கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே இருக்கிறது ஜல்லிபட்டி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் என்கிற காளியப்பன். இவர், பால் வண்டியில் டிரைவராக வேலைப் பார்த்து வருகிறார். ஜல்லிப்பட்டிக்கு அருகே இருக்கும் ஆலமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் கோமதி (வயது 19). இவர், கரூர் அருகே உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. வீட்டுக்குத் தெரியாமல் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், தங்கள் வீடுகளில் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கமாட்டார்கள் என்று நினைத்துள்ளனர். அதனால், கடந்த 26-ம் தேதி இருவரும் வீட்டுக்குத் தெரியாமல் சென்று திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. திருமணம் செய்துகொண்ட இளம் ஜோடிகள் வெள்ளியணை காவல்நிலையத்தில் கடந்த 27-ம் தேதி தஞ்சமடைந்தனர்.

இருதரப்பு பெற்றோர்களையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. கோமதி, காளியப்பனோடு சேர்ந்து வாழ்வதாக உறுதியாகக் கூறியதால், பெண்வீட்டார் தங்களுக்கும், தங்கள் பெண்ணுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்களாம். அதையடுத்து மணமக்கள், மணமகன் குடும்பத்துடன் சென்று விட்டனர். மணமக்கள், மணமகன் கார்த்திக்கின் உறவினர் வாங்கலாயி என்பவரின் ஏமூர் புதூரிலுள்ள வீட்டில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், பெண் வீட்டைச் சேர்ந்தவர்கள் நள்ளிரவில் இரு ஆம்னி காரில் வந்து, கார்த்திக், கோமதி இருவரையும் வாயைப் பொத்தி தூக்கிக் கொண்டு, கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அவர்களை இந்த திருமணம் பிடிக்காத கோமதியின் தந்தை கிருஷ்ணமூர்த்திதான் கடத்திச் செல்ல முக்கிய நபராக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், கார்த்திக்கின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், கடத்தப்பட்ட மணமக்களையும், அவர்களை கடத்திச் சென்ற நபர்களையும் வெள்ளியணை காவல்நிலைய போலீஸார் தீவிரமாக தேடிவந்தனர். போலீஸாரின் விசாரணையில், கலப்பு திருமணம் செய்துகொண்ட கோமதியின் உறவினர்கள், அவரது தந்தையின் உதவியுடன் மணமக்கள் இருவரையும் கடத்தி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, கடத்தலில் ஈடுபட்டதாக கோமதியின் தந்தை கிருஷ்ணமூர்த்தி (45), தாய்மாமன் கோவிந்தராஜ் (36), அர்ஜுனன்(29), முருகேசன்(44), சண்முகம்(35), செல்வம் என்கிற குப்புசாமி(46), பாலசுப்பிரமணி((36) என 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பின்னர், கரூர் நீதிமன்றத்தில் அவர்கள் 8 பேரையும் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மணமக்களை கடத்திய பெண் வீட்டார், மணமகன் கார்த்திக்கை அடித்து, மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடத்தப்பட்ட மணக்களையும் போலீஸார் மீட்டனர். கலப்பு திருமணம் செய்துகொண்ட மணமக்களை பெண் வீட்டார் கடத்திய சம்பவம், அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.