Published:Updated:

ராமநாதபுரம்: கடைகளில் கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில்விட்ட ஊர்க்காவல் படை வீரர் - சிக்கியது எப்படி?

கைதுசெய்யப்பட்ட ராஜேஸ்வரன்

ராமநாதபுரம் அருகே 500 ரூபாய் கள்ள நோட்டுகளைக் கடைகளில் புழக்கத்தில்விட்டுவந்த, ஊர்க்காவல் படை வீரரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

ராமநாதபுரம்: கடைகளில் கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில்விட்ட ஊர்க்காவல் படை வீரர் - சிக்கியது எப்படி?

ராமநாதபுரம் அருகே 500 ரூபாய் கள்ள நோட்டுகளைக் கடைகளில் புழக்கத்தில்விட்டுவந்த, ஊர்க்காவல் படை வீரரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

Published:Updated:
கைதுசெய்யப்பட்ட ராஜேஸ்வரன்

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ் மங்கலம், திருவாடானை, பரமக்குடி, திருப்பாலைக்குடி, அவற்றைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் கள்ள நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் விடப்பட்டுவருவதாக போலீஸாருக்குத் தொடர்ந்து புகார்கள் எழுந்துவந்தன. இதையடுத்து, போலீஸார் கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விடுபவர்களைத் தேடிவந்தனர்.

இந்த நிலையில், திருப்பாலைக்குடி பகுதியில் 500 ரூபாய் நோட்டைக் கொடுத்து, பொருள்கள் வாங்குவதுபோல் ஒவ்வொரு கடையாக 500 ரூபாய் நோட்டுகளாகக் கொடுத்து, பெயரளவுக்குப் பொருள்களை வாங்கிக்கொண்டு சில்லறையாக மாற்றிவருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற திருப்பாலைக்குடி போலீஸார், மணக்குடி அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவரிடம் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் ஒரு லட்ச ரூபாய்க்கு இருந்தது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்தனர்.

திருப்பாலக்குடி காவல் நிலையம்
திருப்பாலக்குடி காவல் நிலையம்

அதைத் தொடர்ந்து, அவரை காவல் நிலையத்துக்குச் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், அவர் ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள கடலூர் ஊராட்சி, மோர் பண்ணை கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரன் (28) என்பதும், இவர் கடந்த ஏழு ஆண்டுகளாகக் கடலோர காவல் படைபிரிவுக்கான ஊர்க்காவல் படைவீரராகப் பணியாற்றிவருவதும் தெரியவந்தது.

இதையடுத்து ராஜேஸ்வரனைக் கைதுசெய்த போலீஸார், அவருக்குக் கள்ள நோட்டுகள் எப்படிக் கிடைத்தன, இதன் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டிருக்கும் சம்பவம், ராமநாதபுரம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.