Published:Updated:

இந்திய கம்யூனிஸ்ட் பிரமுகர் படுகொலை! - 24 மணி நேரத்துக்குள் 5 பேரைக் கைதுசெய்த காவல்துறை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சி.மகேந்திரன், பழனிசாமி, மன்னார்குடித் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சிவபுண்ணியம் உள்ளிட்டோர் நடேச தமிழார்வனின் உடலுக்கு மரியாதை செலுத்தினார்கள்.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் பகுதியைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் பிரமுகர் நடேச தமிழார்வன் நேற்று மாலை மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியிலுள்ள வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருப்பதோடு, போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருக்கிறது. மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன், தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் பரேஷ்குமார், திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

வேறு ஏதேனும் அசம்பாவிதச் சம்பவங்கள் நிகழாமல் தடுக்க, நீடாமங்கலம் முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். கொலையாளிகளைப் பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் இந்தக் கொலைச் சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, ஐந்து பேரைக் கைதுசெய்திருக்கிறார்கள்.

நடேச தமிழார்வனுக்கு அஞ்சலி செலுத்தும் முத்தரசன்
நடேச தமிழார்வனுக்கு அஞ்சலி செலுத்தும் முத்தரசன்

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகேயுள்ள ஒளிமதி கிராமத்தைச் சேர்ந்தவர் நடேச தமிழார்வன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் பகுதியின் ஒன்றியச் செயலாளராகவும், திருவாரூர் மாவட்டக்குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்துவந்தார். வீட்டு வசதி வாரிய உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். நடேச தமிழார்வன், நேற்று மாலை நீடாமங்கலத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிக்குத் தனது காரில் வந்து இறங்கியிருக்கிறார்.

திருவாரூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர் வெட்டிக் கொலை! - நீடாமங்கலத்தில் பதற்றம்

அப்போது அந்தப் பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள், அரிவாளால் நடேச தமிழார்வனைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு, தப்பியோடிக்கிறார்கள்.

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடேச தமிழார்வனின் உடல், பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இங்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சி.மகேந்திரன், பழனிசாமி, மன்னார்குடி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சிவபுண்ணியம் உள்ளிட்டோர் நடேச தமிழார்வனின் உடலுக்கு மரியாதை செலுத்தினார்கள். நடேச தமிழார்வன், முன் விரோதம் காரணமாகப் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் தீவிர விசாரணையையும், கொலையாளிகளைப் பிடிக்க, தேடுதல் வேட்டையையும் முடுக்கிவிட்ட காவல்துறையினர், இந்தக் கொலையில் தொடர்புடையதாகக் குற்றம்சாட்டப்பட்ட ஐந்து பேரைக் கைதுசெய்துள்ளனர். இன்று காலை 7 மணியளவில் நீடாமங்கலம் அருகேயுள்ள மூணாறு தலைப்பில் தலைமறைவாக இருந்த ராஜ்குமார், மாதவன், மனோஜ், சேனா என்கிற சேனாதிபதி, எழிலரசன் ஆகிய ஐந்து பேரைக் கைதுசெய்தனர். இது குறித்துப் பேசும் காவல்துறையினர், ``நீடாமங்கலம் அக்ரஹார பூவனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமாருக்கும், நடேச தமிழார்வனுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.

நடேச தமிழார்வன்
நடேச தமிழார்வன்

இதன் காரணமாகவே ராஜ்குமார் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, இந்தப் படுகொலைச் சம்பவத்தை நிகழ்த்தியிருக்கிறார். இவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறோம். ராஜ்குமார் மீது நீடாமங்கலம் காவல் நிலையத்தில் ஏற்கெனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்குத் தொந்தரவு கொடுத்ததாகக் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராஜ்குமார், பிணையில் வந்த நிலையில், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, நடேச தமிழார்வனைப் படுகொலை செய்திருக்கிறார்’’ என்கின்றனர். கொலைச் சம்பவம் நிகழ்ந்த 24 மணிநேரத்துக்குள், இதில் தொடர்புடையதாகக் குற்றம்சாட்டப்படும் ஐந்து நபர்களை மடக்கிப் பிடித்ததற்காக, தனிப்படையினருக்கு மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு