Published:Updated:

`புதையல்; போதையில் உளறல்; துப்பாக்கி முனையில் கொலை!’- கூலிப்படையுடன் சிக்கிய போலீஸ் அதிகாரி மகன்

போலீஸ் அதிகாரி மகன் அருண்பாண்டியன்
போலீஸ் அதிகாரி மகன் அருண்பாண்டியன்

புதையல் கிடைத்ததாகப் போதையில் உளறிக்கொட்டிய கட்டட மேஸ்திரியைத் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று கொலைசெய்த கூலிப்படை கும்பல் 10 பேரை போலீஸார் கைதுசெய்தனர். 

ராணிப்பேட்டை மாவட்டம், வாழைப்பந்தல் பகுதியை அடுத்த தட்டச்சேரி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (50). கட்டடத் தொழிலாளி. இவரின் மனைவி தேவகி. இவர்களுக்கு கிருஷ்ணன் (25) என்ற ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். மகள்களைத் திருமணம் செய்து கொடுத்த பிறகு மனைவி மகனுடன் 8 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையை அடுத்த தாம்பரம் பகுதியில், வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கினார் முருகன். இந்த நிலையில், கடந்த சில நாள்களாக முருகனிடம் கட்டுக்கட்டாக பணம் புழங்கியது. தினமும் மது குடித்துவிட்டு இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளைச் சர்வ சாதாரணமாகச் செலவழித்துவந்துள்ளார். பார் ஊழியரான முனியாண்டிக்கும் `டிப்ஸை’ வாரி இரைத்துள்ளார். 

கைதுசெய்யப்பட்ட கூலிப்படை கும்பல்
கைதுசெய்யப்பட்ட கூலிப்படை கும்பல்

`முருகனுக்கு இவ்வளவு பணம் எப்படிக் கிடைத்தது’ என்பதைத் தெரிந்துகொள்ள பார் ஊழியர் திட்டமிட்டார். ஒரு நாள் குடிபோதையில் இருந்த முருகனிடம் நைசாக பேச்சுக் கொடுத்தார். அவரும், `சாலையோரம் நடந்துசென்ற தனக்குக் கறுப்பு நிற பையில் புதையல் கிடைத்தது. அதில், பணக் கட்டுகள் இருந்ததாகவும் அதை எடுத்துத்தான் செலவு செய்கிறேன்’ என்றும் கூறியிருக்கிறார். இதைக் கேட்ட பார் ஊழியர் முனியாண்டி, மேற்குத் தாம்பரம் முடிச்சூர் சாலையைச் சேர்ந்த கூலிப்படைத் தலைவனான அருண்பாண்டியன் என்பவரிடம் கூறியுள்ளார். அதையடுத்து, கடந்த 23-ம் தேதி முருகன் மற்றும் அவரின் மனைவி, மகனைத் துப்பாக்கி முனையில் வீடு புகுந்து கூலிப்படை கும்பல் கடத்திச் சென்றது. பணப் பையைக் கேட்டு மிரட்டியதுடன் கடுமையாகத் தாக்கினர். 

`புதையல் எதுவும் தனக்குக் கிடைக்கவில்லை’ என்று கூறவே ஆத்திரமடைந்த கும்பல் பள்ளிக்கரணை பெரிய கோவிலம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு ஷெட்டில் அடைத்துவைத்துத் தாக்கினர். இரும்புக் கம்பியால் கொடூரமாகத் தாக்கியதில் முருகன் உயிரிழந்தார். பின்னர், சடலத்தைக் காரில் தூக்கிப் போட்டுக்கொண்டு அவரின் மனைவி, மகனை துப்பாக்கி முனையில் சொந்த ஊரான வாழைப்பந்தல் பகுதிக்கு அழைத்து வந்தனர். `யாரிடமும் கொலை குறித்து வாயை திறக்கக் கூடாது; உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார் என்றுகூறிப் புதைத்துவிட வேண்டும்; மீறி ஏதாவது செய்தால் இரண்டு பேரையும் துண்டு துண்டாக வெட்டி வீசி விடுவோம்’ என்று மனைவியையும் மகனையும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளனர். 

கைதுசெய்யப்பட்ட கூலிப்படை கும்பல்
கைதுசெய்யப்பட்ட கூலிப்படை கும்பல்

பிணத்தை வீட்டில் இறக்கி வைத்துவிட்டு அவர்களையும் விட்டுச் சென்றது, அந்தக் கொடூர கும்பல். பயந்துபோய் அவர்களும் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். இந்தச் சம்பவத்தை அறிந்த கிராம மக்கள் சிலர், வாழைப்பந்தல் போலீஸாருக்கு ரகசிய தகவல் கொடுத்தனர். விரைந்து சென்ற போலீஸார், சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவி, மகனைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று நடந்த சம்பவம் குறித்துத் துருவித் துருவி விசாரித்தனர். அதன் பிறகே, `எது நடந்தாலும் பரவாயில்லை’ என்று முடிவெடுத்த முருகனின் மகன் கிருஷ்ணன் தங்களுக்கு நேர்ந்த கொடூர சம்பவம் குறித்து விவரித்தார்.

இதையடுத்து, வழக்கு பதிவு செய்த போலீஸார் மேற்குத் தாம்பரம் முடிச்சூர் சாலையைச் சேர்ந்த கூலிப்படைத் தலைவன் அருண்பாண்டியன் (32) மற்றும் பார் ஊழியர் முனியாண்டி (36), கூட்டாளிகள் புருஷோத்தமன் (31), குமார் (37), பாரதி (40), எழில்குமார் (32), சேகர் (29), கந்தன் (38), ஜானகிராமன் (39), விக்னேஷ் (24) ஆகிய 10 பேரை அதிரடியாகக் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து நான்கு கார்களையும் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட கூலிப்படைத் தலைவன் அருண்பாண்டியனின் தந்தை கன்னியப்பன் சென்னை காவல்துறையில் சங்கர் நகர் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிவருகிறார். 

போலீஸ் அதிகாரி மகன் அருண்பாண்டியன் - பார் ஊழியர் முனியாண்டி
போலீஸ் அதிகாரி மகன் அருண்பாண்டியன் - பார் ஊழியர் முனியாண்டி

இந்தக் கொடூர சம்பவத்தை, `த்ரில்லர்’ படக் காட்சிகளையும் மிஞ்சும் அளவுக்குப் பயங்கரமாக அரங்கேற்றியிருக்கிறார்கள். இதற்கு, மூளையாக இருந்துசெயல்பட்டதே சப்-இன்ஸ்பெக்டரின் மகன்தான். தந்தையின் காவல் சீருடையை அணிந்துகொண்டு தன்னையும் காவல் துறை அதிகாரி என்று கூறி பலரை மிரட்டி பணம் பறித்திருக்கிறார் அருண்பாண்டியன்.

இப்போது, நடைபெற்ற கட்டடத் தொழிலாளி கொலை சம்பவத்திலும் முதலில் போலீஸ் சீருடையில்தான் வீட்டுக்குச் சென்று மிரட்டியதாகக் காவல்துறையினர் சொல்கிறார்கள். அதே நேரம், கொலை செய்யப்பட்ட முருகனுக்குப் பை நிறைய பணம் கிடைத்தது உண்மைதானா என்பதும் குறித்தும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர், காவல்துறையினர்.

அடுத்த கட்டுரைக்கு