Published:Updated:

கோடிகளில் டீலிங்: துப்பாக்கிமுனையில் வீடு புகுந்து தொழிலதிபரைக் கடத்திய கும்பல் - சிக்கியது எப்படி?

வீடு புகுந்து தொழிலதிபரைக் கடத்திய கும்பல்

பட்டப்பகலில் வீடு புகுந்து தொழிலதிபரைக் கடத்திய வழக்கில் சிறைக்காவலர் உட்பட ஆறு பேரை போலீஸார் கைதுசெய்து தொழிலதிபரை உயிரோடு மீட்டனர்.

கோடிகளில் டீலிங்: துப்பாக்கிமுனையில் வீடு புகுந்து தொழிலதிபரைக் கடத்திய கும்பல் - சிக்கியது எப்படி?

பட்டப்பகலில் வீடு புகுந்து தொழிலதிபரைக் கடத்திய வழக்கில் சிறைக்காவலர் உட்பட ஆறு பேரை போலீஸார் கைதுசெய்து தொழிலதிபரை உயிரோடு மீட்டனர்.

Published:Updated:
வீடு புகுந்து தொழிலதிபரைக் கடத்திய கும்பல்

சென்னை தி.நகர் ராமசாமி தெருவைச் சேர்ந்தவர் முத்துகுமரன். இவர், கடந்த 20.8.2022-ம் தேதி மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் ``நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்துவருகிறேன். எனக்கு சரவணன், பாலமுருகன் என இரண்டு தம்பிகள். நாங்கள் மூன்று பேரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறோம். கடந்த 20.8.2022-ம் தேதி ராமசாமி தெருவிலுள்ள அம்மா வீட்டுக்கு நான் வந்தேன். அப்போது `TN 42 m 2588' என்ற பதிவு எண்கொண்ட சொகுசு கார் ஒன்று வீட்டின் முன் நின்றது. மேலும் வீட்டு வாசலில் நிறைய செருப்புகள் கிடந்தன. வீட்டுக்கு வெளியில் இருந்த வேலைக்காரர்கள் சுபா, சத்யாவிடம் யார் வந்திருக்கிறார்கள் என விசாரித்தேன். அப்போது அவர்கள், சரவணன் அய்யாவைப் பார்க்க சிலர் வந்திருப்பதாகக் கூறினர்.

சிறைக் காவலர் நாகேந்திரன்
சிறைக் காவலர் நாகேந்திரன்

இந்தச் சமயத்தில் வீட்டுக்குள்ளிருந்து சத்தம் கேட்டதால் நான் பதற்றமடைந்து உள்ளே சென்றேன். ஹாலில் யாருமில்லை. என் தம்பி சரவணனின் படுக்கையறையின் கதவைத் திறந்து வெளியில் வந்த ஒருவன், நான் அணிந்திருந்த நான்கரை சவரன் செயினைப் பறித்துக்கொண்டான். பின்னர் என்னையும் அந்தக் கும்பல் சுற்றி வளைத்துக்கொண்டது. அடுத்து, சரவணன்மீது ஏறி உட்காந்து அந்தக் கும்பல் அடித்தது. அப்போது ஏற்கெனவே எனக்குத் தெரிந்த ஆரோக்கியராஜ், `பணத்தை தர மாட்டியா?' என்று தம்பி சரவணனிடம் கேட்டான். அப்போதுதான் என் தம்பிக்கும் அவனுக்கும் ஏதோ பண பிரச்னை இருக்கிறது என்று எனக்குத் தெரிந்தது.

இந்தச் சமயத்தில் சத்தம் கேட்டு என்னுடைய அம்மா அங்கு வந்தார். அவரையும் பக்கத்து அறையில் அந்தக் கும்பல் அடைத்துவைத்துப் பூட்டியது. இதையடுத்து எங்களைப் பார்த்து, `சத்தம் போட்டால்... உன் அம்மாவைக் கொலை செய்துவிடுவோம்' என்று அந்தக் கும்பல் மிரட்டியது. பிறகு அறையிலிருந்த தங்க நகைகள், விலையுயர்ந்த பொருள்கள் ஆகியவற்றை அங்கிருந்த ஒரு துணியில் கட்டி அந்தக் கும்பல் எடுத்துக்கொண்டது. என்னையும் தம்பி சரவணனையும் மாறி மாறி அடித்த அந்தக் கும்பல், `வாயை மூடுங்கடா. இல்லைன்னா சுட்டுடுவோம்' எனத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியது.

பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள்
பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள்

அப்போது என் தம்பி சரவணன், `என் அண்ணனை விட்டுவிடுங்கள்' எனக் கூறினான். அதனால் என் தம்பியின் வாயில் டேப் போட்டு ஒட்டி வெளியில் அழைத்துச் சென்ற ஆரோக்கிய ராஜ், எங்களிடம், `நாங்கள் இந்த ஏரியாவைத் தாண்டும் வரை யாரும் வெளியில் வரக் கூடாது' என்று மிரட்டிவிட்டுச் சென்றான். அப்போது வேலைக்காரம்மா சுபா, போனை எடுத்து போலீஸுக்குத் தகவலைச் சொல்ல முயன்றபோது, அவரையும் தாக்கிய கும்பல் செல்போனையும் பறித்துச் சென்றது. சிறிது நேரத்துக்குப் பிறகு நான் அறையைத் திறந்து வெளியில் வந்தேன். பின்னர் என் அம்மாவை அடைத்துவைத்திருந்த அறையைத் திறந்து வாசலுக்கு வந்து பார்த்தேன். அப்போது எங்களது பி.எம்.டபுள்யூ கார், பென்ஸ் கார் மற்றும் என் தம்பியையும் அந்தக் கும்பல் கடத்திச் சென்றிருந்தது. எனவே, என் தம்பியைக் கடத்தியவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 147, 341, 364 ஏ, 453, 384,397 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினார்.

இதையடுத்து சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா மேற்பார்வையில் துணை கமிஷனர் ஆதர்ஷ், உதவி கமிஷனர் பாரதிராஜா தலைமையில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரங்கநாதன், சரவணக்குமார், மகாலிங்கம் ஆகியோர்கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார், சரவணனின் செல்போன் சிக்னலை ஆய்வுசெய்தனர். அதோடு தி.நகர் வீட்டிலிருந்து கடத்தல் கும்பல் காரில் சென்றதை சிசிடிவி மூலம் கண்காணித்தனர். அப்போது சரவணனைக் கடத்திய கும்பல், காரில் ஓ.எம்.ஆர். சாலையில் சென்றுகொண்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக அந்தப் பகுதியில் உள்ள காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், கடத்தல் கும்பலை வழிமறித்து மடக்கிப் பிடித்தனர்.

சுருள் வாள்கள்
சுருள் வாள்கள்

அதோடு கடத்தல் கும்பலிடமிருந்து சரவணன் உயிரோடு மீட்கப்பட்டார். இந்தக் கடத்தல் சம்பவத்தில் மயிலாடுதுறையைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் (42), கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்த்குரு (23), திருப்பூரைச் சேர்ந்த அப்ரோஸ் (23), மதுரையைச் சேர்ந்த அஜய் (24), மதுரை கே.புதூரைச் சேர்ந்த விஜயபாண்டி (25), கோவை, சிறைக் காவலர் குடியிருப்பைச் சேர்ந்த நாகேந்திரன் (31) ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீஸார் கைதுசெய்து விலையுயர்ந்த கார்கள், ஏழு செல்போன்கள், லேப்டாப், பொம்மைத் துப்பாக்கிகள், தோட்டாக்கள், கத்திகள், சுருள்வாள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். இந்தக் கடத்தல் சம்பவம் கோடி ரூபாய் டீலிங் காரணமாக நடந்தது விசாரணையில் தெரியவந்தது. கடத்தப்பட்ட பி.எம்.டபுள்யூ காரிலிருந்த ஜி.பி.ஆர்.எஸ் கருவி மூலம் போலீஸார் பின்தொடர்ந்து சென்று கடத்தல் கும்பலை செம்மஞ்சேரி செக் போஸ்ட்டில் வைத்து பிடித்திருக்கின்றனர். கடத்தல் கும்பலிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். அப்போது அவர்கள், பெண் டாக்டர் ஒருவரின் பெயரைச் சொல்லியிருக்கின்றனர். அதனால் அவரிடமும் விசாரணை நடத்த போலீஸார் முடிவுசெய்திருக்கின்றனர்.