Published:Updated:

மும்பை: கல்லூரி ஆன்லைன் வகுப்பு; ஆபாச வீடியோவைப் பதிவேற்றிய மர்ம நபர்?! - விசாரணையில் சைபர் பிரிவு

ஆன்லைன் வகுப்பு
ஆன்லைன் வகுப்பு

மும்பை கல்லூரி சார்பாக நடந்த ஆன்லைன் வகுப்பில் நுழைந்த மர்ம நபர், ஆபாச வீடியோவைப் பதிவேற்றம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த பிறகு, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் ஆன்லைனில் வகுப்புகளை நடத்துகின்றனர். இதனால் மாணவர்கள் எப்போதும் மொபைல்போனுடனேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பெற்றோர்கள் எப்போது பள்ளி திறக்கும் என்று கேட்டுத் தொந்தரவு செய்யும் அளவுக்கு நிலைமை சென்றுவிட்டது.

மும்பையிலுள்ள கல்லூரி ஒன்றில், ஆசிரியர் ஆன்லைனில் கிளாஸ் நடத்திக்கொண்டிருந்தபோது, மர்ம நபர் உள்ளே நுழைந்து ஆபாச வீடியோவைப் பதிவேற்றம் செய்திருக்கிறார். விலே பார்லேயிலுள்ள கல்லூரி ஒன்றின் சார்பாக மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 60-க்கும் மேற்பட்டோர் இந்த ஆன்லைன் வகுப்பில் கலந்துகொண்டிருந்தனர். அந்தநேரத்தில், திடீரென ஆன்லைனில் ஆபாச வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டது. இதனால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

ஆன்லைன்
வகுப்பு
ஆன்லைன் வகுப்பு

அனைவரும் ஆன்லைன் வகுப்பைப் பாதியில் நிறுத்தினர். இது எப்படி நடந்தது என்று மாணவர்கள் மத்தியில் கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தியது. இது தொடர்பாக பின்னர் போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்துவருகின்றனர். மர்ம நபர் ஆன்லைன் வகுப்புக்குள் லிங்க் மூலம் நுழைந்தாரா அல்லது ஆன்லைன் வகுப்பை ஹேக் செய்து உள்ளே நுழைந்தாரா என்பது குறித்து விசாரிக்கப்பட்டுவருகிறது. இந்தச் சம்பவம் அனைத்துக் கல்லூரிகளிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மும்பை சைபர் பிரிவு போலீஸார் இது குறித்து விசாரித்துவருகின்றனர். ஆபாச வீடியோ எந்த ஐபி முகவரியிலிருந்து அனுப்பப்பட்டது என்பது குறித்து விசாரித்துவருகின்றனர்.

கடந்த 15 நாள்களுக்கு முன்பு மும்பை சாக்கிநாக்காவைச் சேர்ந்த கல்லூரி ஒன்றின் ஆன்லைன் வகுப்புக்குள் நுழைந்த 15 வயது சிறுவன், பெண் பயிற்சியாளர்களிடம் மோசமாக நடந்துகொண்டார். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து ராஜஸ்தானைச் சேர்ந்த அந்தச் சிறுவனைக் கைதுசெய்தனர். ஒரு மாதத்துக்கும் மேலாக அந்தச் சிறுவன் இது போன்ற காரியத்தில் ஈடுபட்டுவந்தது விசாரணையில் தெரியவந்தது. போலி நம்பர் மற்றும் போலி இமெயில் ஐடி-யைப் பயன்படுத்தி இது போன்ற காரியங்களில் 15 வயது சிறுவன் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.

ஆன்லைன் வகுப்பு
ஆன்லைன் வகுப்பு

இதனால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ளும் மாணவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்படும் லிங்க்குகளை வேறு யாரிடமும் பகிர்ந்துகொள்ளாதீர்கள் என்று போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். தங்களது போனையும் தெரியாதவர்களிடம் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். இந்தச் சம்பவங்களால் மாணவிகள் மிகவும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு