Published:Updated:

` `நகை வேணாம்; பொண்ணு மட்டும் கொடுங்க’னு சொன்னாங்க; இப்போ கொன்னுட்டாங்க!’ - கொதிக்கும் உறவினர்கள்

பெரம்பலூர் கலெக்டர் ஆபீஸ்
பெரம்பலூர் கலெக்டர் ஆபீஸ்

எங்களுடைய தகுதிக்கேற்ப எங்க பொண்ணுக்கு என்ன செய்யணுமோ அதைச் செய்து அனுப்பினோம்.

`` `நகை வேண்டாம். உங்க பெண்ணைக் கொடுத்தால் போதும்’ என்று கூறி எனது மகளைத் திருமணம் செய்து அழைத்துச் சென்றார்கள். ஆனால் இன்று எனது மகளை `அதிக நகை போட்டு வரவில்லை’ என்று அடித்தே கொன்றுவிட்டனர். என் மகளின் இறப்புக்கு நீதி கிடைக்க வேண்டும’’ என்று பெண்ணின் பெற்றோரும் உறவினர்களும் பெரம்பலூர் மருத்துவமனையில் மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர்
பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள கொளப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். பொறியாளரான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த நர்ஸிங் படித்துள்ள விஜயலட்சுமிக்கும் ஒரு வருடத்துக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. பாலசுப்பிரமணியனும், அவரது தம்பி ராதாகிருஷ்ணனும் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தனர்.இந்நிலையில் ராதாகிருஷ்ணனின் திருமணத்துக்காக அவரும், அண்ணன் பாலசுப்பிரமணியனும் கடந்த மார்ச் மாதம் சொந்த ஊருக்கு வந்திருந்தனர். பின்னர் திருமணம் முடிந்தும், கொரோனா ஊரடங்கால் மீண்டும் துபாய்க்குச் செல்லாமல் அவர்கள் வீட்டிலேயே இருந்தனர்.

இந்தநிலையில், பாலசுப்பிரமணியனின் மனைவி விஜயலட்சுமி விஷம் குடித்தார். அரியலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இது தொடர்பாக, குன்னம் போலீஸார் விசாரணை நடத்திவந்தனர். சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்
போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்

போராட்டத்தில் ஈடுபட்ட விஜயலட்சுமியின் உறவினர்களிடம் பேசினோம்.``எங்கள் குடும்பம் ஏழ்மையான குடும்பம். கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் பாலகிருஷ்ணனின் அம்மா, அப்பா இருவரும், `எங்கே தேடியும் பொண்ணு கிடைக்கவில்லை. உங்கள் பொண்ணைக் கொடுத்தால் போதும்' என்று சொல்லி எங்கள் வீட்டுப் பெண்ணை கல்யாணம் பண்ணிக்கொண்டு போனார்கள். எங்களுடைய தகுதிக்கேற்ப பெண்ணுக்கு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து அனுப்பினோம்.

புதுக்கோட்டை: கணவன், மனைவி தகராறு; திடீர் மரணம்! - மகள் இறப்பில் சந்தேகிக்கும் பெற்றோர்

பிறகு, பாலகிருஷ்ணனின் தம்பி ராதாகிருஷ்ணனுக்குப் பெண் பார்த்திருக்கிறார்கள். அந்தப் பெண்ணுக்கு அதிக நகைகளைப் போட்டுக் கல்யாணம் நடந்திருக்கிறது. அதனால், விஜயலட்சுமியிடம் அடிக்கடி பிரச்னை செய்திருக்கிறார்கள். இந்நிலையில், எனது மகள் விஷம் குடித்துவிட்டார் என்று மாப்பிள்ளை பேசுகிறார். எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது. எங்கள் பெண் சாவில் மர்மம் இருக்கிறது. உடனே விசாரித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பிரேத பரிசோதனை அறைக்கு முன்பு அமர்ந்து, உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டோம்’’ என்றனர்.

பெரம்பலூர் காவல் நிலையம்
பெரம்பலூர் காவல் நிலையம்

தகவலறிந்த குன்னம் போலீஸார் தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து, அவர்கள் தர்ணாவைக் கைவிட்டு, பிரேத பரிசோதனை முடிந்த விஜயலட்சுமியின் உடலை வாங்கிச் சென்றனர். இது தொடர்பாக, பெரம்பலூர் வருவாய்க் கோட்டாட்சியரும் விசாரணை நடத்திவருகிறார்.

அடுத்த கட்டுரைக்கு