Published:Updated:

“கைச்செலவுக்கு கார்கள்... மற்ற செலவுக்கு லாரிகள்!” - பத்தாண்டு வாகனத் திருடனின் பகீர் வாக்குமூலம்

லாரி
பிரீமியம் ஸ்டோரி
லாரி

வெள்ளை நிறச் சட்டையும், கறுப்பு நிற பேன்ட்டும் அணிந்த டிப்டாப்பான நபர், காரைத் திருடிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

“கைச்செலவுக்கு கார்கள்... மற்ற செலவுக்கு லாரிகள்!” - பத்தாண்டு வாகனத் திருடனின் பகீர் வாக்குமூலம்

வெள்ளை நிறச் சட்டையும், கறுப்பு நிற பேன்ட்டும் அணிந்த டிப்டாப்பான நபர், காரைத் திருடிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

Published:Updated:
லாரி
பிரீமியம் ஸ்டோரி
லாரி

லாரி கிளீனராக வடமாநிலங்களுக்குச் சென்று திரும்பிவரும்போது காரைத் திருட ஆரம்பித்து... பிறகு ட்ரக், டிப்பர், டாரஸ், கன்டெய்னர் என்று திருட்டில் முன்னேறிக்கொண்டே இருந்த ஒரு பலே ‘ஆட்டோமொபைல் அலேக்’ ஆசாமியை தாம்பரம் போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள்.

வெள்ளைச் சட்டை, கறுப்பு பேன்ட்!

‘யூஸ்டு’ கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்துவருகிறார் சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த குமார். கடந்த 2020-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் விற்பனைக்காக குமார் வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சான்ட்ரோ கார் திருடப்பட்டது. இது குறித்து தாம்பரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகேஷ்குமாரிடம் புகாரளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தார்கள். அதில், வெள்ளை நிறச் சட்டையும், கறுப்பு நிற பேன்ட்டும் அணிந்த டிப்டாப்பான நபர், காரைத் திருடிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதற்கிடையில், குரோம்பேட்டையிலும் சான்ட்ரோ கார் ஒன்று திருடுபோனதாக போலீஸாருக்குப் புகார் வந்தது. அதையும் அதே உடையணிந்த நபர் திருடுவதை சிசிடிவி கேமரா மூலம் போலீஸார் கண்டறிந்தனர்.

மணிகண்டன்
மணிகண்டன்

சிசிடிவி-யில் பதிவான உருவத்தை, பழைய குற்றவாளிகளின் படங்களோடு போலீஸார் ஒப்பிட்டுப் பார்த்தனர். அப்போது, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 50 வயதாகும் மணிகண்டன்தான் அது என்பது தெரியவந்தது. உடனடியாக, தமிழகம் முழுவதுமுள்ள காவல் நிலையங்களில் அவனுடைய ரெக்கார்டுகளை ஆய்வுசெய்தார்கள். அப்போதுதான், கடந்த பத்தாண்டுகளாகப் பல்வேறு வழக்குகளில் அவனுக்குத் தொடர்பிருப்பது தெரியவந்தது. கடந்த ஜூலை 1-ம் தேதிதான் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் போலீஸார் பதிவுசெய்த வழக்கில், மணிகண்டன் சிறையிலிருந்து வெளியில் வந்திருந்தான் என்பதையும் அறிந்தனர். உடனடியாக, இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையிலான டீம் மணிகண்டனைப் பிடித்தது.

பிளம்பர் வேலை டு வாகனத் திருட்டு!

குற்றவாளிகளைப் பிடித்த இன்ஸ்பெக்டர் மகேஷ்குமாரிடம் பேசினோம். ‘‘பத்தாம் வகுப்பு வரை படித்த மணிகண்டன், பிளம்பராக வேலை பார்த்து வந்திருக்கிறான். சொந்த ஊரில் வேலை இல்லாததால், துபாய்க்குச் சென்றான். அங்கு நல்ல வருமானம் கிடைத்தது. ஊருக்குச் சந்தோஷமாகத் திரும்பிவந்த மணிகண்டனின் குடும்பத்தில் பிரச்னைக்கு மேல் பிரச்னை. அதனால், வீட்டைவிட்டு வெளியேறியவன் மும்பைக்குச் சென்றான். அப்போதுதான், வாகனங்களைத் திருடும் கும்பலுடன் அவனுக்குப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. 2010-ம் ஆண்டு மும்பையிலிருந்து 13 டாடா சுமோக்களுடன் ஒரு கன்டெய்னர் லாரியை மதுரைக்கு ஒரு கும்பல் கடத்திவந்தது. அந்தத் திருட்டில் உதவியாக இருந்த மணிகண்டனை மும்பை போலீஸார் கைதுசெய்தனர். அதுதான் மணிகண்டன் மீது பதிவுசெய்யப்பட்ட முதல் திருட்டு வழக்கு.

அந்த வழக்கில் சிறைக்குச் சென்ற மணிகண்டனுக்கு உள்ளே வேறு சில குற்றவாளிகளுடன் அறிமுகம் கிடைத்தது. வெளியில் வந்து மீண்டும் 2013-ம் ஆண்டில், ஒரு கார் திருட்டில் சேலம் சிறையில் அடைக்கப்பட்டபோது டிப்பர், டாரஸ் லாரிகளைத் திருடுவதில் கைதேர்ந்த ஒடிசாவைச் சேர்ந்த மைக்கேல் என்பவனின் நட்பு கிடைத்தது. மைக்கேலும் மணிகண்டனும் சேர்ந்து தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களிலும் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் டிப்பர், டாரஸ் லாரிகளைத் திருடி விற்றுவந்திருக்கிறார்கள். அதன் மூலம் கிடைத்த பணத்தில் சொந்த ஊரில் மணிகண்டன் வீடு கட்டியிருக்கிறான்.

திருடப்பட்ட கார்
திருடப்பட்ட கார்
திருடப்பட்ட கார்
திருடப்பட்ட கார்
திருடப்பட்ட கார்

கைச்செலவுக்கு கார்... மற்ற செலவுக்கு லாரிகள்!

மீண்டும் மீண்டும் மாட்டிக்கொண்டாலும், பத்து வருடங்களாக கார் திருடுவதன் பின்னால் என்னதான் இருக்கிறது என்று மணிகண்டனிடமே கேட்டோம். அவன் சொன்னபோதுதான் அதன் பின்னணியே தெரிந்தது. ‘`கார் திருட்டெல்லாம் கைச்செலவுக்குத்தான் சார்... ஹெவி வெயிக்கிள்லாம் திருடினாத்தான் பொழப்பு ஓடும்னு மைக்கேல் சொல்லுவாப்ல. ஆனா, அதுல ஒரு சிரமம் இருந்துச்சு. டிப்பர், டாரஸ், கன்டெய்னரையெல்லாம் நிறுத்திட்டு கொஞ்சம் தூரமான தாபால டிரைவருங்க ரிலாக்ஸா இருப்பாங்க. அப்படியான வண்டிகளைத் தேடுறது சிரமம். நடந்துபோய்த் தேட முடியாது. அதுனால நான் வீடுகளுக்கு முன்னாடி நிக்கிற கார் எதுனா திருடிட்டு மைக்கேலுக்கு போன் போடுவேன். அவன் சொல்ற ஸ்பாட்டுக்குப் போயிட்டு, ரெண்டு பேருமா ஹெவி வெயிக்கிள் எங்க இருக்கும்னு கார்லயே சுத்தித் தேடுவோம். சமயத்துல 20, 30 கிலோமீட்டர்லேயே சிக்கிரும். சிலசமயம் 150, 200 கிலோமீட்டர்கூட சுத்த வேண்டியிருக்கும். வண்டி சிக்கினதும் மைக்கேல் அதை எடுத்துட்டு வருவாப்ல. நான் முன்னாடி காரை ஓட்டிக்கிட்டுப்போய் எதுனா ஊர்ல கெடைக்கற காசுக்கு காரை வித்துருவேன். அப்புறம் மைக்கேல்கூட வெளிமாநிலம் போய், அந்த வண்டிகளை வித்துட்டு காசப் பிரிச்சுக்குவோம். இப்படி கைச்செலவுக்கும் ரூட் பார்க்கவும் மட்டும்தான் நான் காரைத் திருடறது’’ என்றான் எங்களிடம். அப்போதுதான் இந்த கார் திருட்டுக்குப் பின் இப்படி ஒரு கதை இருப்பது தெரிந்தது.

 “கைச்செலவுக்கு கார்கள்... மற்ற செலவுக்கு லாரிகள்!” - பத்தாண்டு வாகனத் திருடனின் பகீர் வாக்குமூலம்

பல மாநிலங்களில் மொத்தமாக ஐம்பதுக்கும் மேற்பட்ட வாகனங்களை மணிகண்டன் திருடியிருக்கிறான். அவன்மீது மகாராஷ்ட்டிரா, கர்நாடகா, கேரளா, தமிழகத்தில் கோவில்பட்டி, மதுரை, சென்னை உட்பட பல காவல் நிலையங்களில் வாகனத் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. “தெரிஞ்சது திருட்டில் இவன் அடிச்ச இந்த அரை செஞ்சுரி, தெரியாமல் எத்தனையோ?” என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism