Published:Updated:

சென்னை: `அனுமதியில்லாத 63 மசாஜ் சென்டர்கள்... போலீஸார் அதிரடி சோதனை; 1 பெண் கைது, பலர் மீட்பு!'

சென்னையில் மசாஜ் சென்டர்களில் நடந்த அதிரடி சோதனையில் 63 மசாஜ் சென்டர்கள் அனுமதி இல்லாமல் இயங்கியது தெரியவந்திருக்கிறது.

சென்னை விபசார தடுப்புப் பிரிவில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர்கள் சாம்வின்சென்ட், சரவணன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இவர்கள் இருவரும் விபசார தடுப்புப் பிரிவில் பணியாற்றிய காலகட்டத்தில் முக்கியமான பாலியல் புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. குறிப்பாக பாலியல் புரோக்கர்கள் பூங்கா வெங்கடேசன், டெய்லர் ரவி ஆகியோரிடமிருந்து லட்சக்கணக்கில் பணத்தை வாங்கிக்கொண்டு எதையும் கண்டுகொள்ளவில்லை என லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் மீதும் குற்றம் சுமத்தியிருக்கின்றனர்.

மசாஜ்
மசாஜ்

இந்த நிலையில், சென்னையிலுள்ள மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் நடப்பதாக உளவுத்துறை போலீஸார் ரிப்போர்ட் அனுப்பினர். அதன்படி விசாரணை நடத்த சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இதையடுத்து சென்னையில் 12 போலீஸ் துணை கமிஷனர்களும் களத்தில் இறங்கினர். தங்களின் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியிலிருக்கும் மசாஜ் சென்டர்களுக்குச் சென்று சோதனை நடத்தினர். மொத்தம் 151 மசாஜ் சென்டர்களில் சோதனை நடத்தப்பட்டது. அவற்றில் 63 மசாஜ் சென்டர்கள் மாநகராட்சியின் அனுமதியின்றி செயல்படுவது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பட்டியலில் இருக்கும் மசாஜ் சென்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி சென்னை போலீஸார் மாநகராட்சி அதிகாரிகளுக்குக் கடிதம் அனுப்பியிருக்கின்றனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``மசாஜ் சென்டர்களில் சில ரகசிய வார்த்தைகள் பின்பற்றப்படுகின்றன. குறிப்பாக வாடிக்கையாளர்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த ரகசிய வார்த்தைகள் தெரியும். புதிதாக வருபவர்களுக்கு மசாஜ் மட்டுமே செய்யப்படுகிறது. அதனால்தான் காவல்துறைக்கு எந்தவிதத் தகவலும் கிடைப்பதில்லை. மசாஜ் சென்டர்களுக்கு மாநகராட்சி அனுமதி வழங்கிவருகிறது. காவல்துறையில் என்.ஓ.சி மட்டும்தான் கொடுக்கப்படுகிறது. மேலும் மசாஜ் சென்டர்களில் ஏற்படும் பழக்கத்தை வைத்துக்கொண்டு வெளி இடங்களில்தான் பாலியல் தொழில் ரகசியமாக நடத்தப்படுவதாகவும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

கைது
கைது

சென்னையில் இருக்கும் அனைத்து மசாஜ் சென்டர்களிலும் அதிரடியாக ஆய்வு நடத்தப்பட்டிருப்பதால், பாலியல் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு ஒருவித அச்சம் ஏற்பட்டிருக்கும். தொடர்ந்து அனைத்து மசாஜ் சென்டர்களையும் கண்காணித்துவருகிறோம். இன்னொரு முக்கியத் தகவலும் கிடைத்திருக்கிறது. காவல்துறையில் இருக்கும் சிலரும் மறைமுகமாக இந்தத் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களின் விவரங்கள் ரகசியமாகச் சேகரிக்கப்பட்டு உயரதிகாரிகளின் கவனத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றன. தற்போது நடந்த சோதனையில் கீழ்ப்பாக்கம் பகுதியில் ஒரு மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடந்தது தெரியவந்திருக்கிறது. அந்த மசாஜ் சென்டரில் பணியாற்றிவந்த பெண் ஒருவரைக் கைதுசெய்து, அங்கிருந்த மற்ற பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்திருக்கிறோம்" என்றனர்.

நாமக்கல்: போர்டில் `ஸ்பா மசாஜ்’; உள்ளே பாலியல் தொழில்! - அதிரடிகாட்டிய போலீஸார்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு