Published:Updated:

`இந்தக் குழந்தை இருந்தால் உன்னோடு வாழ முடியாது?' -விருதுநகரில் கணவன், மனைவி சேர்ந்து செய்த கொடூரம்

காரியாப்பட்டி காவல் நிலையம்
காரியாப்பட்டி காவல் நிலையம்

விருதுநகரில் தண்ணீர்த் தொட்டிக்குள் ஒரு வயது குழந்தை விழுந்து உயிரிழந்த சம்பவத்தின் விசாரணையில் திருப்பமாக, குழந்தையைக் கணவர் முன்பு தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியைச் சேர்ந்தவர் அமல்ராஜ். இவரது மனைவி சுஷ்மிதா. இவர்களது ஒரு வயது மகன் விகாஷ். இவர்களுக்குக் காதல் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளதாகச் சொல்கிறார்கள் அப்பகுதியினர்.

இந்நிலையில், கடந்த 6-ம் தேதி அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு வந்த சுஷ்மிதா பின்னர், விகாஷைத் தேடிய போது வீட்டிலுள்ள தண்ணீர்த் தொட்டிக்குள் மூழ்கிக் கிடந்ததாகவும் குழந்தையைத் தூக்கிப் பார்த்தபோது ஏற்கெனவே உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.

அமல்ராஜ், சுஷ்மிதா
அமல்ராஜ், சுஷ்மிதா

இதுகுறித்து காரியாப்பாட்டி காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து அமல்ராஜ், சுஷ்மிதா ஆகியோரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், பெற்றோரே குழந்தையைத் தண்ணீர்த் தொட்டிக்குள் மூழ்கடித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து போலீஸார் தரப்பில் பேசினோம், ``தண்ணீர்த் தொட்டிக்குள் மூழ்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாகத் தொடர்ந்து அமல்ராஜ், சுஷ்மிதாவிடம் விசாரணை நடத்தி வந்தோம். இந்த நிலையில், இருவரும் குழந்தையைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டு சரணடைந்தனர். 2018-ல் சுஷ்மிதா, காரியாப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோதே, அமல்ராஜுவைக் காதலித்துள்ளார். இவர்களது பழக்கத்தால், சுஷ்மிதா கருவுற்றார். இந்தத் தகவலை அறிந்த பள்ளி நிர்வாகம் சுஷ்மிதாவின் பெற்றோரை அழைத்து டி.சியைக் கொடுத்து அனுப்பிவிட்டது.

உயிரிழந்த  விகாஷ்
உயிரிழந்த விகாஷ்

இதன்பின்னர் இரண்டு பேரின் வீட்டிலும் பேசி கல்யாணம் செய்துவைத்தனர். சுஷ்மிதா, 7 மாதக் கர்ப்பமாக இருந்த நிலையில்தான் கல்யாணம் நடந்தது. மகன் பிறந்து 6 மாதம் வரை அமல்ராஜ் குழந்தையைப் பார்க்கச் செல்லவில்லை. `இந்தக் குழந்தை எனக்குப் பிறக்கவில்லை. குழந்தையைக் கொன்றுவிடு’ எனக் கூறி சுஷ்மிதாவிடம் சண்டை போட்டுக்கொண்டே இருப்பாராம் அமல்ராஜ்.

குழந்தையால், இருவரும் மூன்று முறை பிரிந்துள்ளனர். இந்த நிலையில்தான், ”குழந்தையைக் கொன்றால்தான் உன்கூட தொடர்ந்து வாழ்வேன். உனக்கு நான் முக்கியமா.. குழந்தை முக்கியமா' எனச் சொல்லி கடந்த சில நாள்களாக இருவருக்குள்ளும் பிரச்னை நிலவி வந்துள்ளது. சுஷ்மிதாவின் குடும்பத்தினரும் ‘உன் புருசன் சொல்றதைக் கேட்டு நடந்துக்கோ’ எனச் சொல்ல, கடந்த 6-ம் தேதி, பகல் 1 மணிக்கு கணவர் அமல்ராஜ் முன்பே, தண்ணீர்த் தொட்டிக்குள் குழந்தையை மூழ்கடித்துக் கொன்றுள்ளார்.

காரியாப்பட்டி காவல் நிலையம்
காரியாப்பட்டி காவல் நிலையம்

அதன்பிறகு, அருகில் உள்ள ஆஸ்பத்திருக்குப் போவதுபோல போக்குக் காட்டிவிட்டு, குழந்தை தண்ணீர்த் தொட்டிக்குள் மூழ்கி உயிரிழந்ததாகக் கூறி நம்ப வைத்துள்ளார்” என்கின்றனர்.

இதுகுறித்து குழந்தை விகாஷின் தாய் சுஷ்மிதா, தந்தை அமல்ராஜ், சுஷ்மிதாவின் தந்தை சூசை மாணிக்கம், சுஷ்மிதாவின் மாமியார் விமலா, மாமனார் மரியலூகாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு