Published:Updated:

`கிராமசபையில் கேள்வி; உள்ளாட்சித் தேர்தல் பகை!'- திருச்சி அ.தி.மு.க பிரமுகரை அதிரவைத்த இளைஞர்கள்

மளிகைக் கடையில் வெடிகுண்டு வீச்சு
மளிகைக் கடையில் வெடிகுண்டு வீச்சு

திருச்சி அ.தி.மு.க பிரமுகர் வீட்டில் நேற்று இரவு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், மண்ணச்ச நல்லூர் அருகே உள்ளது திருப்பைஞ்சீலி ஊராட்சி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பிச்சை என்பவரின் மகன், கண்ணன். இவர், நாம் தமிழர் கட்சியின் மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளராக உள்ளார்.

கடந்த குடியரசு தினத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், திருப்பைஞ்சீலி ஊராட்சி மன்றத்தில் நடைபெற்ற தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆதாரங்கள் மூலம் கண்ணன் கேள்வி கேட்டிருக்கிறார்.

`இனி கிராமசபையில் கேள்வி கேட்பாயா?' -திருச்சி நாம் தமிழர் நிர்வாகியைப் பதறவைத்த மர்ம நபர்கள்

இந்த நிலையில், கடந்த ஜனவரி 29-ம் தேதி இரவு, வழிமறித்த மர்மக் கும்பல் ஒன்று அரிவாளால் வெட்டியது. தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாகக் கண்ணன் உயிர்தப்பினார்.

இந்த வழக்கில், திருப்பைஞ்சீலி ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் சொரூபராணி என்பவரது தம்பி கண்ணன் உள்ளிட்ட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட கண்ணன், தற்போது பிணையில் வெளிவந்துள்ளார்.

காயமடைந்த புஷ்பா
காயமடைந்த புஷ்பா

தாக்குதலுக்குள்ளான நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கண்ணனின் உறவினரும், திருப்பைஞ்சீலி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட அ.தி.மு.க எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளர் சோமசுந்தரம், அதே ஊரில் மளிகைக் கடை வைத்துள்ளார். கடையை அவரது மனைவி புஷ்பா நேற்று இரவு கவனித்துவந்தார். அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்கள், மளிகைக் கடையில் நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு பைக்கில் தப்பிச்சென்றனர்.

மளிகைக் கடையில் வெடிகுண்டு வீச்சு
மளிகைக் கடையில் வெடிகுண்டு வீச்சு

இந்த வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில், மளிகைக் கடையின் உள்ளே இருந்த புஷ்பா படுகாயமடைந்தார். மேலும், மளிகைக் கடையின் முன் பக்கம் சேதமடைந்தது. காயமடைந்த புஷ்பா, சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் காவல்நிலையத்துக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால், போலீஸார் மிகவும் தாமதமாக வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சோமசுந்தரம் நம்மிடம்,``உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டதால், எங்கள்மீது சிலர் கடுங்கோபத்தில் உள்ளனர். எங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ஊராட்சிமன்ற கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி கேட்ட, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கண்ணன் மீது கொலை வெறிதாக்குதல் நடத்திய வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், எங்கள் கடை மீது வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக எனது மனைவி உயிர்பிழைத்துள்ளார்.

மளிகைக் கடையில் வெடிகுண்டு வீச்சு
மளிகைக் கடையில் வெடிகுண்டு வீச்சு

எங்கள் மீது கொலைவெறி பிடித்து அலைகிறார்கள். மண்ணச்சநல்லூர் போலீஸாரின் நடவடிக்கைகளில் திருப்தி இல்லை. எனவே, நடக்கும் சம்பவங்கள் குறித்து முழுமையான விசாரணை வேண்டும். அதனால், இந்த வெடிகுண்டு வீச்சு வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க வேண்டும்” என்றார்.

நடந்த விவகாரம் குறித்து போலீஸார் விசாரித்துவருகிறார்கள். சோம சுந்தரத்துக்கு சொந்தமான மளிகைக்கடை மீது நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டுத் தப்பிச்சென்ற இளைஞர்களைத் தேடிவருகிறார்கள். இந்தச் சம்பவம், திருச்சி மாவட்டத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு