Published:Updated:

சென்னை: `நீயே என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டாயே!' - கோடி கணக்கில் பிசினஸ் செய்த தொழிலதிபர் கதறல்

பறிமுதல் செய்யப்பட்ட பணம், செல்போன்கள்

தன்னுடைய ஓனர் கோடிகணக்கில் பிசினஸ் செய்வதை கூட்டாளிகளிடம் கூறி அதைக் கொள்ளையடிக்க திட்டம் வகுத்துக் கொடுத்த ஊழியர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

சென்னை: `நீயே என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டாயே!' - கோடி கணக்கில் பிசினஸ் செய்த தொழிலதிபர் கதறல்

தன்னுடைய ஓனர் கோடிகணக்கில் பிசினஸ் செய்வதை கூட்டாளிகளிடம் கூறி அதைக் கொள்ளையடிக்க திட்டம் வகுத்துக் கொடுத்த ஊழியர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
பறிமுதல் செய்யப்பட்ட பணம், செல்போன்கள்

சென்னை மண்ணடி ஐயப்பசெட்டி தெருவைச் சேர்ந்தவர் முகமது அப்துல்லா. இவரின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம். இவர், கடந்த சில ஆண்டுகளாக சென்னை ஈவினிங் பஜாரில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரின் கடையில் காயல்பட்டினத்தைச் சேர்ந்த செய்யது முகமது சித்திக், சேக் பரீத், ஜமால் ஆகியோர் வேலை செய்துவருகின்றனர். இவர்களை மண்ணடி மலையப்பன் தெரு, இரண்டாவது மாடியில் முகமது அப்துல்லா தங்கவைத்திருக்கிறார். பிசினஸுக்காகப் பணத்தை கடையிலும் ஊழியர்கள் தங்கியிருக்கும் அறையிலும் வைத்திருப்பது முகமது அப்துல்லாவின் வழக்கம்.

கைதானவர்களுடன் போலீஸ் டீம்
கைதானவர்களுடன் போலீஸ் டீம்

இந்த நிலையில், கடந்த 12.12.2022-ம் தேதி என்.ஐ.ஏ அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக் கொண்ட டிப்டாப் ஆசாமிகள் நான்கு பேர் மலையப்பன் தெருவிலுள்ள அறைக்குச் சென்றனர். அவர்கள் கோவை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக உங்களிடம் விசாரிக்க வேண்டும் என செய்யது முகமது சித்திக், சேக் பரீத், ஜமால் ஆகியோரிடம் கூறினர். அதைக்கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அதோடு மூன்று பேரின் செல்போன்களை வாங்கிக் கொண்ட என்.ஐ.ஏ அதிகாரிகள், அவர்களிடம் கோவை குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக சில கேள்விகளைக் கேட்டனர். அதற்கு மூன்று பேரும் எங்களுக்கும் அந்தச் சம்பவத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று பதிலளித்தனர். அடுத்து அறையில் சோதனை செய்தபோது அங்கு  கட்டுக்கட்டாக பணம் இருந்தது. அது குறித்து மூன்று பேரிடம் விசாரித்தபோது தங்களுடைய ஓனர் முகமது அப்துல்லாவுக்குத்தான் பணத்துக்கான விவரம் தெரியும் என பதிலளித்தனர். 

இதையடுத்து மூன்று பேரையும் அறையின் சுவர் பக்கமாக திரும்பி நிற்கவைத்த என்.ஐ.ஏ அதிகாரிகள், பணம், கம்ப்யூட்டர் ஆகியவற்றை பையில் எடுத்து வைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர். அப்போது ஜமாலை மட்டும் தங்களுடன் அந்த அதிகாரிகள் அழைத்துக் கொண்டு ஈவினிங் பஜாரில் உள்ள கடைக்குச் சென்றனர. அங்கிருந்த பணத்தையும் எடுத்துக் கொண்ட அதிகாரிகள், இன்னும் அரை மணி நேரத்தில் வருவோம். அதற்குள் ஓனர் முகமது அப்துல்லாவிடம் விவரத்தைச் சொல்லி எங்கள் முன் ஆஜர்படுத்த வேண்டும் என்று கூறிவிட்டு சென்றனர். பணத்தை எடுத்துச் சென்ற தகவலை முகமது அப்துல்லாவின் வீட்டுக்குச் சென்று ஜமால் கூறினான். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த முகமது அப்துல்லா, தனக்குத் தெரிந்தவர்கள் மூலம் விசாரித்தார். அப்போதுதான் பணத்தை எடுத்துச் சென்றது ஓரிஜினல் என்.ஐ.ஏ அதிகாரிகள் இல்லை, போலி எனத் தெரியவந்தது. இதையடுத்து கடந்த 13-ம் தேதி முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் அவர், சுமார் 20 லட்சம் ரூபாயை போலி என்.ஐ.ஏ அதிகாரிகள் கொள்ளையடித்துச் சென்றதாக புகார் கொடுத்தார். அதன்பேரில் துறைமுகம் உதவி கமிஷனர் வீரகுமார் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

போலீஸ் உதவி கமிஷனர் வீரகுமார் மற்றும் போலீஸ் டீம்
போலீஸ் உதவி கமிஷனர் வீரகுமார் மற்றும் போலீஸ் டீம்

தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகளாக நடித்த பா.ஜ.க நிர்வாகியான வேலு (எ) வேங்கை அமரன், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த காஸ் டெலிவரி பாயாகப் பணியாற்றிவரும் புஷ்பராஜ் மற்றும் வீரா (எ) விஜயகுமார், சென்னை பல்லவன் சாலை பகுதியைச் சேர்ந்த கார்த்திக், ஆட்டோ டிரைவர் தேவராஜ், ரவி ஆகிய 6 பேர் கடந்த 19-ம் தேதி சரணடைந்தனர். அவர்களை போலீஸார் 6 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தபோது ஹவாலா பிசினஸில் ஈடுபடுவோர்களைக் குறிவைத்து கொள்ளையடிக்கும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து கூடுல் கமிஷனர் அன்புவிடம் பேசினோம்.  ``என்.ஐ.ஏ அதிகாரிகளாக நடித்து இரண்டரை கோடி ரூபாய்க்கு மேல் கொள்ளையடித்த வழக்கில் ஆட்டோவிலும் பைக்கிலும்தான் இந்தக் கும்பல் வந்ததை சிசிடிவி கேமரா மூலம் கண்டறிந்தோம். ஆட்டோவின் நம்பர் பிளேட்டுகள் தெரியாதபடி மஞ்சள் பூசி அதை மறைத்து வைத்திருந்தனர். இருப்பினும் ஆட்டோவின் மாடலைக் கொண்டு விசாரணையைத் தொடங்கினோம். அப்போதுதான் பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகி வேலு குறித்த தகவல் தெரியவந்தது. ஆனால் அதற்குள் வேலு தன்னுடைய கூட்டாளிகள் ஆறுபேருடன் நீதிமன்றத்தில் சரண் அடைந்துவிட்டார். இதையடுத்து சரணடைந்தவர்களைக் காவலில் எடுத்து விசாரித்தபோதுதான் புகார் கொடுத்த முகமது அப்துல்லாவுக்கு பிசினஸில் விஸ்வாசியாக இருந்த செய்யது முகமது சித்திக் என்பவர்தான் இந்தக் கொள்ளைச் சம்பவத்துக்கு மூளையாகச் செயல்பட்டது தெரியவந்தது.

அன்பு ஐபிஎஸ்
அன்பு ஐபிஎஸ்

இதையடுத்து சித்திக்கைக் கைதுசெய்து விசாரித்தோம். அப்போது இந்தக் கும்பல், குதிரைப் பந்தயத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்தது தெரியவந்தது. கைதான வேலுவிடம், தன்னுடைய ஓனர் முகமது அப்துல்லாவிடம் எப்போதும் கோடிக்கணக்கில் பணம் இருக்கும். அதனால் என்.ஐ.ஏ அதிகாரிகள் என்று கூறி அந்தப் பணத்தைக் கொள்ளையடித்தால் வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம் என சித்திக், ஐடியா கொடுத்ததும் விசாரணையில் தெரிந்தது. அதன்படி ஆட்டோவில் வந்து பணத்தை வேலு தலைமையிலான கும்பல் கொள்ளையடித்து சென்றிருக்கிறது. கைதான விஜயகுமார், வேலு, ரவி ஆகியோர் மீது ஏற்கெனவே குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களுடன் சென்னை பல்லவன் சாலையைச் சேர்ந்த கார்த்திக், பழையவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் தேவராஜ், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த புஷ்பராஜ், மண்ணடியைச் சேர்ந்த முகமது ஃபாசில், செய்யது முகமது சித்திக், தூத்துக்குடி காயல்பட்டினத்தைச் சேர்ந்த அல் ஜாஸ்மின் என 9 பேரை கைதுசெய்திருக்கிறோம். இந்தக் கும்பலிடமிருந்து இதுவரை 1,64,56,500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் இன்னும் விசிக-வைச் சேர்ந்த ஒருவர் உட்பட சிலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களைத் தேடிவருகிறோம்" என்றார்.

தனிப்படை போலீஸாரிடம் பேசினோம். ``வடசென்னையில் ஹவாலா பிசினஸில் ஈடுபடுவோர்களைக் குறிவைத்து  கொள்ளைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. பணத்தை இழப்பவர்கள், பெரும்பாலும் புகார் கொடுப்பதில்லை. அந்த தைரியத்தில்தான் முகமது அப்துல்லாவிடம் இந்தக் கும்பல் என்.ஐ.ஏ அதிகாரிகள் என்று நடித்து இரண்டரைக் கோடி ரூபாய்க்கு மேல் கொள்ளையடித்திருக்கிறது. ஆட்டோவால் இந்தக் கும்பல் சிக்கிக் கொண்டிருக்கிறது. இந்தக் கும்பலைப் போல இன்னும் சிலர், சி.பி.ஐ அதிகாரிகள் என்று நடித்து லட்சக்கணக்கில் பணத்தைக் கொள்ளையடித்திருக்கிறது.

கைதானவர்கள்
கைதானவர்கள்

இந்த வழக்கில் சித்திக் என்பவருக்கும் தொடர்பு இருக்கும் தகவலைக் கேள்விபட்ட முகமது அப்துல்லா, `உன்னை நம்பிதானே பிசினஸின் ரகசியங்களை எல்லாம் சொன்னேன். நீயே இப்படி என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டாயே' என்று கதறி அழுதார். கொள்ளைக் கும்பல் முழுமையாக சிக்கிய பிறகே எவ்வளவு ரூபாய் என்பதைச் சொல்ல முடியும். கொள்ளையடித்த பணத்தை உடனே பங்குப்பிரித்துக் கொண்ட இந்தக் கும்பல்  ஒவ்வொரு இடமாகப் பிரிந்துச் சென்றுவிட்டது. சேலம், ஊட்டி, கோவை, பழனி என ஊர், ஊராக தலைமறைவாக இருந்த கும்பலுக்கு சித்திக்தான், சென்னையிலிருந்தபடியே போனில் போலீஸின் தேடுதல் நடவடிக்கைகள் குறித்து அவ்வப்போது இன்ஃபார்ம் செய்து வந்திருக்கிறார். இந்த வழக்கில் இதுவரை இரண்டு கோடி ரூபாய் வரை பறிமுதல் செய்திருக்கிறோம். செல்போன், கம்ப்யூட்டர் உள்ளிட்டவற்றையும் கைப்பற்றியிருக்கிறோம். இந்த வழக்கில் முக்கியமான சிலர் குறித்து தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அவர்கள் தொடர்பாக விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறோம்" என்றனர்.