Published:Updated:

`ஷட்டர், கேட் உடைப்பு; ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள மதுபானம் கொள்ளை!' - பெரம்பலூர் டாஸ்மாக் அதிர்ச்சி

டாஸ்மாக்
டாஸ்மாக்

மது பாட்டில்களின் அட்டைப் பெட்டி சிதறிக்கிடப்பதைப் பார்த்ததும் கட்டடத்தின் உரிமையாளர் சென்று பார்த்தபோது கடையின் ஷட்டர் திறந்து கிடந்தது.

பெரம்பலூரில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.1,50,000 மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுபாட்டில்களைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை மோப்ப நாய் உதவியோடு போலீஸார் தீவிரமாகத் தேடிவருகின்றனர். ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் தமிழகத்தில் மதுக்கடைகளைக் குறிவைத்து கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

டாஸ்மாக் கடை
டாஸ்மாக் கடை

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அத்தியாவசிய தேவையான பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு உள்ளன. இதில் டாஸ்மாக் கடைகளும் அடங்கும். 15 நாள்களுக்கும் மேலாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், மது கிடைக்காததால் அதற்கு அடிமையான பலர் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகளையும் கேள்விப்படுகிறோம்.

பெரம்பலூர் காவல் நிலையம்
பெரம்பலூர் காவல் நிலையம்

இதனால், கள்ளச் சந்தையில் மதுவிற்பனை கொடிகட்டிப் பறக்கிறது. போலீஸார் தடுப்பதால் பல இடங்களில் டாஸ்மாக் கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. அதேபோலதான் திருச்சி உறையூரிலும் கும்மிடிப்பூண்டி பகுதியிலும் உள்ள டாஸ்மாக் கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அனைத்து டாஸ்மாக் கடைகளும் 15 நாள்களாக மூடப்பட்டுள்ளன. இதனால் குடிமகன்கள், மதுபானம் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் சாலையில் உப்போடை பகுதியிலிருந்த டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

Representational Image
Representational Image

மது பாட்டில்களின் அட்டைப் பெட்டி சிதறிக்கிடப்பதைப் பார்த்ததும் கட்டடத்தின் உரிமையாளர் சென்று பார்த்தபோது கடையின் ஷட்டர் திறந்து கிடந்தது. இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார். அதன் பெயரில் மதுவிலக்கு ஏ.டி.எஸ்.பி ராஜாராம், டி.எஸ்.பி கென்னடி, ஆய்வாளர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இரவு கடையின் ஷட்டர் பூட்டு, இரும்பு கேட் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த குவாட்டர், புல் பாட்டில்களை எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அதன் மதிப்பு ரூ.1.5 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்து வரும் கலால் பிரிவு காவலர்களிடம் பேசினோம். ``தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் குடிமகன்களுக்கு மது கிடைக்காமல் திண்டாடிவருகிறார்கள். இந்த நிலையில் பல இடங்களில் சரக்கு கிடைக்காமல் கடையின் பூட்டை உடைத்துத் திருடிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

Representational Image
Representational Image

அப்படிதான் இங்கும் நடந்துள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாததால் நேற்று முன்தினம் கடையின் பூட்டை உடைத்திருக்கிறார்கள். அத்தோடு உள்ளே இருந்த சரக்குகளை எடுத்துக்கொண்டு கடையின் பக்கத்தில் உள்ள காலியான இடத்தில் அட்டைப் பெட்டிகளைப் போட்டுவிட்டு வெறும் மதுபாட்டில்களை மட்டும் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். இதுகுறித்து விசாரித்து வருகிறோம் கூடிய விரைவில் பிடித்துவிடுவோம்'' என்றார்கள்.

அடுத்த கட்டுரைக்கு