தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள வெள்ளூரைச் சேர்ந்தவர் துரைமுத்து. இவர்மீது நெல்லை மற்றும் தூத்துக்குடியிலுள்ள காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2018-ம் ஆண்டு, ஏப்ரல் 22-ம் தேதி பேட்மாநகரத்தைச் சேர்ந்த வினோத் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோரை முன்விரோதம் காரணமாக ரௌடி துரைப்பாண்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இதற்குப் பழிக்குப் பழியாக துரைமுத்துவின் சகோதரர் கண்ணன் என்பவரை வினோத் தரப்பினர் கொலை செய்தனர்.
இந்நிலையில் மீண்டும் பழிக்குப் பழியாக உயிரிழந்த வினோத்தின் ஆதரவாளர்களைக் கொலை செய்யும் திட்டத்துடன் துரைமுத்து இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தத் தகவலை அறிந்த ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி வெங்கடேசன் தலைமையிலான போலீஸார், ரௌடி துரைமுத்துவை வெள்ளூருக்குத் தேடிச் சென்றிருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஆனால், துரைமுத்து அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இந்நிலையில் துரைமுத்துவின் செல்போன் நம்பரை டிராக் செய்த போலீஸார், டவர் மூலம் மணக்கரை அருகிலுள்ள மலைப்பகுதியில் அவர் இருப்பதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து, டி.எஸ்.பி வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் மணக்கரைப் பகுதிக்குச் சென்றனர்.
போலீஸாரைப் பார்த்ததும், அவர் தப்பியோட முயன்றபோது, கையில் வைத்திருந்த நாட்டுவெடிகுண்டை வீசியதாகக் கூறப்படுகிறது. அப்போது, வெடிகுண்டு கீழே விழுந்து வெடித்ததாகத் தெரிகிறது. இதில், ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தைச் சேர்ந்த சிறப்புக் காவலர் பாலசுப்பிரமணியன் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதேபோல, படுகாயம் அடைந்த ரௌடி துரைமுத்துவும் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இருவரின் உடல்களும் நெல்லை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன. இதையடுத்து மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்திவருகிறார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
காவலர் சுப்பிரமணியன்
காவலர் சுப்பிரமணியன் கடந்த 2017-ம் ஆண்டுதான் காவல்துறையில் பணியில் சேர்ந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகாவுக்கு உட்பட்ட பண்டாரவிளை கிராமத்தைச் சேர்ந்த காவலர் சுப்பிரமணியன், தனது முதல் பணியை ஆழ்வார் திருநகரி காவல்நிலையத்தில்தான் தொடங்கியுள்ளார். பணியில் இணைந்து மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் சமீபத்தில் தனிப் படை பிரிவில் காவலராக பணிமாற்றம் செய்யப்பட்டார்.