தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேலமுடிமண் கிராமத்தைச் சேர்ந்தவர் லெட்சுமண பெருமாள். இவர் மனைவி கற்பகம். இவர்களுக்கு செல்வகுமார், கார்த்திக் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். செல்வகுமார் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்போது விடுமுறையில் வந்திருக்கும் அவர், சாத்தூரில் உள்ள தன் மனைவி ஜெயந்தியின் இல்லத்தில் வசித்துவருகிறார். கார்த்திக் சொந்த ஊரிலேயே ஆட்டோ ஓட்டிக்கொண்டு தன் மனைவி மாலினி, இரண்டு வயது பெண் குழந்தை, பெற்றோருடன் வசித்துவருகிறார்.

ஆட்டோ தொழில் சரியாக இல்லாததால், வேறு தொழில் தொடங்குவதற்காக தன் தாயிடம் ஒன்றரை லட்சம் ரூபாய் பணமும், மூன்றரை சவரன் தங்க நகையும் வாங்கியிருந்தாராம் கார்த்திக். இந்த விவகாரம் செல்வகுமாருக்கு தெரிந்துள்ளது. அதையடுத்து, ராணுவத்திலிருந்து விடுமுறையில் வந்தநாள் முதல் தனக்கும் ஒன்றரை லட்சம் ரூபாய் பணமும், தங்க நகையும் வேண்டும் என தாய், தந்தையிடம் கடந்த சில நாள்களாக கேட்டு சண்டை போட்டு வந்திருக்கிறார். இந்த நிலையில், கொப்பம்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு கோயில் திருவிழாவுக்கு கார்த்திக், அவர் மனைவி மாலினி, தாயார் கற்பகத்துடன் சென்றிருந்தார். அப்போது செல்வகுமார் நகை, பணம் குறித்து வீட்டில் தனியாக இருந்த தந்தை லெட்சுமணபெருமாளிடம் சண்டை போட்டிருக்கிறார். அப்போது அவர் தந்தை, தன்னிடம் தற்போது பணம் இல்லை என்றும்,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இருந்த பணத்தை தம்பியிடம் கொடுத்து விட்டதாகவும் கூறினாராம். அதற்கு, `தம்பியைக் கொலைசெய்யப் போறேன்' என தந்தை லெட்சுமணபெருமாளிடம் செல்வகுமார் போனில் சொல்லியுள்ளார். உடனே, லெட்சுமணபெருமாள், கார்த்திக்கிற்கு போன்செய்து, `அண்ணன் உன்னைக் கொலை செய்யப் போறேன்னு சொல்லுறான். ஜாக்கிரதையா இருப்பா' எனக் கூறியிருக்கிறார். இதையடுத்து கார்த்திக், அவர் மனைவி கற்பகம், உறவினர்கள் சிவா என்ற சுடலைமணி, கண்ணன் ஆகிய 4 பேரும் கொப்பம்பட்டியிலிருந்து மேலமுடிமண் கிராமத்திற்கு வந்திருக்கின்றனர்.

அப்போது கார்த்திக்கிற்கும் செல்வகுமாருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. ஆத்திரமடைந்த செல்வகுமார் கார்த்தியின் மார்பு, வயிறு ஆகிய இடங்களில் கத்தியால் குத்தினார். தடுக்கமுயன்ற கார்த்திக்கின் உறவினர் கண்ணனுக்கும் கத்திக்குத்து விழுந்தது. அதையடுத்து, உறவினர்கள் படுகாயமடைந்த கார்த்திக்கை காரில் ஏற்றிக்கொண்டு ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகக் கூறினர்.
போலீஸார் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு, செல்வகுமாரைக் கைதுசெய்தனர். நகை, பணத்திற்காக அண்ணனே தம்பியைக் கொலைசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.