திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகேயுள்ள சாலையூர் நால் ரோட்டைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் மனைவி பெயர் கலையரசி. இந்தத் தம்பதிக்கு ராமசந்திரன் என்ற மகனும், தனு என்ற மகளும் இருக்கின்றனர். ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் இருவருடைய வீட்டில் கடந்த 26-ம் தேதி புகுந்த முகமூடிக் கொள்ளையர்கள், கத்தியைக் காட்டி மிரட்டி 43 பவுன் தங்கநகைகள் மற்றும் 18 லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்றனர். இது தொடர்பாக வேடசந்தூர் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவந்தனர்.

சீனிவாசன் இடம் வாங்குவதற்காக பூந்தமல்லியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தரகர் தீனதயாளனிடம் 4 லட்சம் ரூபாய் முன்பணம் கொடுத்திருக்கிறார். அப்போது தீனதயாளனின் தோழியான மதுரையைச் சேர்ந்த ஜோதிக்கு சீனிவாசன் வீட்டில் நகை, பணம் நிறைய வைத்திருப்பது தெரியவந்திருக்கிறது. அதையடுத்து, அவர் காவல்துறையில் பணிநீக்கம் செய்யப்பட்ட செல்வக்குமார் என்பவருடன் சேர்ந்து, சேலம், நாமக்கல், ஓசூர் ஆகிய பகுதிகளிலிருந்து கூலிப்படையினரை வரவழைத்து சீனிவாசன் வீட்டில் கொள்ளையடித்தது தெரியவந்தது.
இது குறித்து வேடசந்தூர் போலீஸாரிடம் விசாரித்தோம். ``இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக முதற்கட்டமாக, செல்வக்குமார், ஜோதி, தீனதயாளன், சிராஜூன், சதீஷ், சுரேஷ், ரகு, பாஸ்கர் உள்ளிட்ட 8 பேரைக் கைதுசெய்திருக்கிறோம். அவர்களிடமிருந்து ஒன்றரை லட்சம் ரூபாய், 21 பவுன் நகை, கொள்ளைக்குப் பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இந்தக் கொள்ளைக்கு மூளையாகச் செயல்பட்ட ஜோதியிடமிருந்து போலி நிருபர் அட்டை, மனித உரிமைகள் கழக அட்டையும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருப்பவர்களைத் தேடிவருகிறோம்.மேலும், அவர்கள் சீனிவாசன் வீட்டில் கொள்ளையடித்துவிட்டு, வாணியம்பாடி பகுதியில் 5 கோடி ரூபாய் ஹவாலா பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்ததும் தெரியவந்திருக்கிறது.

தீனதயாளன் சர்வதேச மனித உரிமைகள் கழக மதுரை மண்டல பொதுச்செயலாளராக இருக்கிறார். இவரின் தோழி மதுரை, உத்தப்ப நாயக்கனூரைச் சேர்ந்த ஜோதி என்பவர் மனித உரிமைகள் கழகத்தின் மாவட்டச் செயலாளராக இருக்கிறார். இவர்கள் மீது பல்வேறு புகார்கள் இருக்கின்றன" என்றனர்.