Election bannerElection banner
Published:Updated:

ஆவடி: பிரார்த்தனைக்கு வந்த பெண்ணிடம் சில்மிஷம்! - கைதாகிச் சிறை சென்ற பாதிரியார்

கைதுசெய்யப்பட்ட பாதிரியார்
கைதுசெய்யப்பட்ட பாதிரியார்

ஆவடியில் சபைக்குப் பிரார்த்தனை செய்வதற்காக வந்த பெண் கண்ணை மூடி ஜெபிக்கும் நேரத்தில் அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பாதிரியாரை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த மோரை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்காட் டேவிட் (53). கிறிஸ்தவ பாதிரியாரான டேவிட், அதே பகுதியில் ஆராதனை சபை ஒன்று நடத்திவருகிறார். ஞாயிற்றுக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பில்லி, சூனியம், பேய், பிசாசு என அனைத்துப் பிரச்னைகளையும் தீர்ப்பதற்காகத் தனது சபையில் அக்னி ஆராதனை நடத்திவந்திருக்கிறார். டேவிட்டின் அக்னி ஆராதனையில் கலந்துகொண்டால் தங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், ஆவடி மட்டுமன்றி அம்பத்தூர் , திருநின்றவூர் எனப் பல பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் இவரது சபைக்கு வந்துகொண்டிருக்கின்றனர்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
representational image

அந்த வகையில், ஆறு மாதங்களுக்கு முன்பு ஆவடியை அடுத்த ஆரிக்கம்பேடு பகுதியைச் சேர்ந்த 45 மதிக்கத்தக்க பெண் ஒருவர் தன் குடும்பப் பிரச்னைகள் தீர வேண்டும் என்று டேவிட்டின் சபைக்கு வந்திருக்கிறார். அந்தப் பெண்ணிடம் வாரம்தோறும் தவறாமல் தன் சபையில் நடைபெறும் சிறப்பு ஆராதனைகளில் கலந்துகொண்டால் துரத்தும் கஷ்டங்கள் எல்லாமே காணாமல் போகும் என்று டேவிட் ஆறுதலாகப் பேசி நம்பவைத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து வாடிக்கையாக டேவிட்டின் சபைக்கு வரத் தொடங்கிய அந்தப் பெண், தனது குடும்பக் கஷ்டங்கள் அனைத்தையும் பாதிரியாரிடம் சொல்லி அழுது புலம்பியிருக்கிறார்.

அந்தப் பெண் தன்னிடம் குடும்பப் பிரச்னைகள் அனைத்தையும் கூற, டேவிட் அதைவைத்தே அவரது வீட்டுக்கு அடிக்கடி சென்று ஜெபம் செய்துவந்திருக்கிறார். இந்தநிலையில், அந்தப் பெண் கடந்த 17-ம் தேதி டேவிட்டின் சபைக்கு, பிரார்த்தனை செய்வதற்காகத் தனியாகச் சென்றிருக்கிறார். அப்போது சபையில் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. இதை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்ட பாதிரியார் டேவிட் ஜெபிக்குமாறு அவரிடம் கூறியிருக்கிறார்.

அந்தப் பெண்ணும் பாதிரியார் கூறியதைப்போல் முட்டிபோட்டு, கைகூப்பி ஜெபித்துக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது, பாதிரியார் டேவிட் அத்துமீறியதாகதாகக் கூறப்படுகிறது. ஜெபத்திலிருந்து திடுக்கிட்டுக் கண்விழித்த அந்தப் பெண், பாதிரியாரின் செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார். அதைடுத்து, அங்கிருந்து வேகமாக வெளியேறியவர், நேராக ஆவடி டேங்க் ஃபேக்டரி காவல் நிலையத்துக்குச் சென்று கண்ணீர்மல்கப் பாதிரியார் குறித்து புகார் தெரிவித்திருக்கிறார்.

பாதிரியார் ஸ்காட் டேவிட்
பாதிரியார் ஸ்காட் டேவிட்

பெண்ணிடம் புகார் மனுவைப் பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் ஜெகநாதன் வழக்கு பதிவுசெய்து, தன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினார். இந்தநிலையில், நேற்று காலை பாதிரியார் ஸ்காட் டேவிட்டை அவரது வீட்டில் வைத்து போலீஸார் கைதுசெய்து விசாரித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதிகள், பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்துக்காக அவரைச் சிறையில் அடைக்க உத்தரவிட்டனர். அதைத் தொடர்ந்து பாதிரியார் டேவிட் தற்போது திருவள்ளூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

பிரார்த்தனைக்கு வந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த பாதிரியாரின் செயல் அந்தப் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு