Published:Updated:

தஞ்சாவூர்: காவலர்களால் அழைத்துச் செல்லப்பட்ட 3 இளைஞர்கள்! - கதறும் உறவினர்கள்

கைது

மூன்று பேருடைய மனைவியரும் உறவினர்களும் வல்லம் காவல் நிலையத்துக்கு வந்தனர். திருந்தி வாழும் மூன்று பேர் மீதும் போலீஸார் பொய் வழக்கு போட்டு கைதுசெய்திருப்பதாகக் குற்றம்சாட்டினர்.

தஞ்சாவூர்: காவலர்களால் அழைத்துச் செல்லப்பட்ட 3 இளைஞர்கள்! - கதறும் உறவினர்கள்

மூன்று பேருடைய மனைவியரும் உறவினர்களும் வல்லம் காவல் நிலையத்துக்கு வந்தனர். திருந்தி வாழும் மூன்று பேர் மீதும் போலீஸார் பொய் வழக்கு போட்டு கைதுசெய்திருப்பதாகக் குற்றம்சாட்டினர்.

Published:Updated:
கைது

தஞ்சாவூர் அருகே பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை, திருட்டு வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்வதாகக் கூறி போலீஸ் அழைத்து சென்ற நிலையில், அவர்களில் இருவரை மட்டும் போலீஸார் ரிமாண்ட் செய்துள்ளனர். ஒருவரின் நிலை என்னவென்று தெரியவில்லை என்றும், போலீஸ் அவர்களை அடித்துச் சித்ரவதை செய்ததாகவும் அவர்களின் உறவினர்கள் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

போலீஸ் ஸ்டேஷன் முன்பு உறவினர்கள்
போலீஸ் ஸ்டேஷன் முன்பு உறவினர்கள்

தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அருகே உள்ள எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார். அவரின் மனைவி ராணி. கடந்த 1-ம் தேதி இருவரும் வல்லம் பகுதியிலுள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் டூ வீலருக்கு பெட்ரோல் போட்டுக்கொண்டிருந்த போது தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸார் விசாரணை என்ற பெயரில் கணவன், மனைவி இருவரையும் அழைத்துச் சென்றுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொடர்ந்து 2-ம் தேதி ராஜ்குமாரின் அண்ணன் விஜயனுக்கு போன் செய்த போலீஸ், காணாமல்போன உங்களோட டூ வீலர் கிடைத்துவிட்டது. ஆர்சி புக் உள்ளிட்ட ஆதாரங்களைக் காட்டிவிட்டு வாங்கிச் செல்லுங்கள் என அழைத்துள்ளனர். உடல் நிலை முடியாமல் இருந்த விஜயன், தன் மனைவி சரோஜாவையும் அழைத்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றிருக்கிறார்.

முகநூல் மோசடி, கைது
முகநூல் மோசடி, கைது

இதேபோல் முனையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் இரும்புக்கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த நிலையில் கடைக்குச் சென்று அவரையும் அழைத்துச் சென்றனர். மூன்று பேரையும் தனித் தனி இடங்களில்வைத்து விசாரித்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜ்குமாரைத் தவிர மற்ற இரண்டு பேரையும் போலீஸார் ரிமாண்ட் செய்துள்ளனர். ராஜ்குமார் நிலை என்னவென்று தெரியவில்லை. அவர்களின் உறவினர்கள் போலீஸாரிடம் கேட்டதற்கும் முறையான பதில் சொல்லவில்லை எனக் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதைத் தொடர்ந்து மூன்று பேருடைய மனைவியரும், உறவினர்களும் வல்லம் காவல் நிலையத்துக்கு வந்தனர். அவர்கள், `திருந்தி வாழும் மூன்று பேர் மீதும் போலீஸார் பொய் வழக்கு போட்டு கைதுசெய்துள்ளதாக’ குற்றம்சாட்டினர். இந்த விவகாரத்தை விட்னஸ் ஃபார் ஜஸ்டிஸ் என்ற அமைப்பு கையில் எடுத்திருக்கிறது. குற்றத்தை ஒப்புக்கொள்ள வைப்பதற்காக மூன்று பேரையும் போலீஸ் அடித்து சித்ரவதை செய்திருப்பதாக `ஜெம் பீம்’ திரைப்படத்தில் வருவது போன்றே நடந்திருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அவர்கள் கூறிவருகின்றனர்.

உறவினர்கள்
உறவினர்கள்

இது குறித்து ராஜ்குமாரின் மனைவி ராணி கூறுகையில், ``நானும் என் கணவரும் ஆட்டுக்கல் வியாபாரம் செய்துவருகிறோம். விசாரணை என்ற பெயரில் போலீஸ் எங்களை அழைத்துச் சென்றனர். என்னைத் தனியாக இருக்க வைத்துவிட்டு என் கணவர் ராஜ்குமாரை மட்டும் வேறு இடத்துக்கு அழைத்துச் சென்றனர். நீண்ட நேரமாகியும் அவரைத் திரும்ப அழைத்து வரவில்லை. நான் கேட்டதற்கும் சரியாக பதில் சொல்லவில்லை.

பின்னர் என்னை ஹோம் ஒன்றில் தங்கவைத்தனர். `என் வீட்டுக்காரர் எங்கே, நாங்க எந்தத் தப்பும் செய்யலை. அப்புறம் ஏன் எங்களை ப்பிடிச்சு சித்ரவதை செய்றீங்க... என்னைய எதுக்கு ஹோமுல தங்கவெக்குறீங்கனு?’ கேட்டேன். விசாரணை முடிந்த பிறகு அனுப்பிவிடுகிறோம்னு சொன்னாங்க. அதன் பிறகு மேலும் இரண்டு பேரைக் கைது செய்திருக்காங்க.

ரெண்டு பேரை மட்டும் சிறையில போட்டிருக்காங்க. என் கணவர் என்ன ஆனார், எங்கே இருக்கிறார் எனத் தெரியவில்லை. போலீஸ் எங்களை நிம்மதியாவே வாழவிட மாட்டாங்கபோல” எனக் கண்கலங்கினார். விஜயனின் மனைவி சரோஜா கூறுகையில், ``காணாமல்போன டூ வீலர் கிடைத்துவிட்டது, வாங்கிக்க வாங்கன்னு சொன்னதுனால ஒன்றரை வயது குழந்தையை தூக்காம நானும் என் கணவரும் மட்டும் ஸ்டேஷனுக்குப் போனோம்.

போலீஸ் அவரை மட்டும் தனியா அழைச்சுக்கிட்டு போனாங்க. என்னை ஸ்டேஷன்ல உட்காரவெச்சுட்டாங்க. `ஒன்றரை வயசுப் பையனை வீட்டுல விட்டுட்டு வந்துட்டேன். என்னைக் காணாம தவிச்சுப்போயிருவான். என்னையாவது அனுப்புங்க’னு நேரம் ஆக ஆக போலீஸ்கிட்ட கெஞ்சினேன். அவங்க மனசு இரங்கவே இல்லை. இரவாகியும் நாங்க வீட்டுக்குப் போகாததுனால பையனை தூக்கிக்கிட்டு எங்க சொந்தகாரவங்க ஸ்டேஷனுக்கு வந்துட்டாங்க. பிறகு என்னை ராணியைவெச்சிருந்த அதே ஹோமுல இருக்கவெச்சாங்க. என்ன தப்புக்காக விசாரிக்குறீங்க... எதுவா இருந்தாலும் சொல்லிட்டுச் செய்யுங்கனு சொன்னதுக்கு அமைதியாகவே இருந்தாங்க போலீஸ். அதிகாரம் படைத்த போலீஸுக்கு எங்க குரல் கேட்கவா போகுது...” என்று கலங்கினார்.

போலீஸ் ஸ்டேஷனில்
போலீஸ் ஸ்டேஷனில்

விட்னஸ் ஃபார் ஜஸ்டிஸ் என்ற அமைப்பின் செயல் இயக்குநர் ஜெயசுதாவிடம் பேசினோம். ``மூன்று பேரையும் கைதுசெய்த போலீஸ் அவர்கள்மீது முறையாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்காமல், தனித் தனியாக ரகசிய இடத்தில்வைத்து விசாரித்துள்ளனர். எங்கே வைத்து விசாரிக்கிறோம் என்ற விவரத்தை அவர்களது மனைவிக்குக்கூட தெரியப்படுத்தவில்லை. போலீஸ் குற்றத்தை ஒப்புக்கொள்ள வைப்பதற்காக மூன்று பேரையும் அடித்து சித்ரவதை செய்திருப்பதாகத் தெரிகிறது.

எங்கு வைத்திருந்தனர் என்பது தெரியாததால் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எஸ்.பி ரவளி பிரியா, திருவையாறு தொகுதி திமுக எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன் ஆகியோர் கவனத்துக்கு இதைக் கொண்டு சென்றோம். அதன் பிறகும் எங்கு இருக்கிறார்கள் என்பது கேள்விகுறியாக இருந்த நிலையில் விஜயன், பரமசிவத்தை மட்டும் ரிமாண்ட் செய்துள்ளனர். ராஜ்குமார் நிலை என்னவென்று தெரியவில்லை. போலீஸ் ஏன் அவரை மறைக்கிறார்கள் என்பதும் புரியவில்லை” என்றார்.

வல்லம் டி.எஸ்.பி பிருந்தாவிடம் பேசினோம். ``பழைய திருட்டு வழக்கு ஒன்றில் தலைமறைவாக இருந்த ராஜ்குமார் உள்ளிட்டவர்களைக் கைதுசெய்திருக்கிறோம். ராஜ்குமார் திருட்டில் ஈடுப்பட்டபோது பொதுமக்களே அவரது டூ வீலரை பிடித்துக் கொடுத்திருந்தனர். மேலும் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகவைத்தும் விசாரணை நடத்தினோம். அவர்களிடமிருந்து நகைகள் ரெக்கவரி செய்திருக்கிறோம். மூன்று பேரையும் ரிமாண்ட் செய்யவிருக்கிறோம்” என்றார். ஆனால் இரண்டு பேர் மட்டும் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism