Published:Updated:

`கொஞ்ச நாளாக நான் நானாகவே இல்லை!'- வைரலாகும் நிர்மலா தேவி ஆடியோ

``இப்போது தினம் ஒரு கூத்து நடக்கிறது. மதுரையில் உங்களுக்குத் தெரிந்த மனநல மருத்துவரிடம் என்னை அழைத்துச் செல்லுங்கள். தினம் பெரிய பிரச்னை வருகிறது.''

நிர்மலாதேவி
நிர்மலாதேவி

``சில நாள்களாக நான் நானாகவே இல்லை. தயவுசெய்து என்னை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்'', என நிர்மலாதேவி பேசுவதாக ஆடியோ ஒன்று சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

நிர்மலாதேவி
நிர்மலாதேவி

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உதவிப் பேராசிரியர் நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரோடு முருகன், கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். தற்போது இவர்கள் நிபந்தனை ஜாமீனில் வெளியே உள்ளனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

கடந்த திங்கள்கிழமை நீதிமன்றத்துக்கு ஆஜராக வந்த நிர்மலாதேவி மனநலம் பாதிக்கப்பட்டவர்போல நடந்துகொண்டார். பின்னர் அருப்புக்கோட்டையில் உள்ள தர்காவிலும் அதேபோல நடந்துகொண்டார். பின்னர் காவல்துறையினர் அவரை வீட்டில் கொண்டுபோய் சேர்த்தனர்.

நிர்மலாதேவி
நிர்மலாதேவி

இந்த நிலையில், தனக்குத் தெரிந்த ஒருவரிடம் அவர் பேசியது போன்று ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சார், நேற்று ஏதாவது கோபமாக பேசியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள். கொஞ்ச நாளாக நான் நானாகவே இல்லை. ஆன்மிக ரீதியாக இப்படி நடக்கிறதா எனத் தெரியவில்லை. ரொம்ப கஷ்டமாக உள்ளது.

2 நாளுக்கு முன் தஞ்சாவூரில் தெரிந்தவர் வீட்டுக்குச் சென்று மனநல மருத்துவரைப் பார்த்தேன். இப்போது தினம் ஒரு கூத்து நடக்கிறது. மதுரையில் உங்களுக்குத் தெரிந்த மனநல மருத்துவரிடம் என்னை அழைத்துச் செல்லுங்கள். தினம் பெரிய பிரச்னை வருகிறது. இப்போதுகூட நான் தயாராக உள்ளேன்'' என பேசுகிறார்.

நிர்மலாதேவி
நிர்மலாதேவி

எதிர்முனையில் பேசிய அந்த நபர், ``திருநெல்வேலியில் உள்ள மருத்துவமனைக்கு உங்களை அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்திருந்தோம். என் மனைவி கடும் மன அழுத்தத்தில் இருந்தார். அங்கேதான் என் மனைவிக்கும் சிகிச்சை அளித்தேன். இப்போது நன்றாக உள்ளார். நீங்கள் என்னை பேசவே விடாததால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்போது மீண்டும் பேசிவிட்டு அழைக்கிறேன்' என்கிறார்.

அதற்குப் பதிலளிக்கும் நிர்மலாதேவி, `உடனே பேசிவிட்டு மதுரையோ அல்லது திருநெல்வேலிக்கோ என்னை தயவுசெய்து அழைத்துச் செல்லுங்கள்'' எனக் கூறி முடிக்கிறார். இந்த ஆடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

நிர்மலா தேவி
நிர்மலா தேவி

கடந்த சில நாள்களாவே நிர்மலாதேவி தனக்கு சாமி வந்ததாகவும், வாக்கு கொடுத்ததாகவும், தனக்கு எதிரானவர்கள் இறந்துவிட்டதாகவும் ஏதேதோ பேசியும், செய்தும் வருகிறார்.