Published:Updated:

கேரளா: காரின் பின்புறம் வளர்ப்பு நாயைக் கட்டி இழுத்த கொடூரம்! - வைரல் வீடியோவால் ஓனர் கைது

காரின் பின்னால் கட்டி இழுக்கப்பட்ட நாய்
காரின் பின்னால் கட்டி இழுக்கப்பட்ட நாய்

காரின் பின்னால் ஓடிச் சென்ற நாய், ஒரு கட்டத்தில் ஓட முடியாமல் ரோட்டில் விழுந்தது. அப்போதும் கார் வேகமாகச் சென்றுகொண்டிருந்தது. சாலையில் உரசியபடியே சென்றதால் நாய்க்கு காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டியது.

கேரள மாநிலம், கொச்சியை அடுத்த நெடும்பாசேரி பகுதியில் நாயின் கழுத்தில் கயிற்றைக் கட்டி அதன் மறுமுனையை காரின் பின்பகுதியில் கட்டி காரை ஓட்டிச் சென்றிருக்கிறார் ஒருவர். காரின் பின்னால் ஓடிச் சென்ற நாய், ஒருகட்டத்தில் ஓட முடியாமல் ரோட்டில் விழுந்தது. அப்போதும் கார் வேகமாகச் சென்றுகொண்டிருந்தது. சாலையில் உரசியபடியே சென்றதால் நாய்க்குக் காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டியது. அப்போது பைக்கில் சென்ற அகில் என்ற இளைஞர், இந்தக் கொடூர செயலை காரின் பின்னால் சென்றபடி மொபைல்போனில் வீடியோ எடுத்தார். பின்னர், காரை மறித்து நிறுத்தியவர், அதை ஓட்டிச் சென்றவரிடம் எதற்காக இப்படிச் செய்கிறார் எனக் கேட்டிருக்கிறார். அதற்கு கார் ஓட்டிச் சென்ற யூஸப் என்பவர் ``நாய் செத்தால் உனக்கு என்னடா...’’ எனக் கேட்டு தகராறு செய்திருக்கிறார். பின்னர் அந்த நாயை அவிழ்த்து விட்டுவிட்டு அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

வைரலான வீடியோ
வைரலான வீடியோ

அகில், அந்த நாயை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்திருக்கிறார். அகில் எடுத்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். அந்த வீடியோ வைரலானது. இது குறித்து அகில் கூறுகையில், ``அந்த நாய் அவரது வீட்டில் வளர்த்தது எனத் தெரியவந்திருக்கிறது. வீட்டில் உள்ளவர்களுக்குப் பிடிக்காததால், அதை எங்காவது விட்டுவிட வேண்டும் என்பதற்காக காரின் பின்புறம் கயிற்றால் கட்டி இந்தக் கொடுமையைச் செய்திருக்கிறார். நான் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்தபோதுதான் இந்தக் கொடுமையைப் பார்த்தேன்.

தொலைவிலிருந்து பார்த்தபோது நாய் காரை துரத்திக்கொண்டு ஓடுவதுபோலத் தெரிந்தது. அருகில் சென்றபோதுதான் காரில் நாய் கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. ஒருகட்டத்தில் நாய் ரோட்டில் விழுந்து, சாலையில் இழுத்துக்கொண்டே சென்றதால், நான் காரை நிறுத்தினேன். இப்போது நாய்க்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த நாய் எளிதில் மனிதர்களிடம் பழகுகிறது. நாயைக் கொடுமை செய்ய எப்படித்தான் மனது வந்ததோ..." என்றார்.

மீட்கப்பட்ட நாய்
மீட்கப்பட்ட நாய்

இந்தச் சம்பவத்துக்குப் பல முக்கியப் பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். மேலும், செங்கமநாடு காவல் நிலையத்தில் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து, காரை ஓட்டிச் சென்ற நெடும்பாசேரி சாலாக்கப் பகுதியைச் சேர்ந்த யூஸப் என்பவரை போலீஸார் கைதுசெய்தனர். குடும்பத்தினர் நாயை விரும்பாததால் அதை எங்காவது விட்டுவிடுவதற்கு இப்படிச் செய்ததாக யூஸப் ஒப்புக்கொண்டிருக்கிறார். மோட்டார் வாகனச் சட்டப்படியும் யூஸப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறாது. அவரது கார் பறிமுதல் செய்யப்பட்டதுடன், லைசென்ஸ் ரத்துசெய்யப்படவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு