Published:Updated:

“தோ பாரு... மன்மதன் வந்துட்டாரு!”

செக்ஸ் டார்ச்சர்... அலறும் தூய்மைப் பணியாளர்கள்

பிரீமியம் ஸ்டோரி
ஊரெல்லாம் கழிவுகளை அள்ளிச் சுத்தப்படுத்து கிறார்கள் தூய்மைப் பணியாளர்கள். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் அப்படிப் பணியாற்றும் பெண் தொழிலாளர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, மனமெல்லாம் அழுக்கேறி, ‘குப்பை’க் கிடங்காக நாறிக்கிடக்கிறார் ‘மன்மத’ அதிகாரி ஒருவர்.

“பெண் தூய்மைப் பணியாளர்களைப் படுக்கைக்குக் கூப்பிட்டு செக்ஸ் டார்ச்சர் கொடுக்குறார் சார். தினமும் அவரோட தொந்தரவுக்கு அளவில்லாம போச்சு. கண்ட இடத்துல கையைவெச்சு ரொம்ப எல்லை மீறுறாருங்க. அதிகாரம் படைச்ச அந்த ஆளை எங்களால எதுவும் செய்ய முடியலை. போலீஸ்ல புகார் கொடுத்து கோர்ட்டு, ஸ்டேஷன்னு எங்க வாழ்க்கையையும் கெடுத்துக்க விரும்பலை. இந்தப் பிரச்னைக்கு நீங்கதான் முற்றுப்புள்ளி வெக்கணும்” - பேராவூரணியிலிருந்து நம்மைத் தொடர்புகொண்ட பெண் தூய்மைப் பணியாளர் ஒருவர் கலங்கிய குரலில் இப்படிச் சொன்னதைக் கேட்டதும் அதிர்ச்சியாக இருந்தது. அவரே நமக்கு சில ஆடியோ பதிவுகளையும் அனுப்பிவைத்தார். அதில் பேசும் ஆண் ஒருவர், எதிர்முனையில் பெண் தூய்மைப் பணியாளர்களிடம் பேசும் உரையாடல்களில் சில வரிகள் இதோ...

தமிழ்வாணன்
தமிழ்வாணன்

“எங்க வந்துக்கிட்டிருக்கே... சரி, வா. ஆபீஸ் வழியா வராதே... சைடு வழியா ரூமுக்கு வந்துடு. ஓகேவாடா? சரிடா...”

“எவ்வளவு நேரமாச்சு... எங்கே வந்துக்கிட்டிருக்கே... மெயின்ல யாருமில்லை... நான் ஜன்னல் வழியா பார்த்துக்கிட்டுதான் இருக்கேன்... யாரும் பார்க்க மாட்டாங்க. நேரா வந்துடு... ஓகேடா... ஓகேடா.”

“பயப்படாதே... என்ன பயந்துட்டியா... ஆமா, நீதான் பயந்துட்டியே... எதாயிருந்தாலும் என்கிட்ட சொல்லு... நம்பரை டெலிட் பண்ணிடு, வீட்ல பார்த்துடப் போறாங்க... திரும்பவும் எப்ப வருவே? சரிடா, பைடா...”

“நேத்தெல்லாம் எங்கே உன் போனையே காணோம்... என்கிட்ட சொன்னா நான் ரீசார்ஜ் பண்ண மாட்டேனா... நேரா மேல என் ரூமுக்கு வா... காசு தர்றேன். யாருகிட்டயும் சொல்லாத... புள்ளைங்களுக்குக் கறி எடுத்துக்கொடு...”

இவையெல்லாம் சில சாம்பிள்கள் மட்டுமே. தூய்மைப் பணியாளர்களின் வறுமையைப் பயன்படுத்திக்கொண்டு... அவர்களை வலையில் வீழ்த்தும் காமவெறியுடன் இன்னும் ஏடாகூடமாக நீள்கின்றன அந்த உரையாடல்கள்.

இது குறித்து உடனடியாகக் களத்தில் இறங்கி விசாரித்தபோது, கிடைத்த தகவல்கள் அனைத்தும் `உவ்வே’ ரகம். நம்மிடம் பேசிய தூய்மைப் பணியாளர்கள் சிலர், “தஞ்சாவூர் அருகேயுள்ள மெலட்டூரைச் சேர்ந்த தமிழ்வாணன், பேராவூரணி பேரூராட்சி அலுவலகத்துல துப்புரவு ஆய்வாளராக இருக்காரு. குடும்பம் இங்கே இல்லாததால, தனியா ரூம் எடுத்து தங்கியிருக்காரு. பேரூராட்சி அலுவலகத்துல இருபது தூய்மைப் பணியாளர்களும், டெங்கு கொசு ஒழிப்பில் 10 பெண்களுமா மொத்தம் 30 பெண் பணியாளர்கள் வேலை செய்யறோம்.

“தோ பாரு... மன்மதன் வந்துட்டாரு!”

தமிழ்வாணன் தன்னைக் கண்டிப்பான அதிகாரியா காட்டிப்பாரு. ஆனா, பெண்கள் விஷயத்துல ரொம்பவும் வீக். குறிப்பா, பெண் தூய்மைப் பணியாளர்கள்கிட்ட, ‘என்னை அட்ஜஸ்ட் செஞ்சுக்கிட்டா நீ எந்த வேலையும் செய்ய வேண்டியதில்லை. உனக்கு வேண்டியதை செஞ்சு தர்றேன்’னு ஆசைகாட்டி பாலியல்ரீதியாகத் தொந்தரவு செய்யிறாரு.

எங்கள்ல ஒரு பொண்ணுகிட்ட அவ வறுமையைப் பயன்படுத்திக்கிட்டு, ‘வேலையை முடிச்சிட்டு ரூமுக்கு வா பணம் தர்றேன். புள்ளைகளுக்கு ஆட்டுக்கறி வாங்கி, குழம்புவெச்சுக் குடு’னு ஆசைகாட்டியிருக்கார். இன்னொரு பொண்ணை டாய்லெட் கழுவுறதுக்கு தன்னோட ரூமுக்கு வரச்சொல்லி தப்பா நடந்துக்கிட்டார். வேலை போயிடுமோங்கிற பயத்துல அந்தப் பொண்ணு அதை யார்கிட்டயும் சொல்லலை. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கிட்டாரு.

டார்ச்சர் தாங்காம இதை அந்தப் பொண்ணு அவளோட வீட்டுக்காரர்கிட்ட சொல்லிட்டா. கொதிச்சுப்போன அந்தப் பொண்ணோட கணவர் ஆபீஸுக்கு வந்து கத்தி, கூப்பாடு போட்டுட்டாரு. அதை மொத்த ஆபீஸும் வேடிக்கை பார்த்துச்சேயொழிய... அந்தாளு மேல எந்த நடவடிக்கையும் எடுக்கலை. இவரோட செக்ஸ் டார்ச்சர் எல்லைமீறிப் போனதால ஊர்ல இவரை ‘தோ பாரு... மன்மதன் வந்துட்டாரு’னு கேவலமா திட்டுறாங்க. சிலர் இதைப்பத்தி நிர்வாக அலுவலர்கிட்ட புகார் சொல்லியும் எந்த நடவடிக்கையும் இல்லை” என்றார்கள் அச்சத்துடன்.

இந்த விவகாரங்கள் குறித்து தமிழ்வாணனிடம் விளக்கம் கேட்டோம். “நான் வேலையில் கண்டிப்பா இருப்பேன். அதனால சிலர் அபாண்டமான குற்றச்சாட்டைச் சொல்றாங்க. நான் தப்பு செஞ்சிருந்தா என்மீது புகார் பதிவாகியிருக்குமே... இதுவரை என் மேல எந்தப் புகாரும் வரலை. அப்படியே புகார் வந்தாலும் விசாரணைக்குத் தயாரா இருக்கேன்” என்றவரிடம் அவர் பேசியதாக வந்திருக்கும் ஆடியோ குறித்துக் கேட்டதற்கு, “அந்த ஆடியோவில் பேசுவது நான் இல்லை” என்றார் பதற்றத்துடன்.

இது குறித்து பேரூராட்சி நிர்வாக அலுவலர் மணிமொழியனிடன் பேசினோம். “தமிழ்வாணன் சில பெண்கள்கிட்ட தப்பா நடந்துக்கிட்டதா என்கிட்ட புகார் சொன்னாங்க. தமிழ்வாணனைக் கூப்பிட்டு கண்டிச்சேன். அப்பவும் அவர் திருந்தலை” என்று புலம்பலுடன் முடித்துக்கொண்டார்.

உயரதிகாரியிடம் புகார் சொல்லியும் பலன் இல்லை. இனி, தூய்மைப் பணியாளர்களின் துடைப்பங்கள் தூக்கியெறிய வேண்டியது குப்பைகளை மட்டுமல்ல... இதுபோன்ற நபர்களையும்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு