Published:Updated:

`ஊருக்கு ஒரு பெயர்; மாவட்டத்துக்கு ஒரு ஏஜென்ட் மூலம் நேர்முகத் தேர்வு' -போலி ஐஏஎஸ் சிக்கியது எப்படி?

போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி திபாகரன்

தமிழகம் முழுவதும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கோடி கணக்கில் மோசடி செய்த வழக்கில் போலி ஐ.ஏ.எஸ் அதிகாரியை போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.

`ஊருக்கு ஒரு பெயர்; மாவட்டத்துக்கு ஒரு ஏஜென்ட் மூலம் நேர்முகத் தேர்வு' -போலி ஐஏஎஸ் சிக்கியது எப்படி?

தமிழகம் முழுவதும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கோடி கணக்கில் மோசடி செய்த வழக்கில் போலி ஐ.ஏ.எஸ் அதிகாரியை போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.

Published:Updated:
போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி திபாகரன்

மத்திய அரசின் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுவின் (ஏ.ஐ.சி.டி.இ) பெயர், லோகோவைப் பயன்படுத்தி மதுரை, கோவை, காஞ்சிபுரம், சேலம் போன்ற இடங்களில் நேர்முகத் தேர்வு நடத்தப்படுவதாக சென்னையில் உள்ள ஏ.ஐ.சி.டி.இ-வின் தென்மண்டல அலுவலர் சுந்தரேசனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலைச் சந்தித்து புகாரளித்தார். கமிஷனரின் உத்தரவின்பேரில் மத்திய குற்றப்பிரிவின் வேலை வாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்தனர். விசாரணையில் கடந்த 26.12.2021-ம் தேதி திருப்பத்தூர் மாவட்டத்தில் போலியாக நேர்முகத் தேர்வுகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அதனால் அங்கு சென்ற போலீஸார், திருப்பத்தூர் மாவட்டம், புதுப்பேட்டை ரோடு, பாரண்ட்பள்ளி கூட்ரோடு அருகில் உள்ள பள்ளியில் போலியாக நேர்முகத் தேர்வுகளைத் நடத்திக் கொண்டிருந்த 8 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மணிகண்டன்
மணிகண்டன்

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தேடிவந்தனர். அவர்களைப் பிடிக்க உதவி கமிஷனர் சுரேந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சுபாஷ்சந்திரபோஸ், கோபு ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில் கர்நாடகா மாநிலம், மங்களூரு பகுதியில் முக்கியக் குற்றவாளியான திபாகரன் தன்னுடைய கூட்டாளிகளுடன் தலைமறைவாக இருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீஸார் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திபாகரன் என்கிற மணிகண்டன் (39) என்பவரையும் அவருக்கு உடந்தையாக இருந்த திருப்பத்தூரைச் சேர்ந்த சத்தியநாராயணன் (26), திருச்சியைச் சேர்ந்த மணிகண்டன் (33), ஓசூரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (68) ஆகிய நான்கு பேரை கடந்த 26.4.2022-ம் தேதி கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து மோசடி செயலுக்குப் பயன்படுத்திய கார், போலி ஆவணங்கள், அடையாள அட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், ``கைது செய்யப்பட்ட திபாகரன், தன்னை ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி என்று கூறிதான் அனைவரையும் நம்ப வைத்திருக்கிறார். மேலும் அவர், மத்திய, மாநில அரசுகளில் பணியாற்றும் அனைத்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் தன்னிடம் ரிப்போர்ட் கொடுப்பார்கள் என்றும் கூறியிருக்கிறார். தனக்கு முக்கிய அரசியல் பிரமுகர்களைத் தெரியும் என்பதால் எந்த அரசு வேலையையும் எளிதில் தன்னால் வாங்கிக் கொடுக்க முடியும் என வேலைத் தேடிக் கொண்டிருப்பவர்களிடம் நம்பிக்கையுடன் பேசியிருக்கிறார். அதனால் அலுவலக உதவியாளர் வேலை முதல் அரசு அதிகாரிகள் பதவி வரை கேட்டு ஏராளமானவர்கள் திபாகரன், அவரின் கூட்டாளிகளிடம் பணம் கொடுத்து ஏமாந்திருக்கிறார்கள்.

சத்தியநாராயணன்
சத்தியநாராயணன்

இவர் மீது வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் கடந்த 2015-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம். ஜாமீனில் வெளியில் வந்த திபாகரன், அதன்பிறகும் மோசடி வேலையில் ஈடுபட்டிருக்கிறார். தூத்துக்குடி மாவட்டம் மத்திய பாகம் காவல் நிலையத்திலும் திபாகரன் மீது வழக்கு இருக்கிறது. இதையடுத்து, 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏ.ஐ.சி.டி.இ- லோகோவைப் பயன்படுத்தி போலி இன்டர்வியூவை நடத்தியது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த திபாகரனைக் கைது செய்திருக்கிறோம். திபாகரன், ஒவ்வொரு மோசடியின்போதும் ஒரு பெயரைப் பயன்படுத்தியிருக்கிறார். மணிகண்டன், ஜெயசந்திரன், திபாகரன் என ஊருக்கு ஒரு பெயர்களைச் சொல்லி ஏமாற்றி வந்தது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. திபாகரனிடம் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கோடிக் கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்தது தெரியவந்திருக்கிறது. இந்த வழக்கில் இன்னும் சிலரைத் தேடிவருகிறோம்" என்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திபாகரன் மோசடி பின்னணி குறித்து நம்மிடம் விவரித்தார் போலீஸ் உயரதிகாரி ஒருவர்... ``தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திபாகரன், பி.ஏ படித்திருக்கிறார். படித்தவுடன் வேலைத் தேடி பல இடங்களுக்குச் சென்றிருக்கிறார். இந்தச் சமயத்தில் அரசு வேலையை பணம் கொடுத்து வாங்கலாம் என சிலர் அவருக்கு ஆசை காட்டியுள்ளனர். அதற்காக அவரும் முயற்சி செய்திருக்கிறார். ஆனால், அவருக்கு அரசு வேலை கிடைக்கவில்லை. ஏமாந்ததுதான் மிச்சம். அரசு வேலைக்காக முயற்சித்தபோது திபாகரனுக்கு அரசு வேலை வாங்கிக் கொடுக்கும் புரோக்கர்களின் நட்பு கிடைத்திருக்கிறது. அதன்பிறகு திபாகரனே தனியாக அரசு வேலைத் தேடிக்கொண்டிருப்பவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு மோசடியில் ஈடுபட்டுவந்திருக்கிறார்.

பாலகிருஷ்ணன்
பாலகிருஷ்ணன்

இந்த மோசடியில் போலீஸாரிடம் சிக்கிக் கொள்ளாமலிருக்க திபாகரன், யாரிடமும் பணத்தை நேரடியாக வாங்காமல் தன்னுடைய நண்பர்களின் வங்கிக் கணக்குகள் மூலம் பெற்றியிருக்கிறார். வங்கி மூலம் பணத்தை அனுப்பியதால் நம்பிக்கையுடன் வேலைக்காக காத்திருப்பவர்களும் அனுப்பி வைத்திருக்கின்றனர். பின்னர் நண்பர்கள் மூலம் அந்தப் பணத்தை ரொக்கமாக திபாகரன் பெற்றிருக்கிறார். மேலும் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் ஒரு ஏஜென்ட் என நியமித்து அரசு வேலைக்காக போலி நேர்முகத் தேர்வை நடத்தியிருக்கிறார். இந்த நேர்முகத்தேர்வை பணம் கொடுத்தவர்கள் நம்பும் வகையில் அரசு வேலையில் இருப்பவர்கள் நடத்தியிருக்கிறார்கள். திருப்பத்தூரில் நடந்த போலி நேர்முகத்தேர்வை நடத்திய அரசு ஆசிரியரை விரைவில் கைது செய்யவுள்ளோம். கைது செய்யப்பட்டிருக்கும் பாலகிருஷ்ணனுக்கு போலி நேர்முகத் தேர்வை நடத்தும் முதன்மை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை திபாகரன் கொடுத்திருக்கிறார். அதற்கான அடையாள அட்டையையும் பறிமுதல் செய்திருக்கிறோம். மற்றவர்களை நம்ப வைக்க சொகுசு காரில் பந்தாவாக வரும் திபாகரன், காரில், கல்வித்துறை என்ற ஸ்டிக்கரையும் ஓட்டி வைத்திருக்கிறார். திபாகரனிடம் சில நிமிடங்கள் பேசினாலே அவர் எளிதில் மூளைச் சலவை செய்துவிடுவார். அவரின் நம்பிக்கையான பேச்சை நம்பி ஏராளமானவர்கள் ஏமாந்திருக்கிறார்கள். எனவே யாரும் அரசு வேலைக்கு பணம் கொடுத்த ஏமாற வேண்டாம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism