Election bannerElection banner
Published:Updated:

சென்னை: வீடியோ; மது; கூட்டு பாலியல் வன்கொடுமை! - ஒன்றரை ஆண்டுகளாக சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான கார்த்திக்
பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான கார்த்திக்

பொள்ளாச்சி சம்பவம் போல சென்னையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இரண்டுபேரை போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.

சென்னை மவுன்ட் காவல் சரக பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவருக்கு தந்தை இல்லை. தாய், ஒரு சகோதரி உள்ளனர். வீட்டு வேலை செய்து சிறுமியின் அம்மா, குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். அதனால் சிறுமியும் அவரின் சகோதரியும் வீட்டில் பகலில் தனியாக இருந்து வந்திருக்கின்றனர். இந்தச் சமயத்தில் சிறுமியைக் காதலிப்பதாக தாம்பரத்தை அடுத்த கௌரிவாக்கம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (36) என்பவர் கூறியிருக்கிறார். அதை சிறுமியும் நம்பியிருக்கிறார். சிறுமியின் சகோதரி வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கு வந்த கார்த்திக், சிறுமியிடம் நெருங்கிப் பழகியிருக்கிறார். அதை தன்னுடைய செல்போனில் வீடியோவாக எடுத்திருக்கிறார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
representational image

பின்னர் அந்த வீடியோவை சமூக வலை தளத்தில் வெளியிட்டுவிடுவதாகக் கூறி மிரட்டிய கார்த்திக் தொடர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். கார்த்திக்கின் மிரட்டலுக்குப் பயந்த சிறுமியும் தனக்கு நடந்த கொடுமைகளை தாயிடம் சொல்லாமல் மறைத்து வந்திருக்கிறார். இந்தச் சமயத்தில் கார்த்திக்கின் நண்பரான மணிகண்டனிடம் (30) சிறுமியின் வீடியோவை கார்த்திக் காண்பித்திருக்கிறார். அதைப் பார்த்த மணிகண்டன், சிறுமியைச் சந்தித்து வீடியோவைக் காண்பித்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.

இதையடுத்து கார்த்திக், மணிகண்டன் ஆகியோர் சிறுமி குறித்த தகவலை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த தி.மு.க பிரமுகர் ஒருவரிடம் கூறியிருக்கின்றனர். அதன்பிறகு அவரும் சிறுமியை மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டிருக்கிறார். இவ்வாறு கார்த்திக், மணிகண்டன், தி.மு.க பிரமுகர் என மூன்று பேரால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறுமி பாதிக்கப்பட்டு வந்திருக்கிறார்.

இந்தநிலையில் சில தினங்களுக்கு முன் சிறுமி தனக்கு நடந்த கொடுமைகளை தன்னுடைய தாயாரிடம் கூறி கதறி அழுதிருக்கிறார். அதனால் சிறுமியின் அம்மா, தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் கார்த்திக், மணிகண்டன் ஆகியோரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணைக்குப்பிறகு இருவரையும் போலீஸார் கைது செய்தனர். தி.மு.க பிரமுகரை போலீஸார் தேடிவருகின்றனர். கார்த்திக்கின் செல்போனை போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர். சிறுமிக்கு மருத்துவ பரிசோதனையும் கவுன்சலிங்கும் அளிக்கப்பட்டிருக்கிறது

இளம்பெண் பாலியல் வன்கொடுமை
இளம்பெண் பாலியல் வன்கொடுமை
representational image
சென்னை:காதல் வலை; நம்பிச் சென்ற சிறுமி-கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய காதலன், நண்பர்கள்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கார்த்திக் கூலி வேலை செய்து வருகிறார். சிறுமியை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றியிருக்கிறார். அதன்பிறகு மணிகண்டன், தி.மு.க பிரமுகர் ஆகியோருக்கு சிறுமியை கார்த்திக் அறிமுகப்படுத்தியிருக்கிறார். சிறுமிக்கு மது கொடுத்து அவரிடம் மூன்று பேரும் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி கூறினார். சில தினங்களுக்கு முன் சிறுமியை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கார்த்திக், மணிகண்டன் அழைத்துச் சென்றிருக்கின்றனர். அப்போது அவர்களிடமிருந்து தப்பித்த சிறுமி ஓடி வந்திருக்கிறார். அப்போதுதான் சிறுமியை மீட்ட பெண் ஒருவர், அவரிடம் விசாரித்திருக்கிறார். அப்போதுகூட சிறுமி மதுபோதையில் இருந்திருக்கிறார். போதை தெளிந்தபிறகு சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கார்த்திக், மணிகண்டனைக் கைது செய்திருக்கிறோம். மணிகண்டன், ஒரு சமுதாயக் கட்சியில் பொறுப்பிலிருக்கிறார். தலைமறைவாக இருப்பவர், தி.மு.கவில் உள்ளார்" என்றனர்.

சென்னையில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு