐ பாலு உயிரிழந்தார். காவலர் பொன் சுப்பையா சிகிச்சை பெற்றுவருகிறார். எஸ்.ஐ பாலுவின் உடல் அவரது சொந்த ஊரான முடிவைத்தானேந்தலுக்குக் கொண்டுவரப்பட்டது. அங்கு 30 துப்பாக்கிக்குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு, அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

மனைவி பேச்சியம்மாள், மகள் ஜெயதுர்க்கா வேணி
மனைவி பேச்சியம்மாள், மகள் ஜெயதுர்க்கா வேணி

ஊர் மக்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார்கள். எஸ்.ஐ பாலுவுக்கு பேச்சியம்மாள் என்ற மனைவியும், ஜெயதுர்க்கா வேணி என்ற மகளும், அருள் வேலாயுதம் என்ற மகனும் இருக்கின்றனர். மகள் திருமணமாகி உள்ளூரில் வசித்துவருகிறார். மகன், அரியலூரில் கனரா வங்கியில் வேலை செய்துவருகிறார். சோகம் பரவிக்கிடந்த முடிவைத்தானேந்தல் கிராமத்திலுள்ள பாலுவின் வீட்டுக்குச் சென்றோம். உயிரிழந்த கணவரை நினைத்து மூலையில் கண்ணீருடன் அமர்ந்திருந்தார் பாலுவின் மனைவி பேச்சியம்மாள்.

அவருக்கு ஆறுதல் கூறிவிட்டுப் பேசினோம், ``நைட்ல டூட்டிக்குப் போகும்போதுகூட நான் வர முன்ன பின்ன ஆகும். மாத்திரையைப் போட்டுட்டு ரெஸ்ட் எடு”ன்னு சொல்லிட்டுப் போனாரு. ஆனா, என் குலசாமியை உடம்பாத்தான் பார்த்தேன். இனிமேல் நான் மட்டும் இருந்து என்ன செய்யப்போறேன்” என விம்மி அழுதார். ஊர் மக்களிடம் பேசினோம், ``இந்த முடிவைத்தானேந்தல் ஊருக்கு ஒரு சிறப்பு உண்டு. வீட்டுக்கு ஒருத்தர் மிலிட்டரியில சர்வீஸ்ல இருப்பாங்க.

கதறி அழும் மனைவி பேச்சியம்மாள், மகள் ஜெயதுர்க்கா வேணி
கதறி அழும் மனைவி பேச்சியம்மாள், மகள் ஜெயதுர்க்கா வேணி

இல்லேன்னா, போலீஸ் டிபார்ட்மென்ட்ல இருப்பாங்க. எங்க ஊருக்கே ’போலீஸ்காரங்க ஊரு’ன்னுதான் பேரு. பாலு அண்ணன் ஊருல அமைதியான ஆளு. அவரோட அப்பாவும் ஏட்டா இருந்து ரிட்டையர்டு ஆனவர். அப்பாவை மாதிரி தானும் போலீஸ் ஆகணும்கிற கனவுல இருந்தார். காவலரா வேலைக்குச் சேர்ந்து ரைட்டர், எஸ்.எஸ்.ஐ-யா இருந்து கடைசியா எஸ்.ஐ-யா பதவி உயர்வுல வேலை பார்த்தவர். மூணு வருசத்துக்கு முன்னால ஆறுமுகநேரி போலீஸ் ஸ்டேஷன்ல வேலை பார்த்தப்போ ஒரு பைக் விபத்துல கால்கள் முறிஞ்சுடுச்சு.

அவரோட ரெண்டு காலுலயும் பிளேட்வெச்சு ஆபரேஷன் செஞ்சிருக்காங்க. ரொம்ப சிரமப்பட்ட அவர் கொஞ்சம் கொஞ்சமாத் தேறி வந்தார். ``நீங்க வேலை பார்த்தது போதும். இந்த வேலை வேணாம்ப்பா. உங்க உடல்நிலைதான் எங்களுக்கு முக்கியம்னு பிள்ளைகள் சொன்னப்போகூட, `போலீஸ் வேலையில இதெல்லாம் சகஜம். எங்க அப்பாவை மாதிரியே நானும் நல்லபடியா சர்வீஸை முடிக்கணும்”னு சொன்னார். கொரோனா காலத்துலயும் சிறப்பா டூட்டி பார்த்தார்.

30 குண்டுகள் முழங்க நடந்த இறுதி அஞ்சலி
30 குண்டுகள் முழங்க நடந்த இறுதி அஞ்சலி

ஏரல் ஸ்டேஷன்ல முதலில் இவருக்குத்தான் கொரோனா தொற்று ஏற்பட்டுச்சு. சிகிச்சை முடிஞ்ச மறுநாளே யூனிஃபார்மை மாட்டிக்கிட்டு டூட்டிக்கு கிளம்பிட்டார். ஊருலயும் சரி, ஸ்டேஷன்லயும் சரி அவர் அதிர்ந்துகூடப் பேசினதில்லை. சிரிச்ச முகமா இருப்பார் பாலு அண்ணன். ஸ்டேஷனுக்குப் புகார் கொடுக்க வர்றவங்ககிட்டயும் கறார் காட்டுனதில்லை. லத்தியால அடிச்சுக் கண்டிச்சதைவிட, `உன் அப்பா இடத்துல இருந்து சொல்றேன். அண்ணன் இடத்துல இருந்து சொல்றேன்’னு புத்திமதி சொல்லித்தான் பார்த்திருக்கோம்.

ஏரல் சுற்று வட்டாரப் பகுதிகள்ல கஞ்சா நடமாட்டம் அதிகமா இருக்கு. அதை ஓரளவு கட்டுப்படுத்தினதுல பாலு அண்ணனோட பங்கு அதிகம் உண்டு. ஸ்டேஷன் லிமிட்டுக்குள்ள எங்கே, என்ன பிரச்னைன்னாலும், மத்த போலீஸை எதிர்பார்க்காம தகவல் கிடைச்சதும் உடனே கிளம்பிடுவார்.

பாலுவின் வீடு
பாலுவின் வீடு

எங்கவூர்ல இளசுகள் போலீஸ் வேலைக்குப் போயி யூனிபார்ஃம் மாட்டுறதுக்கு பாலு அண்ணனும் முக்கியக் காரணம். அவர்தான் போலீஸ் வேலையில சேர்றதுக்கு அதிக ஊக்கமும் தன்னம்பிக்கையும் கொடுத்தவர். இப்படிப்பட்ட மனுசனை லோடு ஆட்டோவால மோதிக் கொல்லணும்னு அந்தப் பாவிக்கு எப்படித்தான் மனசு வந்துச்சோ...” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு