Published:Updated:

`பணத்தைப் பார்த்ததும் ஆசை வந்துவிட்டது' - பொங்கல் பரிசு வாங்க வந்தவர் சிறைக்குச் சென்றதன் பின்னணி!

பொங்கல் பரிசுத்தொகையைத் திருடிய முகமது சமீர்

பொங்கல் பரிசுத்தொகையான ஆயிரம் ரூபாயை வாங்கச் சென்ற இடத்தில் 48,000 ரூபாயைத் திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

`பணத்தைப் பார்த்ததும் ஆசை வந்துவிட்டது' - பொங்கல் பரிசு வாங்க வந்தவர் சிறைக்குச் சென்றதன் பின்னணி!

பொங்கல் பரிசுத்தொகையான ஆயிரம் ரூபாயை வாங்கச் சென்ற இடத்தில் 48,000 ரூபாயைத் திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
பொங்கல் பரிசுத்தொகையைத் திருடிய முகமது சமீர்

சென்னை, ரெட்ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் கோமதி (38). இவர், திருவல்லிக்கேணியிலுள்ள கூட்டுறவு பண்டக சாலையில் பணிபுரிந்துவருகிறார். கடந்த 12.1.2023-ம் தேதி கோமதி, பொங்கல் பரிசுத்தொகையை பொதுமக்களுக்கு வழங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவர் வைத்திருந்த பணம் 48,000 ரூபாய் திருட்டுப்போனது. அதனால் அதிர்ச்சியடைந்த கோமதி, பல இடங்களில் தேடிப்பார்த்தும் பணம் கிடைக்கவில்லை.

முகமது சமீர் நிஜாமி
முகமது சமீர் நிஜாமி

இதையடுத்து கோமதி, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து அங்கிருந்த சிசிடிவி கேமராப் பதிவுகளை ஆய்வுசெய்தனர். அப்போது, கோமதி வேலை பார்க்கும் கூட்டுறவு பண்டக சாலைக்கு பொதுமக்கள் பொங்கல் பரிசு வாங்க வந்திருந்தனர். அதனால் கூட்டம் அலைமோதியது. அந்தச் சமயத்தில் பொங்கல் பரிசு வாங்க வந்த ஒருவர், கோமதி வைத்திருந்த பணத்தைத் திருடும் காட்சி பதிவாகியிருந்தது. மேலும் அவர், பணத்தைத் திருடிக்கொண்டு பைக்கில் தப்பிச் செல்லும் காட்சியும் பதிவாகியிருந்தது.

அதனால் பைக்கின் பதிவு நம்பர் அடிப்படையில் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் அவர் சென்னை, அண்ணாசாலை, தாயார் சாகீப் தெருவைச் சேர்ந்த முகமது சமீர் நிஜாமி (50) எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் போலீஸார் விசாரித்தபோது, ``சம்பவத்தன்று பொங்கல் பரிசு வாங்க கூட்டுறவு பண்டக சாலைக்குச் சென்றிருந்தேன். அப்போது கட்டுக்கட்டாகப் பணத்தை ஊழியர் வைத்திருந்தார். அதைப் பார்த்ததும் திருட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதனால், கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, பணத்தை யாருக்கும் தெரியாமல் திருடினேன்.

பணம்
பணம்

பின்னர், என்னுடைய ரேஷன் கார்டுக்குரிய பொங்கல் பரிசுத்தொகையான ஆயிரம் ரூபாய் மற்றும் பொருள்களை வாங்கிக்கொண்டு வீட்டுக்குச் சென்றுவிட்டேன்" எனத் தெரிவித்திருக்கிறார். அதையடுத்து அவரைக் கைதுசெய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.