Published:Updated:

`குடிபோதையில் அவதூறாகப் பேசினார்; தீர்த்துக் கட்டினோம்’ - நெல்லை போலீஸை அதிரவைத்த கொலையாளிகள்

கொலையான மாசாணமூர்த்தி
கொலையான மாசாணமூர்த்தி

`குடிபோதையில் படுத்துக் கிடந்த மாசாணமூர்த்தியை வீட்டுக்குப் போகச் சொன்னோம். போதையில் இருந்த அவர் அவதூறாகப் பேசினார். நாங்களும் குடித்திருந்ததால் அவரை அடித்தோம். அவரும் திருப்பி அடித்ததால் அரிவாளால் வெட்டிக் கொன்றோம்'. 

நெல்லையை அடுத்த கரையிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் டிரைவர் மாசாணமூர்த்தி. கடந்த 15-ம் தேதி பொங்கல் தினத்தன்று நண்பர் ஒருவர் அழைத்ததால் வீட்டில் இருந்து வெளியே சென்றிருக்கிறார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. 

Vikatan

அதனால் பதற்றம் அடைந்த அவரது மனைவி கிருஷ்ணவேணி , தன் கணவரைக் காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தச்சநல்லூர் காவல்துறையினர் விசாரணை நடத்திவந்த நிலையில், அப்பகுதி வயல்வெளி ஒன்றில் உள்ள கிணற்றில் ஆயில் மற்றும் பெட்ரோல் மிதந்ததால் மாசானமூர்த்தியின் பைக் உள்ளே கிடக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர்.

வயல்வெளிக்கு அருகில் உள்ள காட்டில் புதிதாகக் குழி தோண்டிய இடத்தையும் போலீஸார் கண்டுபிடித்தனர். அதனால் அந்த இடத்தில் வருவாய்த்துறையினர் முன்னிலையில் தோண்டிப் பார்த்தபோது மாசாணமூர்த்தியின் உடல் கிடைத்தது. அவரது உடல் அங்கேயே உடற்கூறு ஆய்வு செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

உறவினர்கள்
உறவினர்கள்

மாசாணமூத்தியின் உடலில் வெட்டுக் காயங்கள் இருந்தன. அவரது பைக், கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. அதனால் அவரைக் கொலை செய்தது யார் என்பது குறித்து விசாரணை நடந்தது. அந்தப் பகுதியைச் சேர்ந்த பலரையும் விசாரித்தபோது, கொலை செய்தது 10 பேர் கொண்ட குழுவினர் என்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக ஆறுமுகம், விஜய், பேச்சிராஜா, நவநீதகிருஷ்ணன், மகேந்திரன், மாரியப்பன், வசந்தகுமார், தினேஷ், கார்த்தி ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தக் கொலையில் தொடர்புடைய மற்றொருவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

கைது செய்யப்பட்ட 9 பேர்
கைது செய்யப்பட்ட 9 பேர்

கைது செய்யப்பட்டவர்கள் அனைவருமே 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள். அவர்கள் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ``மாசாணமூர்த்தியும் சிலரும் ஒதுக்குப்புறமான இடத்தில் மது குடித்திருக்கிறார்கள். அதன்பின்னர் மாசாணமூர்த்தியால் எழுந்திருக்க முடியாததால், மற்றவர்கள் அவரை அங்கேயே விட்டுச் சென்று விட்டார்கள். நாங்களும் அதே இடத்துக்குச் சென்று மது குடித்தோம்.

போதையில் இருந்த நாங்கள், மாசாணமூர்த்தியை எழுப்பி ஊருக்குச் செல்லச் சொன்னோம். ஆனால், எங்களை அவதூறாகப் பேசினார். அதனால் மதுக் குடித்துக் கொண்டிருந்த எங்களுக்கும் அவருக்கும் கைகலப்பானது. அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தோம்.

தோண்டி எடுக்கப்பட்ட உடல்
தோண்டி எடுக்கப்பட்ட உடல்

அதன் பிறகு அவரது உடலை குழிதோண்டிப் புதைத்தோம். இரு சக்கர வாகனத்தை அருகில் இருந்த கிணற்றுக்குள் வீசினோம். ஆனால், அதிலிருந்த ஆயில் மற்றும் பெட்ரோல் மிதந்ததால் ஏற்பட்ட சந்தேகத்தில் உடலைத் தோண்டி எடுத்து விட்டார்கள். தனிப்படை போலீஸார் எங்களை தனித்தனியாக அழைத்து விசாரித்தபோது மாட்டிக் கொண்டோம்’’ என்று தெரிவித்தார்கள். விசாரணைக்குப் பின் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பின் செல்ல