Published:Updated:

`தீபாவளி வாழ்த்து சொல்ல வந்தார்!' - மாணவிக்கு கொடுத்த டார்ச்சரால் கைதான ஆவடி ஆசிரியர்

சென்னையில் மாணவியிடம் உடற்பயிற்சி ஆசிரியர் தவறாக நடக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜேஷ்
ராஜேஷ்

சென்னையை அடுத்த ஆவடி அருகே குடியிருக்கும் 17 வயது மாணவி, திருநின்றவூர், நெமிலிச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் ப்ளஸ் டூ படித்துவருகிறார். இவரின் அப்பா, தனியார் நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றுகிறார். இந்தநிலையில் தீபாவளி விடுமுறையையொட்டி மாணவி வீட்டில் இருந்தார். அப்போது அவருக்கு ஒரு போன் அழைப்பு வந்துள்ளது. உடனே வீட்டின் மாடியில் உள்ள அறைக்குச் சென்றுள்ளார்.

Representational image
Representational image

மாடிக்குச் சென்ற மாணவியைப் பின்தொடர்ந்து பெற்றோரும் சென்றுள்ளனர். அப்போது மேல் மாடியில் உள்ள அறையில் வேறு ஒரு நபரின் நடமாட்டம் தென்பட்டதால், உள்ளே சென்று பார்த்துள்ளனர். அவரிடம் விசாரித்தபோது மாணவி பயிலும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக இருப்பது தெரிந்து பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து முத்தாப்பேட்டை காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோரும் அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்களும் அந்த இளைஞரை ஒப்படைத்தனர். பிறகு ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த நபர் ஒப்படைக்கப்பட்டார். இன்ஸ்பெக்டர் ஷோபாராணியின் விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.

police
police

இதுகுறித்து ஆவடி சரக போலீஸார் நம்மிடம், ``முத்தாப்பேட்டையைச் சேர்ந்த ப்ளஸ் டூ மாணவியின் அப்பா, ஆவடி மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போக்ஸோ உட்பட 2 பிரிவுகளின்கீழ் திருமுல்லைவாயல் பெரியார் நகரைச் சேர்ந்த ராஜேஷ் (26) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். மாணவி படிக்கும் பள்ளியில்தான் ராஜேஷ், உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன், மாணவி படிக்கும் பள்ளி வழக்கமான நேரத்தைவிட முன்கூட்டியே விடப்பட்டுள்ளது. இதனால் மாணவி வீட்டுக்குச் செல்ல முடியாமல் பள்ளியிலேயே இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ராஜேஷ், மாணவியிடம் என்ன விவரம் என்று கேட்டுள்ளார். அதற்கு மாணவி, `அப்பாவுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார். உடனே மாணவியின் அப்பா செல்போன் நம்பருக்கு ராஜேஷ் போன் செய்து தகவலைத் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு மாணவியும் ராஜேஷும் பேசத் தொடங்கியுள்ளனர்.

உடற்கல்வி ஆசிரியர் படிப்பில் முதுகலை படித்துவிட்டு வேலையில்லாமல் இருந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் மாணவி படிக்கும் பள்ளியில் பணியில் சேர்ந்துள்ளார்.
போலீஸார்

இதையடுத்து மாணவியிடம் காதலைக் கூறியுள்ளார் ராஜேஷ். ஆனால், அதை மாணவி ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும் ஆசிரியர் என்பதால் அவரிடம் பேசுவதையும் மாணவியால் தவிர்க்க முடியவில்லை. இந்தச் சமயத்தில்தான் தீபாவளி விடுமுறையையொட்டி மாணவிக்கு வாழ்த்துச் சொல்லியுள்ளார் ராஜேஷ். அப்போது மாணவி வீட்டில் இருக்கும் தகவலைத் தெரிந்துகொண்டவர், அங்கு வந்துள்ளார். அப்போது, `வீட்டில் அப்பா, அம்மா இருக்கிறார்கள்' என்று மாணவி கூறியுள்ளார். ஆனால் ராஜேஷ், பிடிவாதமாக `தீபாவளிக்கு நேரில் வாழ்த்து சொல்ல வேண்டும். உன் வீட்டின் அருகில்தான் இருக்கிறேன்' என்று கூறியுள்ளார்.

அதன்பிறகு மாடிக்கு மாணவி வந்துள்ளார். அங்கு மாணவியை ராஜேஷ் மிரட்டியுள்ளார். நீண்ட நேரமாகியும் மாணவி கீழே வராததால் பெற்றோர் மாடிக்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போதுதான் ராஜேஷை அவர்கள் பார்த்துள்ளனர். ராஜேஷிடம் விசாரித்தபோது அவர், நடந்த உண்மைகளை எங்களிடம் தெரிவித்தார். அதன் அடிப்படையிலும் மாணவியின் அப்பா அளித்த புகாரின்பேரில் ராஜேஷைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்.

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! - வேலூர் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

திருமுல்லைவாயல் பகுதியில் குடியிருக்கும் ராஜேஷுக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர். அப்பா இல்லை. அம்மா மற்றும் சகோதரர்களுடன் வசித்து வந்த ராஜேஷ், டபுள் டிகிரி படித்துள்ளார். உடற்கல்வி ஆசிரியர் படிப்பில் முதுகலையும் படித்துவிட்டு வேலையில்லாமல் இருந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் மாணவி படிக்கும் பள்ளியில் பணியில் சேர்ந்துள்ளார். அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்தச் சமயத்தில்தான் இப்படியொரு குற்றச்சாட்டில் ஆசிரியர் ராஜேஷ் சிக்கியுள்ளார்" என்றனர்.