சென்னை, பள்ளிக்கரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குடியிருக்கும் 30 வயதான இளம்பெண் ஒருவர், சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சில தினங்களுக்கு முன்பு புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில் பல் மருத்துவர் நிஷாந்த் என்பவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகக் குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் பல் மருத்துவர் நிஷாந்த் (32), அவரின் தோழி செரின், நண்பன் ஹர்த்திக் ஆகியோரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். விசாரணைக்குப்பிறகு மூன்று பேரையும் போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தாம்பரம் போலீஸ் கமிஷனரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ``புகாரளித்த இளம்பெண், விவாகரத்தானவர். இவரை செரின் என்பவர், பல் மருத்துவர் நிஷாந்த்திடம் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். பின்னர், மருத்துவர் நிஷாந்த்தும் இளம்பெண்ணும் பழகி வந்துள்ளனர். அப்போது மருத்துவர் நிஷாந்த், தானும் மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வருவதாகவும் விவாகரத்து பெற்றவர் என்றும் இளம்பெண்ணிடம் கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் காதலித்துள்ளனர். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த தகவல் நிஷாந்த்தின் அம்மா சத்யாவுக்கும் தெரியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த நிலையில் நிஷாந்த், தன்னுடைய நண்பர் ஹர்த்திக் (22) என்பவரோடு சந்தோஷமாக இருக்க இளம்பெண்ணை கட்டாயப்படுத்தியுள்ளார். அதனால் அதிரச்சியடைந்த இளம்பெண், நிஷாந்த்தின் அம்மா சத்யாவிடம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். இதற்கு சத்யா, `என் மகன் அப்படிதான், பிடிக்கவில்லை என்றால் விலகிவிடு' என்று கூறியுள்ளார். இதையடுத்து இளம்பெண்ணை நிஷாந்த் அடித்து துன்புறுத்தியதோடு கொலைசெய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இது தொடர்பாக இளம்பெண் அளித்த புகாரின் பேரில் சேலையூர் அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி நிஷாந்த், அவரின் தோழி செரின், நண்பர் ஹர்த்திக் ஆகியோரை கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். போதையில்தான் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக இளம்பெண் குற்றம்சாட்டியிருந்தார். அதனால் இவர்களுக்கு போதைப்பொருள்கள் எப்படி கிடைத்தன எனவும் விசாரணை நடந்துவருகிறது" என்று செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.