Published:Updated:

திருவள்ளுர்: `பக்ரீத் பண்டிகைக்கு 4 ஆடுகள் வேணும்’ - கலர் ஜெராக்ஸ் தாள்; முதியவரை ஏமாற்றிய கும்பல்!

முனுசாமி
முனுசாமி

திருத்தணியில் ஆடு மேய்ப்பவரிடம் ரூபாய் 64,000-க்கு கலர் ஜெராக்ஸ் மூலம் எடுத்த கள்ள ரூபாய்த் தாள்களை வழங்கி, நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீஸார் வலைவீசித் தேடிவருகின்றனர். 

திருவள்ளுர் மாவட்டம், திருத்தணியை அடுத்த ஆற்காடுகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி (55). விவசாயியான இவர் சொந்தமாக 30 ஆடுகளை வைத்துள்ளார். அவற்றை மேய்த்து, வளர்த்து, விற்பனை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தில் தனது குடும்பத்தி நடத்திவருகிறார். இந்தநிலையில், பக்ரீத் பண்டிகை நெருங்கிக்கொண்டிருப்பதால், ஆடு மேய்ச்சலில் அதிக அளவில் ஈடுபட்டுவரும் திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டார மக்கள் கடந்த சில தினங்களாக ஆடு விற்பனை செய்துவருகின்றனர்.

அந்த வகையில், நேற்று முனுசாமியும் தன்னிடமுள்ள ஆடுகளை விற்பனை செய்வதற்காக ஆற்காடுகுப்பம் பகுதியில் நின்றுகொண்டிருந்தார். அப்போது, முனுசாமியைச் சந்தித்த மர்ம நபர்கள் மூன்று பேர் பக்ரீத் பண்டிகைக்கு நான்கு ஆடுகள் தேவைப்படுவதாகக் கூறி பேரம் பேசியுள்ளனர். ஆரம்பத்தில் நான்கு ஆடுகளுக்கு 70,000 ரூபாய் கேட்ட முனுசாமி, பேரத்தின் முடிவில் 64,000 ரூபாய்க்கு ஆடுகளை விற்க ஒப்புக்கொண்டுள்ளார். அதன்படி, முனுசாமியிடமிருந்து நான்கு ஆடுகளை சரக்கு வண்டியில் ஏற்றிக்கொண்டு மர்ம நபர்கள், 32 இரண்டாயிரம் ரூபாய்த் தாள்களை அளித்துவிட்டு அங்கிருந்து சென்றிருக்கின்றனர்.

கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட கள்ள ரூபாய் தாள்கள்
கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட கள்ள ரூபாய் தாள்கள்

அதையடுத்து, ஆடுகளை விற்பனை செய்த மகிழ்ச்சியில் முனுசாமி அருகிலிருந்த வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்துக்கு பணத்தை எடுத்துச் சென்று ஊழியர்களிடம் அப்படியே மொத்தமாக 64,000 ரூபாயை வழங்கியிருக்கிறார். முனுசாமி வழங்கிய ரூபாய்த் தாள்களை கையில் வாங்கிய மாத்திரத்தில், அவை கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட கள்ள நோட்டுகள் என்பதைக் கண்டறிந்த கூட்டுறவு சங்க ஊழியர்கள், படிப்பறிவில்லாத முனுசாமியை விசாரித்து, கள்ளத் தாள்கள் குறித்துக் கூறியிருக்கின்றனர். தான் ஆடுகளை விற்று சம்பாதித்த பணம் முழுவதும் கலர் ஜெர்காஸ் செய்யப்பட்டவை என்பதை அறிந்து அதிர்ந்துபோன முனுசாமி செய்வதறியாது கண்கலங்கிப் போயிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து, முனுசாமி கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் நடந்ததைச் சொல்லி, கண்ணீர்மல்கப் புகாரளித்திருக்கிறார். முனுசாமியிடமிருந்து கலர் ஜெராக்ஸ் செய்யப்பட்ட, 32 இரண்டாயிரம் ரூபாய்த் தாள்களை கைப்பற்றிய போலீஸார் வழக்கு பதிவு செய்து, சரக்கு வண்டியில் ஆடுகளை ஏமாற்றி ஏற்றிச் சென்ற மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

ஆடு மேய்ப்பவரிடம் கலர் ஜெராக்ஸ் செய்த கள்ள ரூபாய்த் தாள்களைக் கொடுத்து, மர்மக் கும்பல் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு