Published:Updated:

வேலூர்: தனியார் பல்கலைக்கழகத்தின் பெயரில் மோசடி! - பா.ம.க பிரமுகர் மீது குவியும் புகார்கள்

பா.ம.க பிரமுகர் வெங்கடேசன்
பா.ம.க பிரமுகர் வெங்கடேசன்

வேலூர் தனியார் பல்கலைக்கழகத்தில், `சீட்’ வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கான ரூபாயை மோசடி செய்த பா.ம.க பிரமுகரை போலீஸார் அதிரடியாகக் கைதுசெய்திருக்கிறார்கள்.

உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியைச் சேர்ந்தவர் சஞ்சய்குப்தா, தொழில் அதிபர். இவருடைய மகன் ஹரிஷ்குப்தா (21). இவர், வேலூர் காட்பாடியிலுள்ள வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயில விரும்பினார். அதற்காக 2017-ம் ஆண்டு விண்ணப்பித்தபோது, வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் ஆந்திர மாநிலம், அமராவதியிலுள்ள இன்ஸ்டிட்யூட்டில் பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கான அட்மிஷன் சீட் கிடைத்திருக்கிறது. அமராவதியில் கிடைத்த சீட்டை வேலூர் வி.ஐ.டி-க்கு மாற்றுவதற்காக தரகர்களைச் சந்திக்க முடிவுசெய்தார் தொழில் அதிபர் சஞ்சய்குப்தா. அதற்காக, வேலூரிலுள்ள தனது நண்பர் ரமேஷ் மூலமாக அரியூர் ரயில்வே கேட் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரைச் சந்தித்திருக்கிறார்.

வி.ஐ.டி பல்கலைக்கழகம்
வி.ஐ.டி பல்கலைக்கழகம்

அந்த நபர், வேலூர் கொசப்பேட்டையைச் சேர்ந்த பா.ம.க முன்னாள் நகரச் செயலாளர் வெங்கடேசன் (49) என்பவரை அறிமுகம் செய்துவைத்திருக்கிறார். பா.ம.க பிரமுகர் வெங்கடேசன், ``தனக்கு வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் செல்வாக்கு இருக்கிறது. கண்டிப்பாக அட்மிஷனை மாற்றித் தருகிறேன்’’ என்று தெரிவித்திருக்கிறார். தனது பேச்சை நம்பிய தொழில் அதிபர் சஞ்சய்குப்தாவிடமிருந்து பா.ம.க பிரமுகர் வெங்கடேசன் 5 லட்சம் ரூபாயை கமிஷன் தொகையாகப் பெற்றிருக்கிறார். பணத்தை வாங்கிய பிறகு வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் `சீட்’ வாங்கித் தராமல் காலம் கடத்திய பா.ம.க பிரமுகர் வெங்கடேசன் திடீரென தலைமறைவாகியிருக்கிறார்.

இதேபோல், திருப்பத்தூர் கௌதமபேட்டையைச் சேர்ந்த ஆனந்தி (54) என்ற ஆசிரியையிடமும் அவருடைய மகளுக்குத் தனியார் மருத்துவக் கல்லூரியில் மெடிக்கல் சீட் வாங்கித் தருவதாகக் கூறி 5 லட்சம் ரூபாயை 2015-ம் ஆண்டு பா.ம.க பிரமுகர் வெங்கடேசன் வாங்கிக்கொண்டு மோசடி செய்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக, வேலூர் எஸ்.பி செல்வகுமாரிடம் பணத்தை இழந்த இரு தரப்பினரும் தனித்தனிப் புகார்களைக் கொடுத்தனர். புகார்கள்மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு எஸ்.பி உத்தரவிட்டார். அதன்படி, மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி மகேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் இலக்குவன், கவிதா மற்றும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவந்தனர்.

கைதுசெய்யப்பட்ட வெங்கடேசன்
கைதுசெய்யப்பட்ட வெங்கடேசன்

பா.ம.க பிரமுகர் வெங்கடேசன் பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் நிரூபணமானது. இது குறித்து, வழக்கு பதிவு செய்த போலீஸார், வேலூர் தொரப்பாடியில் பதுங்கியிருந்த வெங்கடேசனை நேற்று கைதுசெய்தனர். தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர். பா.ம.க பிரமுகர் வெங்கடேசனை சிறையிலடைத்த பின்னர் மேலும் இரண்டு மோசடிப் புகார்கள் வந்தன. அவற்றையும் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட குற்றப்பிரிவு போலீஸார், ``பா.ம.க பிரமுகர் வெங்கடேசனிடம் பணத்தை இழந்த நபர்கள் வேறு யாரேனும் இருந்தாலும் தைரியமாக முன்வந்து புகாரளிக்கலாம்’’ என்று தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், பா.ம.க-வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து வெங்கடேசனை அந்தக் கட்சித் தலைமை நீக்கியிருக்கிறது. இது தொடர்பாக, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலின்பேரில் பா.ம.க தலைவர் ஜி.கே.மணி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு