விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள மாரங்கியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இந்திராணி (வயது-72). இவருக்கு இரண்டு மகன்களும், மூன்று மகள்களும் இருக்கின்றனர். மகன்கள், மகள்கள் அனைவருக்கும் திருமணம் நடைபெற்று வெளியூர்களில் வசித்து வருகின்றனர். இந்திராணியின் கணவர் தாண்டவராயன் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்ட நிலையில், தன்னுடைய ஊரிலேயே தனியாக வசித்து வந்திருக்கிறார். அதே ஊரைச் சேர்ந்த சிவசங்கர் எனும் இளைஞர், கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இந்திராணியின் மகளிடம் 30,000 ரூபாய் கடன் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. இவர், கொள்ளை உள்ளிட்ட கைவரிசை காட்டும் நபராக சந்தேகிக்கும்படி ஊரில் உலாவி வந்ததாகச் சொல்லப்படுகிறது.

இதனால் ஊர் மக்களுடன் தகராறு ஏற்பட்டு சேலம் அருகே இவர் வசித்து வந்திருக்கிறார். அவ்வப்போது ஊருக்கு வரும் இவரிடம், கடன் தொகையை இந்திராணி கேட்டு வந்தாரம். இந்த நிலையில், கடந்த 19-ம் தேதி மாரங்கியூர் வந்த சிவசங்கரிடம் மூதாட்டி இந்திராணி கடனை திருப்பிக் கேட்டதாகவும், கடனை திருப்பித் தருவதாக கூறி தனது வீட்டுக்கு சிவசங்கர் அழைத்துச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.
அதன் பின்னர் இந்திராணி காணாமல் போயிருக்கிறார். எனவே, அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இந்திராணியின் மகன் பன்னீர்செல்வத்துக்கு இது குறித்து தகவல் அளித்துள்ளனர். சொந்த ஊருக்கு வந்த பன்னீர்செல்வம், தன் தாய் தேடிப் பார்த்தும் கிடைக்காததால், திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். புகாரை ஏற்ற காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டபோது, கடைசியாக சிவசங்கருடன் மூதாட்டி பேசிக் கொண்டிருந்தது தெரியவந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில்... மூதாட்டியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்ற சிவசங்கர், அவரைக் கொலைசெய்திருக்கிறார் என்பதும், அவர் அணிந்திருந்த சுமார் 10 சவரன் நகைகளை பறித்துக் கொண்டு, தனது வீட்டின் உள்ளேயே புதைத்துவிட்டு, தலைமறைவாகிவிட்டார் என்பதும் தெரியவந்திருக்கிறது.

இந்த நிலையில் இன்று காலை திருவெண்ணைநல்லூர் தாசில்தார் பாஸ்கரதாஸ் முன்னிலையில், மூதாட்டியின் உடலை தோண்டி எடுத்த காவல்துறையினர், உடற்கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். மேலும் தலைமுறைவாக இருக்கும் சிவசங்கரை தேடி வரும் காவல்துறை அதிகாரிகள், அவர் தாயாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொடுத்த கடனை திருப்பிக் கேட்டதாக கூறப்படும் மூதாட்டியை அழைத்துச் சென்று, கொலைசெய்து சுமார் 10 சவரன் நகைகளை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.