Published:Updated:

`குடிநீர்க் குழாயில் கழுவப்பட்ட கத்தி!' - தட்டிக் கேட்ட தாய், மகனுக்கு சென்னையில் நேர்ந்த கொடூரம்

கைது
கைது ( மாதிரிப் படம் )

சென்னை ஆழ்வார்பேட்டையில் குடிநீர்க் குழாயில் ரத்தக்கறை படிந்த கத்தியைக் கழுவிய ரவுடி கும்பலைத் தட்டிக் கேட்ட தாய், மகனுக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது.

சென்னை ஆழ்வார்பேட்டை, பருவா நகர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் அறம்மாள். இவர், வீட்டின் அருகே குடிநீர்க் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு 8 பேர் கும்பலாக வந்தனர். அதில் ஒருவர் ரத்தக்கறை படிந்த ஒரு அடி நீளமான கத்தி மற்றும் தனது கைகளைக் குடிநீரில் கழுவினார். அதைப்பார்த்த அறம்மாள் அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர், `குடிக்கவே தண்ணீர் இல்லாத நேரத்தில் கத்தியைக் கழுவுகிறாயே?' என்று கேட்டுள்ளார்.

`ஃபேஸ்புக் லைவ்; ரவுண்ட் கட்டப்பட்ட சென்னை ரௌடி' - ஒரே இரவில் நடந்த 2 அதிர்ச்சி சம்பவங்கள்

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அந்த நபர், அறம்மாளைக் கத்தியால் சரமாரியாக வெட்டினார். அதைத் தடுக்க வந்த அறம்மாளின் மகன் அருணையும் அந்த நபர் வெட்டியுள்ளார். பின்னர் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. ரத்தவெள்ளத்தில் மிதந்த இருவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார், தாய், மகனை வெட்டியவர்கள் குறித்த விவரங்களைச் சேகரித்தனர். விசாரணையில் அறம்மாளைக் கத்தியால் வெட்டியது மணி என்கிற வாண்டுமணி என்றும் அவரின் கூட்டாளிகளான தேனாம்பேட்டை ரவுடிகள் அஜித், சூர்யா, ஜீவா, பிரகாஷ், குள்ளா, விக்கி, மணி ஆகியோர் எனத் தெரியவந்தது. அவர்களைப் பிடிக்க தேனாம்பேட்டை இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. வாண்டுமணி, அஜித், சூர்யா ஆகிய மூவரும் ஒரே பைக்கில் தஞ்சாவூருக்குத் தப்பிச்சென்றதும் அதில் அஜித் மட்டும் திண்டிவனத்தில் இறங்கி தப்பியோடியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

`மறுமணத்துக்கு முன் மலர்ந்த நட்பு; நகையை இழந்த சென்னைப் பெண்!' - அதிர்ச்சி கொடுத்த 2 செல்போன்கள்
வாண்டு மணி
வாண்டு மணி

இதையடுத்து தஞ்சாவூர் மற்றும் திண்டிவனத்துக்கு போலீஸார் விரைந்து சென்றனர். அங்கு பதுங்கியிருந்த அஜித், சூர்யா, வாண்டுமணி மற்றும் தேனாம்பேட்டையில் பதுங்கியிருந்த ஜீவா, பிரகாஷ், குள்ளா, விக்கி, மணி என 8 பேரையும் போலீஸார் சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கைது செய்யப்பட்ட 8 பேரும் கடந்த 29- ம் தேதியன்று காலையில் 3 பைக்குகளில் சென்று தொடர் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். பரங்கிமலையில் ஒருவரை அரிவாளால் வெட்டிக் கொள்ளையடித்த கையோடு, கிண்டியைச் சேர்ந்த கூரியர் நிறுவன ஊழியர்கள் விக்ரம், சிலம்பரசன் ஆகியோரைக் கத்தியைக்காட்டி மிரட்டி செல்போனைப் பறிக்க முயன்றுள்ளனர்.

அவர்கள் செல்போனைத் தர மறுத்ததால் அவர்களை 8 பேரும் சரமாரியாக கத்தியால் வெட்டிவிட்டு அவர்களது பைக் மற்றும் செல்போனைப் பறித்துள்ளனர். பிறகு 8 பேரும் ஆழ்வார்பேட்டையில் உள்ள பருவா நகர்க் குடியிருப்பு வந்து அறம்மாளிடம் தகராறில் ஈடுபட்டு வெட்டியுள்ளனர். இந்த ரவுடிக் கும்பலிடமிருந்து 4 செல்போன்கள், 3 கத்தி மற்றும் பைக்குகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

அஜித்
அஜித்

வாண்டு மணி, அஜித் மீது சென்னையில் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, அடிதடி உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. காயமடைந்த சிலம்பரசன், விக்ரம், அறம்மாள், அருண் ஆகிய 4 பேரும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கைது செய்யப்பட்ட 8 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு