Published:Updated:

ஈரோடு: ஹோட்டல்மீது பெட்ரோல் குண்டுவீச்சு; பேரூராட்சி கவுன்சிலருக்குத் தொடர்பா?!

சிதறிக் கிடக்கும் ஹோட்டல்

பெட்ரோல் குண்டு வீசியதில் கவுன்சிலர் கோவேந்திரனுக்குத் தொடர்பு இருந்ததா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

ஈரோடு: ஹோட்டல்மீது பெட்ரோல் குண்டுவீச்சு; பேரூராட்சி கவுன்சிலருக்குத் தொடர்பா?!

பெட்ரோல் குண்டு வீசியதில் கவுன்சிலர் கோவேந்திரனுக்குத் தொடர்பு இருந்ததா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Published:Updated:
சிதறிக் கிடக்கும் ஹோட்டல்

ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே நசியனூர், பள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் அர்ஜுனன், நசியனூர் கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஹோட்டல் நடத்திவருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த முத்துசாமியின் மகன் கோவேந்திரன். இவர் சித்தோடு பேரூராட்சியில் 1-வது வார்டின் தி.மு.க. கவுன்சிலராக இருக்கிறார். அர்ஜுனனின் ஹோட்டலுக்கு அருகே இவரும் ஹோட்டல் நடத்திவருகிறார். இருவருக்கும் தொழில்போட்டி காரணமாக முன்விரோதம் இருந்துவந்ததாகத் தெரிகிறது. சனிக்கிழமை அர்ஜுனனுக்குச் சொந்தமான நாய் ஒன்று கோவேந்திரனின் ஹோட்டலுக்கு முன் சிறுநீர் கழித்துவிட்டதாகத் தெரிகிறது. அந்த நாயை கோவேந்திரன் தாக்கியதாகத் தெரிகிறது. இதைக்கண்ட அர்ஜுனன், `வாயில்லா ஜீவனைப் போட்டு அடிக்கிறாயே’ என்று கேட்டிருக்கிறார். இதனால், இருவருக்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. பின்னர், இரவில் வியாபாரம் முடித்ததும், ஹோட்டலை மூடிவிட்டு அர்ஜுனன் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

சிதறிய ஹோட்டல்
சிதறிய ஹோட்டல்

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அர்ஜுனனின் உணவகம் முன்பு கார் ஒன்று வந்துநின்றது. காரிலிருந்து இறங்கிய மர்ம நபர் ஒருவர் உணவகத்தின் மீது
பெட்ரோல் குண்டு ஒன்றை வீசிவிட்டு எஸ்கேப் ஆனார். இந்தக் காட்சிகள் அனைத்தும் ஹோட்டல் முன்பு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருந்தது. பெட்ரோல் குண்டு வீசியதும் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இது குறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் சித்தோடு போலீஸாருக்கும், பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் ரவீந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து 30 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். எனினும், கடையின் முன் பகுதியிலிருந்த இரண்டு குளிர்சாதனப் பெட்டிகள், பெஞ்ச், டேபிள்கள், பெயர் பலகை போன்றவை சேதமாகின.

சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி
சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி

நிகழ்விடத்துக்கு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜானகிராமன் சென்று விசாரணை நடத்தினார். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. கடையின் முன்பு பொருத்தியிருந்த  சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸார் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர். அதில் பதிவாகியிருந்த மர்ம நபரின் முகம் தெளிவாகத் தெரிந்தது. அதனடிப்படையில் போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கின்றனர்.
பெட்ரோல் குண்டு வீசியதில் தி.மு.க கவுன்சிலர் கோவேந்திரனுக்குத் தொடர்பு இருந்ததா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த நிலையில் கோவேந்திரன், தலைமறைவாகியிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அர்ஜுனனுக்கும் இவருக்குமிடையே ஏற்பட்ட தொழில் போட்டியால் இந்தச் சம்பவம் நடைபெற்றதா என்ற கோணத்தில் விசாரணை நடந்துவருகிறது. ஹோட்டல்மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.