Published:Updated:

திருத்தணி: `அத்தை, மாமாவைக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய இளைஞன்; செல்போன் மூலம் கண்டுபிடித்த போலீஸ்!'

கொலை
கொலை ( representational image )

நகை, பணத்துக்காகச் சொந்த மாமாவையும் அத்தையையும் இளைஞர் ஒருவர் கடத்திக் கொலை செய்து புதைத்த சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த மாருதி நகர் பகுதியைச் சேர்ந்தவர், சஞ்சீவி ரெட்டி. இவரின் மனைவி மாலா. பா.ம.க பிரமுகரான சஞ்சீவி ரெட்டி, திருத்தணியில் நிதி நிறுவனம் நடத்திவந்தார். மகன், மகள்களுக்குத் திருமணம் முடித்துவைத்த நிலையில், இவர்கள் இருவரும் மாருதி நகரில் தனியாக வசித்துவந்தனர். இந்தநிலையில், கடந்த ஜூலை 29-ம் தேதியிலிருந்து அவர்களைக் காணவில்லை. சஞ்சீவி ரெட்டியின் உறவினர்கள், 'அவர் ஆந்திரா சென்றிருக்கலாம்' என்று கருதியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் இருவரின் செல்போன் எண்களுமே ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததாலும், வெகு நாள்களாகியும் வீடு திரும்பாததாலும் சந்தேகமடைந்த சஞ்சீவி ரெட்டியின் தம்பி பாலு, திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீஸார், சஞ்சீவி ரெட்டியின் வீட்டில் சோதனை செய்து பார்த்தபோது நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

மும்பை: `காட்டிக்கொடுத்த ரத்தக்கறை!’ - பிறந்த தன் குழந்தையை 7-வது மாடியிலிருந்து வீசிய சிறுமி!
Murder
Murder
representational image

தொடர்ந்து சைபர் க்ரைம் போலீஸாரின் உதவியோடு விசாரணையை முடுக்கியதில், சஞ்சீவி ரெட்டியின் தங்கை மகன் ரஞ்சித் குமார் நண்பர்களோடு சேர்ந்து சஞ்சீவி ரெட்டியையும், அவர் மனைவியையும் கொலை செய்ததை போலீஸார் உறுதி செய்திருக்கிறார்கள். ஆந்திர மாநிலம், புத்தூர் அருகே வனப்பகுதியில் புதைக்கப்பட்டிருந்த சஞ்சீவி ரெட்டி, மாலா இருவரது உடல்களையும் திருத்தணி போலீஸார், ஆந்திர போலீஸாரின் உதவியுடன் மீட்டு திருப்பதி அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். ரஞ்சித் குமாரும், அவரின் நண்பர்கள் இருவரும் கடத்தல் மற்றும் கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இது குறித்துப் பேசிய காவல்துறையினர், ``கடந்த ஜூலை 29-ம் தேதி சஞ்சீவி ரெட்டியின் வீட்டுக்குச் சென்ற ரஞ்சித்குமார், புத்தூர் அருகேயுள்ள ஒரு கோயிலுக்குச் சென்றுவிட்டு வரலாம் என்று சஞ்சீவி ரெட்டியை அழைத்திருக்கிறார். வெளியில் அழைத்துச் சென்று கொலை செய்துவிடலாம் என்பதுதான் ரஞ்சித் குமாரின் திட்டம். கிளம்பும்போது சஞ்சீவி ரெட்டியின் மனைவி மாலாவும் கோயிலுக்கு வருவதாகச் சொல்லியிருக்கிறார். இருவரையும் காரில் ஏற்றிக்கொண்டு சென்ற ரஞ்சித்குமார், புத்தூர் செல்லும் வழியில் சிக்கராஜபுரம் என்ற பகுதியில் தன்னுடைய நண்பர்கள் ராபர்ட் ராஜ், விமல்ராஜ் ஆகியோரையும் காரில் ஏற்றியிருக்கிறார்.

தொடர்ந்து, புத்தூர் அருகே ஒரு கோயிலுக்குச் சென்றுவிட்டு அங்கிருந்து கிளம்பி ஆள் அரவமற்ற பகுதி வழியாகச் சென்றிருக்கிறார்கள். அப்போது, சஞ்சீவி ரெட்டி, மாலா இருவரையும் கார் ஓடிக்கொண்டிருக்கும்போதே கழுத்தை நெரித்துக் கொலை செய்திருக்கிறார்கள், ராபர்ட் ராஜும் விமல்ராஜும். இரு உடல்களையும் புத்தூர் அருகிலுள்ள ராமச்சந்திரபுரம் காட்டுப்பகுதியில் புதைத்துவிட்டு, அவர்களது செல்போன்களையும் வீசி எறிந்துவிட்டு, சஞ்சீவி ரெட்டியின் வீட்டுக்குச் சென்று முக்கிய ஆவணங்கள், பணம், நகை உள்ளிட்டவற்றைக் கொள்ளையடித்திருக்கிறார்கள்.

கொலைசெய்யப்பட்டு காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்ட கணவன், மனைவி
கொலைசெய்யப்பட்டு காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்ட கணவன், மனைவி

ராபர்ட்டும் விமல்ராஜும் தலைமறைவாக இருந்தநிலையில், ரஞ்சித்குமார் மட்டும் யாருக்கும் சந்தேகம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, உறவினர்களோடு சேர்ந்து சஞ்சீவி ரெட்டியைத் தேடுவதுபோல நாடகமாடிவந்திருக்கிறார். இறந்தவர்கள் இருவரின் செல்போன் எண்களை ஆராய்ந்தபோது, கடைசியாக புத்தூர் வனப்பகுதியில் ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருப்பது தெரியவந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சஞ்சீவி ரெட்டியின் செல்போனுக்குக் கடைசியாக ரஞ்சித்குமார் பேசியிருந்ததால் சந்தேகத்தின் பேரில் அவரை விசாரித்தபோது, குற்றத்தை ஒப்புக்கொண்டதோடு, புதைத்த இடத்தையும் அடையாளம் காட்டினார். தொடர்ந்து தலைமறைவாக இருந்த ராபர்ட் ராஜ், விமல்ராஜ் இருவரையு கைதுசெய்தோம்.

கைதுசெய்யப்பட்ட ரஞ்சித்குமார், அவரின் நண்பர்கள்
கைதுசெய்யப்பட்ட ரஞ்சித்குமார், அவரின் நண்பர்கள்

கொலையாளிகளிடமிருந்து 46 சவரன் நகை மற்றும் 8 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றைக் கைப்பற்றியிருக்கிறோம். அதேபோல், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்களையும் பறிமுதல் செய்திருக்கிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு