Published:Updated:

சென்னை: போக்குவரத்துக் காவலரின் கன்னத்தில் அறைந்த பெண்! - ஆண் நண்பருடன் சிக்கியது எப்படி?

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம்

சென்னையில் போக்குவரத்துக் காவலரின் கன்னத்தில் அறைந்த பெண் அதிகாரியையும், அவரின் ஆண் நண்பரையும் போலீஸார் கைதுசெய்தனர்.

சென்னை: போக்குவரத்துக் காவலரின் கன்னத்தில் அறைந்த பெண்! - ஆண் நண்பருடன் சிக்கியது எப்படி?

சென்னையில் போக்குவரத்துக் காவலரின் கன்னத்தில் அறைந்த பெண் அதிகாரியையும், அவரின் ஆண் நண்பரையும் போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம்

சென்னை நுங்கம்பாக்கம் போக்குவரத்துப் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், ``நான் கடந்த 4.12.2022-ம் தேதி அதிகாலை 1:15 மணியளவில் நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் செல்லும் வழியில் சொக்கலிங்கம் தெரு சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தேன். அப்போது தலைமைக் காவலர் நந்தகுமார், ராமமூர்த்தி ஆகியோரும் என்னுடன் பணியிலிருந்தனர். அப்போது TN 01 BP1926 என்ற பதிவு எண்கொண்ட வெள்ளை நிற கார் ஒன்று அந்த வழியாக வந்தது. அந்த காரை பெண் ஒருவர் ஓட்டி வந்தார். காரில் ஆண் ஒருவரும் அமர்ந்திருந்தார்.

போக்குவரத்து போலீஸார் சோதனை
போக்குவரத்து போலீஸார் சோதனை

அந்த காரை நிறுத்தி பிரீத்திங் சோதனைக்காக அந்தப் பெண்ணை ஊதச் சொன்னேன். அப்போது அவர் மறுத்து காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் 2:16 மணியளவில் அந்தப் பெண் ஓட்டுநர், பிரீத்திங் அனலைசரில் ஊதியபோது அவர் மது அருந்தியிருப்பது தெரியவந்தது. எனவே மது போதையில் வாகனத்தை ஓட்டியதற்காக அபராதம் விதிக்க அவரிடம் டிரைவிங் லைசென்ஸைப் பெற்று இ சலானில் விவரத்தைப் பதிவுசெய்தேன். அப்போது, அவரின் பெயர் ஷெரீன் என்றும், சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.

இதையடுத்து அவருடன் வந்த ஆணிடமும் பிரீத்திங் அனலைசரில் ஊதச் சொன்னபோது அவர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பின்னர் அவர் பிரீத்திங் அனலைசரில் ஊதியபோது அவரும் மது அருந்தியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் குடிபோதையில் இருந்ததால் காரைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்தோம். இதற்காகக் காவலர் ராமமூர்த்தி, அந்தப் பெண்ணை காரைவிட்டு கீழே இறங்கச் சொன்னார். அதனால் ஆத்திரமடைந்த ஆண் நபர், போலீஸாரை அவதூறாகப் பேசியதோடு, `நாங்க யாருன்னு தெரியுமா, உங்க தொப்பியை கழட்டி வேலையை காலி செய்துவிடுவோம்' என மிரட்டினார். இந்தச் சமயத்தில் காவலர் ராமமூர்த்தி, காரைப் பறிமுதல் செய்ய முயன்றபோது மதுபோதையிலிருந்த ஷெரீன், காவலரின் சீருடையைப் பிடித்து இழுத்து, கையால் அவரின் கன்னத்தில் ஒங்கி அறைந்தார்.

கைது
கைது

காரில் வந்த ஷெரீனும், அவரின் ஆண் நண்பரும் செய்த ரகளையால் அங்கு போக்குவரத்து நெரில் ஏற்பட்டு பொதுமக்கள் கூடினர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி காரை ஷெரீன் எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டார். இதையடுத்து அரசுப் பணியிலிருந்த போலீஸாரைப் பணி செய்யவிடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்தவர்களின் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 341, 294 (பி), 323, 353, 506(1) ஆகியவற்றின் கீழ் தேனாம்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் வழக்கு பதிவுசெய்து விசாரித்தார். பின்னர், போக்குவரத்து போலீஸார் கொடுத்த தகவலின்படி ஷெரீனா, அவரின் ஆண் நண்பரை போலீஸார் கைதுசெய்தனர். காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``மதுபோதையில் காரை ஓட்டிவந்த ஷெரீன், ஃபைனான்ஸ் நிறுவனத்தில் அதிகாரியாக இருக்கிறார். அவரின் ஆண் நண்பர் விக்னேஷ். இவர் மும்பையில் விமான நிலையத்தில் ஊழியராக இருக்கிறார். இவர்கள் இருவரும் சென்னையிலுள்ள ஹோட்டலில் மது அருந்திவிட்டு வந்தது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம். போக்குவரத்து போலீஸாரிடமிருந்து தப்பிய இருவரையும் சில மணி நேரத்திலேயே பிடித்துவிட்டோம்" என்றனர்.