Published:Updated:

`50 லட்ச ரூபாய் கொடு, இல்லைன்னா..சடலம்கூட கிடைக்காது!’- அதிகாலையில் கடத்தப்பட்ட வேலூர் தொழிலதிபர்

ரியல் எஸ்டேட் அதிபர் அருள்
ரியல் எஸ்டேட் அதிபர் அருள்

ஏலகிரி மலை ரியல் எஸ்டேட் அதிபரை, ஆந்திர-கர்நாடக மாநில எல்லையில் விடுவித்துத் தப்பிச்சென்றது கடத்தல் கும்பல்.

வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலை அத்தனாவூரைச் சேர்ந்தவர் அருள் (50). கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம் செய்யும் அளவுக்குப் பெரிய அளவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார். இவரின் மனைவி சந்திரா, மகன் ராபின் (23). தினமும் விடியற்காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வது அருளின் வழக்கம்.

நேற்று அதிகாலை வாக்கிங் சென்ற அவரை கொட்டையூர் வட்டம் என்ற இடத்தில் காரில் வந்த முகமூடி கும்பல் திடீரென சுற்றி வளைத்தது. அவரின் தலையில் கறுப்புத் துணியைப் போர்த்தி கடத்திச் சென்றது கும்பல். 

ஏலகிரி மலை
ஏலகிரி மலை

வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், பதறிப்போன குடும்பத்தினர் அருளின் செல்போன் எண்ணுக்குப் போன் செய்தனர். பலமுறை தொடர்புகொண்டும் அவர் போனை எடுக்காததால், சந்தேகமடைந்து தேடிச் சென்றனர். அந்தநேரம் பார்த்து, அருளின் செல் நம்பரிலிருந்து மகன் ராபினுக்கு போன் வந்தது. எதிர்முனையில் பேசிய அருள், ‘என்னை மர்ம நபர்கள் யாரோ கடத்திவிட்டனர். உடனே 10 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு ஆந்திர மாநிலம் குப்பம் பகுதிக்கு வா' எனக் கூறிவிட்டு லைனைத் துண்டித்துவிட்டார்.

இதைக்கேட்டு ராபினும் குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்தனர். என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்த அவர்களுக்கு மீண்டும் அருளின் செல் நம்பரிலிருந்து போன் வந்தது. இந்த முறை கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவன் மட்டும் பேசியிருக்கிறான். ‘50 லட்சம் ரூபாயைக் கொடுத்தால் மட்டுமே அருளை விடுவிப்போம். கேட்ட தொகையைக் கொடுக்காமல் போலீஸிடம் போனால் கொலை செய்துவிடுவோம். சடலம்கூட வந்து சேராது’ என்று மிரட்டினான். இதனால், பதறிப்போன அருளின் குடும்பத்தினர் உடனடியாக ஏலகிரி மலை போலீஸில் புகார் அளித்தனர். 

ஏலகிரி மலை காவல் நிலையம்
ஏலகிரி மலை காவல் நிலையம்

திருப்பத்தூர் டி.எஸ்.பி தங்கவேல் தலைமையில் மூன்று தனிப்படை போலீஸார் அருளை மீட்கக் களமிறங்கினர். குப்பம் பகுதிக்கு நேற்று மதியம் இரண்டு மணிக்கு விரைந்த போலீஸார், அருளின் செல் நம்பர் சிக்னலைத் தொடர்ந்து ஆய்வு செய்தனர். போலீஸார் பின்தொடர்வதை தெரிந்துகொண்ட கடத்தல் கும்பல், குப்பம் அருகில் உள்ள கர்நாடகா மாநிலம் பங்காருபேட்டை எல்லைப் பகுதியில் அருளை விடுவித்துவிட்டுத் தப்பிச்சென்றது. இதனையடுத்து, அருள் தன் மகனுக்குப் போன் செய்து, ஆந்திர-கர்நாடகா மாநில எல்லையில் உட்கார்ந்திருப்பதாகக் கூறினார். 

தனிப்படை போலீஸார் இரவு 8.30 மணியளவில் அங்கு சென்று அருளைப் பத்திரமாக மீட்டனர். போலீஸாரிடம் பேசிய அருள், ‘கடத்தல் கும்பல் என்னைத் துன்புறுத்தவோ, தாக்கவோ இல்லை’ எனத் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, குப்பம் அரசு மருத்துவமனை அருகில் நின்றிருந்த நான்கு பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர்கள், வாணியம்பாடியைச் சேர்ந்த நதீம் அகமது (32), தபரேஷ் அகமது (37), பெங்களூருவைச் சேர்ந்த வினோத் (29), பிரபு (32) என்பது தெரியவந்தது. முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால், ‘இவர்கள்தான் கடத்தல் கும்பலாக இருப்பார்கள்’ எனப் போலீஸார் சந்தேகித்தனர்.

ரியல் எஸ்டேட் அதிபர் அருள்
ரியல் எஸ்டேட் அதிபர் அருள்

தனிப்படை போலீஸார் அந்த 4 பேரையும் காரில் ஏற்றிக்கொண்டு நள்ளிரவு 1 மணிக்கு ஜோலார்பேட்டைக்கு வந்துசேர்ந்தனர்.

பணம் பறிக்கும் திட்டம் அல்லது கொடுக்கல் வாங்கல் தகராறில் ரியல் எஸ்டேட் அதிபர் அருள் கடத்தப்பட்டாரா.. என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய நபர்கள் யாரும் பிடிபடாததால், சந்தேகத்தின்பேரில் அழைத்துவரப்பட்ட நபர்களைக் கஸ்டடியில் வைத்துள்ளனர். மீட்கப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் அருள், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அடுத்த கட்டுரைக்கு