Published:Updated:

கன்னியாகுமரி: ப்ளஸ் ஒன் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்; வாலிபரும் அவர் நண்பர்களும் கைது!

பாலியல் அத்துமீறல்
பாலியல் அத்துமீறல் ( Representational Image )

மாணவிக்கு 18 வயது நிறைவடையாததால், சிறுமியைக் காதலிப்பதாக ஏமாற்றி சிறார் வதை கொடுத்ததாக ஆல்டோ மைக்கேல் டோனிக் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகேயுள்ள அனந்தபாலம் பகுதியைச் சேர்ந்தவர் ஆல்டோ மைக்கேல் டோனிக் (22). இவருக்கும் வாணிய குடியைச் சேர்ந்த ப்ளஸ் ஒன் மாணவி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் போனிலும் நேரிலும் சந்தித்துப் பேசுவது வழக்கம். இந்தநிலையில் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்ளலாம் என மாணவியிடம் ஆல்டோ மைக்கேல் டோனிக் கூறியுள்ளார். இதையடுத்து ஆல்டோ மைக்கேல் டோனிக் கடந்த சில தினங்களுக்கு முன் மாணவியை நாகர்கோவில் அருகேயுள்ள உலக்கை அருவி பகுதியிலுள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்த வீட்டில் வைத்து மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

 கைதுசெய்யப்பட்டவர்கள்
கைதுசெய்யப்பட்டவர்கள்

இதற்கிடையில் காலையில் வீட்டைவிட்டு வெளியே சென்ற மகள் இரவு ஆன பின்பும் வீடு திரும்பாததால், அந்த மாணவியின் தாய் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்துள்ளார். எங்கும் மகளைக் காணாததால் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் தாய் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தினர். துரிதமாக விசாரணை நடத்திய அனைத்து மகளிர் போலீஸார் உலக்கை அருவி பகுதியில் மாணவி இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

அங்கு சென்ற போலீஸார் மாணவியை மீட்டதுடன், அவரை அழைத்துச் சென்ற ஆல்டோ மைக்கேல் டோனிக்கைக் கைதுசெய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். மாணவிக்கு 18 வயது நிறைவடையாததால், சிறுமியைக் காதலிப்பதாக ஏமாற்றி பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்துக்காக ஆல்டோ மைக்கேல் டோனிக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆல்டோ மைக்கேல் டோனிக்குக்கு உலக்கை அருவியில் வீடு எடுத்துக் கொடுக்க உதவிய அவருடைய நண்பர்களான கோட்டார் பகுதியைச் சேர்ந்த சூர்யா, கிஷோர் குமார், காட்வின் மேஸ்வாக் ஆகிய மூன்று பேரையும் போலீஸார் கைதுசெய்தனர். இதில் சூர்யா என்பவரின் தாத்தாவின் வீட்டில் மூன்று நாள்களாக ஆல்டோ மைக்கேல் டோனிக்கும், மாணவியும் தங்கியிருந்தது தெரியவந்தது.

கைது
கைது
Representational Image

கைதுசெய்யப்பட்ட நால்வரும் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட ப்ளஸ் ஒன் மாணவிக்கு கன்னியாகுமரி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சிறுமியைக் காதல் வலையில் வீழ்த்தி பாலியல் தொல்லை கொடுத்தவரும், அதற்கு உதவிய நண்பர்களும் கைதுசெய்யப்பட்ட சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு