Published:Updated:

ஆளுநர், முதல்வர்களுடன் புகைப்படங்கள்! - விசாரணையில் `போலி அசிஸ்டன்ட் கமிஷனர்’ கூறியது என்ன?

`நான்தான் சென்னை போலீஸ் அசிஸ்டன்ட் கமிஷனர்’, எனச் சொல்லி, கடந்த 10 மாதங்களாக, தமிழகம் முழுவதும் சைரன் காரில் சுற்றித்திரிந்த போலி ’ஏ.சி’-யை போலீஸார் கைதுசெய்தனர். நீதிமன்றக் காவலில் நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை, கொளத்தூரைச் சேர்ந்தவர் விஜயன். கடந்த 2-ம் தேதி திண்டுக்கல் மாவட்டம், லட்சுமிபுரம் டோல்கேட்டில் சைரன் வைத்த கார் ஒன்று வந்தது. காருக்குள் இருந்த விஜயன், தன்னை ’சென்னை போலீஸ் கமிஷனர்’ எனச் சொல்லியிருக்கிறார். அவரது அடையாள அட்டையைப் பார்த்தபோது அது போலி அடையாள அட்டை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைப் பட்டிவீரன்பட்டி போலீஸார் கைதுசெய்தனர். அவரிடமிருந்து போலி ஐ.டி கார்டு, சைரன் வைத்த கார், ஒரு கைத்துப்பாக்கி ஆகியவை கைப்பற்றபட்டன. விசாரணையில், தனது மனைவியை ஏமாற்ற போலீஸ் அதிகாரி பணியில் இருப்பதுபோல வேடம் போட்டதாக ஒப்புக்கொண்டார் விஜயன்.

முதல்வர்கள், ஆளுநர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்
முதல்வர்கள், ஆளுநர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

அவர்மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் பெரியகுளம் சிறையில் அடைத்தனர். ’போலீஸ் அசிஸ்டன்ட் கமிஷனர்’ என்ற போர்வையில் என்னென்ன குற்றங்களில் அவர் ஈடுபட்டார் என விசாரணை மேற்கொள்வதற்காக பட்டிவீரன்பட்டி போலீஸார், விஜயனை ஒருநாள் காவலில் எடுத்து விசாரணை செய்ய நிலக்கோட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். நிலக்கோட்டை மாஸ்ட்ரேட் மும்தாஜ், ஒருநாள் காவலில் எடுத்து விசாரணை செய்ய உத்தரவிட்டார்.

போலி கமிஷனர் விஜயனின் ஆரம்பகால வாழ்க்கையைப் பற்றியும், போலி கமிஷனர் அவதாரத்தைப் பற்றியும் போலீஸார் தரப்பில் விசாரித்தோம். ``ஆரம்பத்தில் லாரி உரிமையாளர், சிமென்ட், இரும்புக்கம்பி வியாபாரம்... எனப் பல தொழில்கள் செய்து ரூ.60 லட்சம் வரை நஷ்டமடைந்தார் விஜயன். இதையடுத்து சென்னையில் தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக இரண்டு ஆண்டுகள் வரை வேலை பார்த்திருக்கிறார். அப்போது செய்தி சேகரிக்கச் சென்ற இடத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் முன்னாள், இந்நாள் முதல்வர்கள், முன்னாள் ஆளுநர்கள், போலீஸ் அதிகாரிகளுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறார். அந்தப் படங்களையும், போலீஸ் அதிகாரிபோல உடை அணிந்த படங்களையும் பதிவிட்டிருக்கிறார்.

போலீஸ் உடையில் ’போலி அசிஸ்டன்ட் கமிஷனர்’ விஜயன்
போலீஸ் உடையில் ’போலி அசிஸ்டன்ட் கமிஷனர்’ விஜயன்

இதன் மூலம் பலரது முகநூல் நட்பு விஜயனுக்குக் கிடைத்திருக்கிறது. சரியான வேலை இல்லாதது, மனைவியிடம் சண்டை எனத் தொடர் பிரச்னையால், `குரூப்-1’ தேர்வில் வெற்றிபெற்று டி.எஸ்.பி-யாகத் தேர்வானதாகச் சொல்லி மனைவியை நம்பவைத்திருக்கிறார். இதற்காக கடந்த 10 மாதங்களுக்கு முன்பு கோவையில் ஒரு ஜீப்பை வாங்கி, தன் மனைவியிடமும் உறவினர்களிடமும் தான் உளவுத்துறை மற்றும் போலீஸ் கமிஷனராக வேலை பார்ப்பதாகக் கூறி நம்பவைத்து தமிழகம் முழுவதும் வலம்வந்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏற்கெனவே முதல்வர்கள், காவல்துறை அதிகாரிகளுடன் எடுத்த புகைப்படங்களை விஜயன் தனது முகநூலில் பதிவிட்டதால், அந்த நட்பில் சில சினிமா பிரபலங்களும் நட்பாகப் பழகியிருந்துள்ளனர். முகநூல் நட்பில் இருந்த பெண்கள் பலரிடம் தொலைபேசி மூலம் பேசி, தனது நட்பை பலமாக்கிக்கொண்டுள்ளார். தனது பேச்சு சாதுர்யத்தால் அந்தப் பெண்களிடம் ’அவசரத் தேவை’ எனக் கூறி கைமாற்றாக ரூ.10,000 முதல் 50,000 ரூபாய் வரை எனக் கிடைக்கும் பணத்தைப் பெற்றிருக்கிறார். அத்துடன், ஆதரவற்ற முதியவர்கள், மாணவர்களுக்கு உதவுவதாகச் சொல்லி நண்பர்கள் வட்டாரத்திலும் பணம் பெற்ற்றிருக்கிறார். ’மாதச் சம்பளம்’ என, தனது மனைவி சரிதாவுக்கு அனுப்பியது போக மீதிப் பணத்தை வைத்துக்கொண்டு ஊர் ஊராகச் சுற்றி வந்திருக்கிறார் விஜயன். நுனிநாக்கில் விளையாடும் ஆங்கிலப் பேச்சால் போகுமிடமெல்லாம் போலீஸ் மரியாதை, தங்குவதற்கு ஓசி-யில் நட்சத்திர விடுதிகள், வகை வகையான சாப்பாடு... எனக் கடந்த நான்கு மாதங்களாக வாழ்க்கையை ஜாலியாக அனுபவித்துவந்திருக்கிறார் விஜயன்.

போலி அசிஸ்டன்ட் கமிஷனரின் போலி ஆய்வுக் காட்சிகள்
போலி அசிஸ்டன்ட் கமிஷனரின் போலி ஆய்வுக் காட்சிகள்

பணம் கொடுத்த முகநூல் நண்பர்களையும், தனது மனைவியும் சமாளிக்க பல்வேறு இடங்களுக்குச் சென்று வாகன சோதனை என்ற பெயரில் அங்கிருந்து புகைப்படங்களை எடுத்து அனுப்பி, தான் பிஸியான காவல்துறை பணியில் இருப்பதுபோல் காட்டிவந்திருக்கிறார் விஜயன். கடலூரில் ஆன்லைன் பிசினஸில் சிமென்ட், கம்பி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 லட்சம் பணத்தை ஏமாற்றியிருப்பதாக ஒருவர் மட்டுமே புகார் அளித்திருக்கிறார். அவரிடம், முகநூல் நட்பில் பணம் கொடுத்து ஏமாந்த பெண்கள் யாரும் இதுவரை புகார் அளிக்கவில்லை. புகார் அளிக்கப்படும் பட்சத்தில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர். விஜயன் கைதுசெய்யப்பட்ட சில மணி நேரங்களில் விஜயன் முகநூல் பக்கத்திலிருந்து வெளியேறிய 30-க்கும் மேற்பட்ட பெண்கள், விஜயனின் முகநூல் நட்பைத் துண்டித்து இருப்பதும் ஏராளமான படங்கள் அழிக்கப்பட்டிருப்பதும் சைபர் க்ரைம் போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

`முகநூல் பழக்கம்.. திடீர் தற்கொலை?!’ -டி.எஸ்.பி என ஆண் குரலில் பேசிய பெண்; சிக்கிய மோசடி தம்பதி
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு