Published:Updated:

திருமழிசை: ஓசி பிரியாணிக்குத் தகராறு... பெட்ரோல் குண்டுகளை வீசிப் பதறவைத்த போதை ஆசாமிகள்!

சென்னையை அடுத்த திருமழிசையில் உணவகம் ஒன்றில் ரெளடி என்று கூறி மிரட்டி பிரியாணி கேட்ட போதைக் கும்பல் ஒன்று, கடைக்காரர் தராததால் ஆத்திரத்தில் கடையில் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையை அடுத்த வெள்ளவேடு பகுதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (40). இவர் வெள்ளவேடு பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் திருமண மண்டபம் ஒன்றின் அருகே பிரியாணி கடை நடத்திவருகிறார்.

நேற்று மதியம் அருணாச்சலத்தின் கடைக்கு இருசக்கர வாகனங்களில் வந்திறங்கிய இளைஞர்கள் சிலர், 'எபினேசர் அண்ணன், உன் கடையில் பிரியாணி வாங்கிட்டு வரச் சொன்னாரு. சீக்கிரமா கொடு... நாங்க வெளிய போகணும்' என்று அருணாச்சலத்தை மிரட்டியிருக்கின்றனர். போதை ஆசாமிகள் மிரட்டலுக்கு மசியாத அருணாச்சலம் 'உங்க அண்ணன் வந்தாலே நான் தர மாட்டேன். நீங்க யாருடா, ஒழுங்கா போயிடுங்க' என்று பதிலுக்குத் தன் குரலை உயர்த்தியிருக்கிறார். அதையடுத்து, அருணாச்சலத்தைத் தகாத வார்த்தைகளால் திட்டி அவரிடம் தகராறில் ஈடுபட்ட போதை ஆசாமிகள், கடையில் அருணாச்சலத்துக்கு ஆதரவாகக் கூட்டம் கூடியதால் அங்கிருந்து முறைத்தபடியே நகர்ந்திருக்கின்றனர்.

பிரியாணிக் கடை
பிரியாணிக் கடை
representational Image

அவர்கள் சென்ற பிறகு அருணாச்சலம் மீண்டும் தன் வாடிக்கையாளர்களுக்கு பிரியாணி பரிமாறிக்கொண்டிருந்திருக்கிறார். அருணாச்சலத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அரை மணி நேரம் கழித்து மீண்டும் கடைக்கு வந்திருக்கிறார்கள்.

அப்போது, பிரியாணி பார்சல் செய்துகொண்டிருந்த அருணாச்சலத்தை நோக்கி, `எங்களுக்கே பிரியாணி தர மாட்டியா நீ... உன் கடையே இனி இருக்காது’ என்று ஆவேசமாகக் கூறிவிட்டு பெட்ரோல் நிரப்பப்பட்ட சோடா பாட்டில்களில் தீயைவைத்து கடைக்குள் வீசியிருக்கின்றனர். அவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியதில் கடையில் பிரியாணி சாப்பிட்டுக்கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் அனைவரும் அலறியடித்துக்கொண்டு கடையிலிருந்து வெளியே ஓடி வந்திருக்கிறார்கள். அருணாச்சலம் போதை ஆசாமிகளைப் பிடிக்க முயன்றபோது அவர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார்கள். அதிர்ஷ்டவசமாக பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

பெட்ரோல் குண்டுகள்
பெட்ரோல் குண்டுகள்

இது தொடர்பாக அருணாச்சலம் வெள்ளவேடு காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். போலீஸார் விசாரித்ததில் பிரியாணி கடையில் பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றது ரெளடி எபினேசர் என்பவரின் கூட்டாளிகள் என்பது தெரியவந்தது. வழக்கு பதிவு செய்து தேடுதல் வேட்டை நடத்திய வெள்ளவேடு போலீஸார், திருமழிசையை அடுத்த உடையார்கோயில் காலனியில் ரெளடி எபினேசர் (30), மற்றும் அவரது கூட்டாளிகளைக் கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்ட எபினேசர் மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அவர் சொல்லி அனுப்பியதின் பேரில்தான் அவரது கூட்டாளிகள் பிரியாணி கடையில் தகராறில் ஈடுபட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் போதை ஆசாமிகள் பிரியாணிக் கடையில் பெட்ரோல் குண்டுகளை வீசிய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு