Published:Updated:

கும்பகோணம்: லாரி உரிமையாளரைக் கடத்திய கும்பல்; 6 மணி நேரத்தில் மீட்பு, 6 பேர் கைது! - நடந்தது என்ன?

கடத்தல் கும்பல்
கடத்தல் கும்பல்

எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்ஜய் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் கார்த்திகேயன், தனிப்படை போலீஸ் உதவி ஆய்வாளர் கீர்த்திவாசன், சிறப்பு உதவி ஆய்வாளர் அமுல்தாஸ் உள்ளிட்ட போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கும்பகோணம் பகுதியில் லாரி உரிமையாளர் ஒருவரை மர்மக் கும்பல் ஒன்று ரூ.10. லட்சம் பணம் கேட்டு கடத்தியது. இது தொடர்பாக புகார் வந்த ஆறு மணி நேரத்தில் கும்பகோணம் போலீஸார் கடத்தப்பட்டவரை மீட்டதுடன், ஆறு பேர்கொண்ட கடத்தல் கும்பலையும் கைதுசெய்தனர். இதையடுத்து இந்தப் பணியில் ஈடுபட்ட போலீஸ் டீமை உயரதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டிவருகின்றனர்.

போலீஸ் எஸ்.ஐ கீர்த்தி வாசன்
போலீஸ் எஸ்.ஐ கீர்த்தி வாசன்

கும்பகோணம் செட்டிமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் பஷீர் அகமது (48), லாரிகளை வாடகைக்குவிடும் தொழில் செய்துவருகிறார். இவரை மர்மக் கும்பல் ஒன்று கடந்த 13-ம் தேதி இரவு கடத்திச் சென்றிருக்கிறது. இதையடுத்து பஷீர் அகமது மனைவி அஸ்மா பேகத்துக்கு போன் செய்து, `உன் கணவரை உயிருடன் விட வேண்டுமென்றால் ரூ.10 லட்சம் தர வேண்டும்’ எனக் கூறியுள்ளனர்.

இதைக் கேட்டு பதறிய அஸ்மா பேகம், கும்பகோணம் போலீஸாருக்குத் தகவல் அளித்திருக்கிறார். பின்னர் கடத்தப்பட்டவரை மீட்கவும், மர்மக் கும்பலை கைதுசெய்யவும் தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்ஜய் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் கார்த்திகேயன், தனிப்படை போலீஸ் உதவி ஆய்வாளர் கீர்த்திவாசன், சிறப்பு உதவி ஆய்வாளர் அமுல்தாஸ் உள்ளிட்ட போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

பறிமுதல் செய்யப்பட்ட கார்
பறிமுதல் செய்யப்பட்ட கார்

பின்னர் மன்னார்குடிப் பகுதியில் மர்ம கும்பல் பதுங்கியிருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து கடத்தப்பட்ட பஷீர் அகமதுவை மீட்டதுடன், மர்மக் கும்பலை சேர்ந்த ஆறு பேரையும் கைது,செய்து கடத்தலுக்குப் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். புகார் வந்த ஆறு மணி நேரத்தில் ஆறு பேர் கொண்ட கும்பலைக் கைதுசெய்து நடவடிக்கை எடுத்த கும்பகோணம் போலீஸ் டீமை உயர்திகாரிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து போலீஸ் தரப்பில் பேசினோம். ``பஷீர் அகமது திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியிலுள்ள தனியார் மதுபான தொழிற்சாலையிலிருந்து, மதுபானங்களை லாரிகளில் டாஸ்மாக் கடைகளுக்குக் கொண்டு செல்லும் ஏஜென்ட் ஆன சேகர் (45) என்பவருக்கு ஒரு வருடத்துக்கு முன்பு மன்னார்குடியிலிருந்து ராமநாதபுரத்துக்கு மதுபானங்களைக் கொண்டு செல்ல, தனது லாரியை வாடகைக்கு விட்டிருக்கிறார்.

போலீஸ் கைதுசெய்த ஆறு பேர்
போலீஸ் கைதுசெய்த ஆறு பேர்

ராமநாதபுரத்துக்கு மதுபானங்களைக் கொண்டு செல்லும்போது, லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இது குறித்து பஷீர் அகமது சேகரிடம், மதுபாட்டில்கள் முழுவதும் சேதமடைந்துவிட்டதாகக் கூறிவிட்டு, சேதமடையாத மதுபாட்டில்களை, பஷீர் அகமது நன்னிலம் பகுதியில் பதுக்கிவைத்து கள்ளத்தனமாக விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதையறிந்த சேகர் லாரி விபத்தால், ரூ.10 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி, அந்தப் பணத்தைத் தரும்படி பஷீர் அகமதிடம் கேட்டிருக்கிறார். அதற்கு பஷீர் அகமது பணம் தர முடியாது எனக் கூறி, சேகரை மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சேகர், தனது கூட்டாளிகளான மன்னார்குடியைச் சேர்ந்த பரமேஸ்வரன், சுவாமிநாதன், கண்ணதாசன், அப்துல் குத்தூஸ், கவிதீபன் ஆகிய ஐந்து பேருடன் சேர்ந்து கடந்த 13-ம் தேதி, காரில் பஷீர் அகமது வீட்டுக்குச் சென்று அவரைக் கடத்திச் சென்றனர்.

போலீஸ் எஸ்.ஐ கீர்த்தி வாசன்
போலீஸ் எஸ்.ஐ கீர்த்தி வாசன்

பின்னர் பஷீர் அகமதின் மனைவி அஸ்மா பேகத்திடம் சேகர் போனில் பேசி, 10 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். இல்லையென்றால், பஷீர் அகமதுவைக் கொலை செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளார். இதையடுத்து கணவர் கடத்தப்பட்டதாக அஸ்மா பேகம் போலீஸுக்குத் தகவல் கொடுத்ததுடன், கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். இதையடுத்து உடனடியாக விசாரணையில் இறங்கிய தனிப்படை போலீஸார் குற்றவாளிகளைக் கைதுசெய்து பஷீர் அகமதுவையும் மீட்டனர்.

இது குறித்து தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வாசனிடம் பேசினோம். ``பஷீர் அகமது கடத்தப்பட்டதாகத் தகவல் வந்த உடனேயே உயரதிகாரிகள் உத்தரவின்பேரில் விசாரணையில் இறங்கினோம். இதையடுத்து மன்னார்குடி, காரக்கோட்டை என்ற இடத்தில் மறைத்துவைத்திருந்த பஷீர் அகமதுவை மீட்டதுடன் சேகர் உட்பட ஆறு பேர்கொண்ட கடத்தல் கும்பலைக் கைது செய்ததுடன், அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தோம். பின்னர் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்திய பிறகு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். துரிதமாகச் செயல்பட்டு, சில மணி நேரங்களிலேயே கடத்தல் கும்பலை பிடித்துவிட்டோம்’’’ எனத் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு