Published:Updated:

கறி வெட்டும் கத்தி... சிசிடிவி காட்சிகள்! - எஸ்.ஐ கொலையில் 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது

`எஸ்.ஐ பூமிநாதன் துரத்திச் செல்லும் வாகனம் பல்சர் என்றும், சிறிய வயது இளைஞர்கள் ஓட்டிச்செல்வதும் தெரியவந்தது.’

``கொலை செய்யப் பயன்படுத்தப்படும் அரிவாளால் அவ்வளவு எளிதாக மண்டை ஓடு உடையாது. தடிமனான கறி வெட்டப் பயன்படுத்தப்படும் அரிவாளைக்கொண்டு எஸ்.ஐ பூமிநாதனை வெட்டியிருக்கலாம். அதுவும் சிறு வயது இளைஞர்கள் இந்தக் கொலையைச் செய்திருக்கலாம்" என்று போலீஸார் சந்தேகம் தெரிவித்திருந்த நிலையில், எஸ்.ஐ பூமிநாதனின் கொலை வழக்கில் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அதிகாலையில் நடந்த கொலை
அதிகாலையில் நடந்த கொலை

திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலையத்தில் எஸ்.ஐ-யாகப் பணியாற்றிவந்தவர் பூமிநாதன். இவர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வழக்கம்போல் நவல்பட்டு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, நான்கு பேர் கொண்ட கும்பல் இரண்டு டூ வீலர்களில் ஆடுகளுடன் வந்திருக்கிறார்கள். இதைப் பார்த்த எஸ்.ஐ பூமிநாதன் அந்த நபர்களைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார். ஆனால், அவர்கள் டூ வீலர்களை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றிருக்கின்றனர்.

அதையடுத்து, எஸ்.ஐ பூமிநாதன், அவர்கள் ஆடுகளைத் திருடி வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், வாக்கி டாக்கியில் சக போலீஸாருக்குத் தகவலைச் சொல்லிவிட்டு அவர்களை டூ வீலரில் விரட்டிச் சென்றிருக்கிறார். அந்த நபர்கள் திருச்சி - புதுக்கோட்டை, களமாவூர் ரயில்வே கேட் பகுதியிலிருக்கும் பள்ளப்பட்டி என்ற கிராமத்துக்குச் சென்றபோது,

படுகொலை செய்யப்பட்ட எஸ்.ஐ பூமிநாதன்
படுகொலை செய்யப்பட்ட எஸ்.ஐ பூமிநாதன்

பூமிநாதன் ஒரு டூ வீலரில் சென்ற இருவரைப் பிடித்திருக்கிறார். இந்தத் தகவலை உடனே நவல்பட்டு போலீஸாருக்கும் தெரிவித்திருக்கிறார். அப்போது பின்தொடர்ந்து வந்த ஆடு திருடர்கள், இருவரையும் விட்டுவிடுமாறு எஸ்.ஐ பூமிநாதனை மிரட்டியிருக்கின்றனர். அதற்கு பூமிநாதன் முடியாது எனச் சொல்ல, அவர்கள் மறைத்துவைத்திருந்த அரிவாளால் அவரைச் சரமாரியாக வெட்டியிருக்கின்றனர். படுகாயமடைந்த எஸ்.ஐ பூமிநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில், அவரின் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, தமிழக சட்டம், ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி தாமரைக்கண்ணன், மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன் உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனிருந்தனர்.

போலீஸார்
போலீஸார்

அங்கு பூமிநாதன் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி மரியாதை செய்த நிலையில், பூமிநாதன் உடல் சோழமாதேவியில் உள்ள அவரின் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், அவரின் உடல் 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

உயர் அதிகாரிகள் அஞ்சலி
உயர் அதிகாரிகள் அஞ்சலி

பின்பு பத்திரிகையாளர்களிடம் பேசிய டி.ஐ.ஜி சரவண சுந்தர், ``ஆடு திருடர்களைத் துரத்திச் சென்றபோது இந்தத் துயரச் சம்பவம் எதிர்பாராவிதமாக நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாகக் கண்டுபிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிசிடிவி ஆதாரங்களைக் கொண்டு விசாரித்துவருகிறோம். அதில் ஒருசில தகவல்களும் கிடைத்துள்ளன. கூடிய விரைவில் குற்றவாளிகளைக் கைது செய்துவிடுவோம்” என்றார்.

இந்த வழக்கை விசாரித்துவரும் காவலர்களிடம் பேசினோம். "எஸ்.ஐ பூமிநாதனை வெட்டியது ஆடு திருடும் கும்பல்தான் என்பது தெளிவாகத் தெரிகிறது. பூமிநாதன் அவரின் டூ வீலரில் மற்றொரு இரு சக்கர வாகனத்தைத் துரத்திச் செல்லும் சிசிடிவி பதிவு எங்களுக்குக் கிடைத்துள்ளது.

21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அதில், எஸ்.ஐ பூமிநாதன் துரத்திச் செல்லும் வாகனம் பல்சர் என்றும், அதுவும் சிறிய வயது இளைஞர்கள் ஓட்டிச்செல்வதும் தெரியவந்துள்ளது. அதேபோல் எஸ்.ஐ-யின் பின்தலையில் மண்டை ஓடு உடையும் அளவிலான கூர்மையாகவும், தடிமனான ஆயுதத்தால் தாக்கியதால் அவரின் மண்டை ஓடு உடைந்திருக்கிறது என்று மருத்துவர்கள் தரப்பில் சொல்லியிருக்கிறார்கள்.

எஸ்.ஐ பூமிநாதன் கொலை
எஸ்.ஐ பூமிநாதன் கொலை

கொலைசெய்யப் பயன்படுத்தப்படும் அரிவாளால் அவ்வளவு எளிதாக மண்டை ஓடு உடையாது. தடிமனான அரிவாளால் வெட்டியதால்தான் மண்டை ஓடு உடைந்துள்ளது. அந்த அரிவாள் ஏன் கறிக்கடைக்குப் பயன்படுத்தும் கத்தியாக இருக்கக் கூடாது என்கிற சந்தேகம் எழுகிறது. அதோடு சிசிடிவி மற்றும் கால் டிரேஸ் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் மூலமாக விசாரித்துக்கொண்டிருக்கிறோம். கூடிய விரைவில் குற்றவாளிகளைப் பிடித்துவிடுவோம்” என்றனர்.

இந்த நிலையில், இந்தக் கொலை வழக்கில் இரண்டு சிறுவர்கள் உட்பட நான்கு பேர் தனிப்படை போலீஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். தஞ்சாவூர், புதுக்கோட்டையைச் சேர்ந்த சிறுவர்கள், 19 வயது இளைஞர் ஒருவர் என நான்கு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு