Published:Updated:

கம்யூனிஸ்ட் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு; திடீர் திருப்பமாக இருவர் கைது!

திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டியில் கம்யூனிஸ்ட் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்ட வழக்கில், போலீஸார் இருவரைக் கைதுசெய்திருக்கின்றனர்.

கம்யூனிஸ்ட் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு; திடீர் திருப்பமாக இருவர் கைது!

திருத்துறைப்பூண்டியில் கம்யூனிஸ்ட் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்ட வழக்கில், போலீஸார் இருவரைக் கைதுசெய்திருக்கின்றனர்.

Published:Updated:
திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி நகர்மன்றத் துணைத் தலைவராக தி.மு.க நகரச் செயலாளரும், 5-வது வார்டு கவுன்சிலருமான ஆர்.எஸ்.பாண்டியன் தேர்ந்தெடுக்கப்படுவார் என அந்தப் பகுதி தி.மு.க-வினர் மத்தியில் பரவலாகப் பேச்சு நிலவியது. ஆனால், தி.மு.க தலைமை அந்தப் பதவியைத் தனது கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்தது. இதனால் தி.மு.க-வினர் மத்தியில் கடும் அதிருப்தி உருவானது. இங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு கவுன்சிலர்கள் மட்டுமே இருக்கும் நிலையில், துணைத் தலைவர் பதவியை அந்தக் கட்சிக்குக் கொடுப்பது எந்தவிதத்திலும் நியாயமில்லை என ஆதங்கப்பட்டார்கள். ஆனாலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளராக இருந்த ரகுராமனின் மனைவியும், 11-வது வார்டு கவுன்சிலருமான ராமலோக ஈஸ்வரி, நகர்மன்றத் துணைத் தலைவர் வேட்பாளராக அந்தக் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டார்.

பெட்ரோல் குண்டு வீச்சு
பெட்ரோல் குண்டு வீச்சு
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில்தான், மறைமுகத் தேர்தல் அன்று அதிகாலை திருத்துறைப்பூண்டி ஈ.சி.ஆர் சாலையில் அமைந்துள்ள ரகுராமன் -ராமலோக ஈஸ்வரி வீட்டின் காம்பவுண்ட் சுவர்மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டதாகத் தகவல் கிளம்பி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காம்பவுண்ட் சுவர் தீப்பற்றி எரிந்த நிலையில் இருந்தது. அதேசமயம் வேறு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணையில் இறங்கினர். ஆனால், அதில் தொடர்புடைய நபர்கள் யாரும் கண்டுபிடிக்கப்படவில்லை. துணைத் தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க மனம் இல்லாத தி.மு.க நகரச் செயலாளர் ஆ.எஸ்.பாண்டியன்தான், தங்களை அச்சுறுத்த மர்ம நபர்கள் மூலம் பெட்ரோல் குண்டு வீசியதாக, சி.பி.எம் கட்சியின் ரகுராமன் தரப்பினர் குற்றம்சாட்டினார்கள்.

ஜெயராஜ்
ஜெயராஜ்

ஆனால், தங்களுக்கு இதில் சம்பந்தமில்லை எனவும், இது திட்டமிட்ட நாடகம் எனவும் தி.மு.க-வினர் மறுத்துவந்தார்கள். இந்த விவகாரம் மேலும் சூடுபிடிக்கும் வகையில், சி.பி.எம் நகரச் செயலாளர் பதவியிலிருந்து ரகுராமன் மாற்றப்பட்டார். மேலும் நகர்மன்ற துணைத் தலைவர் பதவியை, இவர் மனைவிக்கு வழங்காமல், தங்களது கட்சியைச் சேர்ந்த வேறொரு கவுன்சிலருக்கு வழங்கியது சி.பி.எம் தலைமை. ரகசிய விசாரணை மேற்கொண்டதாகவும், அதில் உண்மை தெரியவந்ததால்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, தி.மு.க-வினர் சர்ச்சையைக் கிளப்பினார்கள். ஆனால், அந்தக் கட்சியின் மேலிடத் தலைவர்கள், `ரகுராமன் மிகவும் மென்மையானவர். அவர் எந்த ஒரு தவறும் செய்யவில்லை. நகரச் செயலாளர் பதவியிலிருந்து அவர் மாற்றப்பட்டது, இயல்பாக நடக்கக்கூடியதுதான்' என்றனர். இதனால் இந்த வழக்கில் கடந்த மூன்று மாதங்களாக, மர்மம் நீடித்துவந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில்தான், தற்போது திடீர் திருப்பமாக இந்த வழக்கு தொடர்பாக திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் ஜெயராஜ், கமல்ஹாசன் ஆகிய இருவரைக் கைதுசெய்திருக்கிறார்கள். ஜெயராஜ் என்பவர் திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள மீனாட்சி வாய்க்கால் தெருவில் வசிப்பவர். இவர் கூலித் தொழிலாளர். கைதுசெய்யப்பட்டிருக்கும் மற்றொரு நபரான கமல்ஹாசன், காட்டுநாயக்கன் தெருவில் வசிப்பவர். இவர் வாடகை வேன் ஒட்டுநராகப் பணியாற்றிவந்தார். இந்த இருவரும் சேர்ந்துதான், கம்யூனிஸ்ட் பிரமுகர் ரகுராமன் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாகக் காவல்துறையினர் குற்றம்சாட்டுகிறார்கள்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

``தி.மு.க-வினர் சொல்லியோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சொல்லியோ, நாங்கள் இந்த குற்றச்செயலில் ஈடுபடவில்லை. தி.மு.க-வினருக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, நாங்களேதான் ரகுராமன் வீட்டில் பெட்ரோல் குண்டை வெடிக்கச் செய்தோம்" என இருவரும் வாக்குமூலம் அளித்திருப்பதாகக் காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள். ஆனாலும்கூட, இந்த வழக்கு தொடர்பான சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. ``கைதுசெய்யப்பட்டிருக்கும் இரு நபர்களும் கம்யூனிஸ்ட் பிரமுகர் ரகுராமனின் நெருங்கிய நண்பர்கள்... இதைவைத்தே உண்மையில் என்ன நடந்திருக்கும் என யூகித்துக்கொள்ளலாம்" என்கிறார்கள் அந்தப் பகுதி தி.மு.க-வினர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism