தஞ்சை தெற்கு மாவட்ட தே.மு.தி.க துணைச் செயலாளராகப் பதவி வகித்து வருபவர் ராஜா. இவர், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அண்டோரா தெருவில் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியூர் சென்றிருக்கிறார். இதனால் பூட்டப்பட்ட நிலையிலிருந்த இவரது வீட்டின் கதவு நேற்று முன்தினம் திடீரென திறந்து கிடந்ததைக் கண்டு, அக்கம் பக்கத்தினர் குழப்பம் அடைந்திருக்கிறார்கள். வெளியூர் சென்றிருந்த ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் இன்னும் திரும்பி வரவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு, உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.

அதைத் தொடர்ந்து, ராஜாவின் வீட்டுக்குச் சென்ற காவல்துறையினர், வீடு முழுவதும் சோதனை செய்திருக்கிறார்கள். அப்போது வீட்டின் கதவு திறக்கப்பட்டு அறையிலிருந்த பீரோ உடைக்கப்பட்டுக் கிடந்தது தெரியவந்தது. உடனடியாக தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, ராஜாவின் வீடு மற்றும் அண்டோரா தெருவில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே தகவல் அறிந்து வீடு திரும்பிய ராஜா, தனது வீட்டின் பீரோவிலிருந்த 5 சவரன் தங்க நகை, 60 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் மன்னார்குடி காவல்துறையினர், அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்தப் பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் யாரேனும் நபர்களின் நடமாட்டம் இருந்ததா என மக்களிடமும் விசாரித்து வருகிறார்கள். மிக விரைவில் கொளையர்கள் கைது செய்யப்படுவார்கள் என்கிறார்கள் காவல்துறையினர்.