தஞ்சாவூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை பார்த்துவருகிறார். அந்த இளம்பெண்ணின் பக்கத்து ஊரில் வசிப்பவர் கொடியரசன். இருவரும் ஒன்றாகப் பள்ளியில் படித்ததாகச் சொல்லப்படுகிறது. அதனால் இளம்பெண்ணுடன் கொடியரசன் நட்பாகப் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 11-ம் தேதி இரவு வேலை முடிந்த பிறகு ஊருக்குச் செல்ல இருந்த இளம்பெண்ணை கொடியரசன், ``நான் ஊருக்குத்தான் போறேன்... வா கொண்டு வந்து விடுகிறேன்" என அழைத்திருக்கிறார். பள்ளியில் கூடப் படித்த நண்பன்தானே என இளம்பெண்ணும் அவரது பைக்கில் ஏறிச் சென்றிருக்கிறார். ஆனால் கொடியரசன் இளம்பெண்ணை அவருடைய ஊரில் இறக்கிவிடாமல், அருகே இருந்த முந்திரிக்காட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

அங்கு ஏற்கெனவே கொடியரசனின் நண்பர்களான மூன்று பேர் மறைந்து இருந்திருக்கின்றனர். பின்னர் கொடியரசன் உள்ளிட்ட நான்கு பேரும் சேர்ந்து அந்த இளம்பெண்ணை மிரட்டி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து இந்த விஷயத்தை வெளியே சொல்லக் கூடாது என அந்தப் பெண்ணை மிரட்டி அனுப்பிவைத்திருக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதனால் நடந்த சம்பவத்தை அந்த இளம்பெண் தன் குடும்பத்தைச் சேர்ந்த யாரிடமும் சொல்லவில்லை. இந்த நிலையில், இந்த விவகாரம் எப்படியோ இளம்பெண்ணின் உறவினர் ஒருவருக்குத் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து அந்தப் பெண்ணின் உறவினர்கள் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர். புகாரை விசாரித்த போலீஸார், இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த நான்கு பேரையும் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இது குறித்து நம்மிடம் பேசிய மகளிர் அமைப்பைச் சேர்ந்த பெண் ஒருவர், ``பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த அந்த இளம்பெண்ணை, மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த நான்கு நண்பர்கள் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். இதை வெளியே சொல்லக் கூடாது எனவும் மிரட்டியிருக்கின்றனர். இந்த நிலையில், இந்த விவகாரம் வெளியே தெரியவந்ததையடுத்து புகார் அளிக்கப்பட்ட பின்னர்... நான்கு பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

இந்த விவகாரத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த சில மாற்றுச் சமூகத்தினர் பஞ்சாயத்துப் பேசி மறைக்க முயன்றிருக்கின்றனர். அவர்கள் குறித்தும் போலீஸ் விசாரிக்க வேண்டும். ஐந்து பேர் மீது வழக்கு பதியப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் நான்கு பேர் மட்டுமே கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். இந்த வழக்கில் சிலரைக் காப்பாற்ற போலீஸ் மெனக்கெடுவது போன்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்படுகிறது. இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமைக்குக் காரணமானவர்கள், துணைபோனவர்கள் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இது குறித்து வல்லம் டி.எஸ்.பி பிருந்தாவிடம் பேச அவருக்கு போன் செய்தோம். ஆனால், அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. அவர் விளக்கமளிக்கும் பட்சத்தில் அதை உரிய பரிசீலனைக்குப் பின்னர் பதிவிடத் தயாராக இருக்கிறோம்.