Published:Updated:

மன்னார்குடி: புதுச்சேரி மது பாட்டிலில், கள்ளச்சாராயம் விற்பனை! - போலீஸாரிடம் சிக்கியது எப்படி?

காவல்துறையினர் அவர்களிடமிருந்து கள்ளச்சாராயம், புதுச்சேரி ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காலி மது பாட்டில்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் போலி மது தயாரித்து விற்பனை செய்த இரண்டு பேரை போலீஸார் வழக்கு பதிவு செய்து, கைதுசெய்திருக்கின்றனர். முன்னதாக கடந்த ஜூலை 2-ம் தேதி, திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆலிவலம் பகுதியில் மதுவிலக்கு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, சந்தேகத்துக்கு இடமான வகையில் இளைஞர்கள் இரண்டு பேர் இரு சக்கர வாகனத்தில் எதிரில் வந்திருக்கின்றனர். போலீஸாரைக் கண்டதும், வேகமாகக் கடந்து செல்ல முயன்றவர்களைத் தடுத்து நிறுத்தி விசாரித்தபோது, இருவரும் மழுப்பலாகப் பதிலளித்திருக்கின்றனர். அதையடுத்து, போலீஸார் இருவரையும் சோதனை செய்திருக்கின்றனர்.

மது பாட்டில்களைக் கடத்திவந்த இரண்டு பேர் கைது
மது பாட்டில்களைக் கடத்திவந்த இரண்டு பேர் கைது

அப்போது, இருவரும் தங்கள் உடலில் வெள்ளை நிற டேப்பைப் பயன்படுத்தி 48 மது பாட்டில்களைக் கடத்திவந்தது தெரியவந்தது. அதையடுத்து, மது பாட்டில்களைப் பறிமுதல் செய்த போலீஸார், இருவரையும் வழக்கு பதிவு செய்து, கைது செய்யாமல் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மதுவிலக்கு போலீஸாரை பணியிடைநீக்கம் செய்து, தஞ்சை சரக டி.ஐ.ஜி நடவடிக்கை மேற்கொண்டார். மேலும் உடலில் டேப் சுற்றி மதுபாட்டில்களைக் கடத்திவந்தவர்களையும் உடனடியாகக் கைதுசெய்ய உத்தரவிட்டார். அதையடுத்து, மது பாட்டில்களைக் கடத்திவந்த இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டனர்.

மன்னார்குடி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் `புதுச்சேரி மது’ என்ற பெயரில் போலி மது பாட்டில்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டுவருவதாகவும், இதைக் காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மன்னார்குடியில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் சத்தியமூர்த்தி என்பவர் தலைமையில், போலி மது தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டுவருவதாகத் திருவாரூர் மாவட்ட காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது. அதையடுத்து, தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது, சத்தியமூர்த்தியும் அவர் ஆட்களும் சிக்கியிருக்கின்றனர். காவல்துறையினர் அவர்களிடமிருந்து கள்ளச்சாராயம், புதுச்சேரி ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காலி மது பாட்டில்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

கள்ளச்சாராயம்
கள்ளச்சாராயம்

இது தொடர்பாக நம்மிடம் பேசிய காவல்துறையினர், ``மன்னார்குடி மேலநத்தம் வடக்குத் தெருவைச் சேர்ந்த சத்தியமூர்த்தியும், அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரும் கூட்டாகச் சேர்ந்து கள்ளச்சாராயம் தயார் செய்துவந்திருக்கிறார்கள். புதுச்சேரி மாநிலத்தில் கிடைக்கக்கூடிய காலி மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி வந்து, அதில் கள்ளச்சாராயத்தை ஊற்றி விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 140 லிட்டர் சாராயம் மற்றும் 150 மி.லி கொள்ளளவுகொண்ட புதுச்சேரி மாநில காலி மது பாட்டில்களைப் பறிமுதல் செய்திருக்கிறோம். மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்திய இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்திருக்கிறோம்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு